நூல் : சிறையில் ஒளிரும்                 நட்சத்திரங்கள்
ஆசிரியர் : மதுரை நம்பி

மதுரை சிறைச்சாலையில் காவல் அதிகாரியாக பணிபுரிந்த மதுரை நம்பி அவர்களின் சிறை அனுபவங்களை சொல்கிறது இந்நூல்.31 அத்தியாயங்கள் கொண்ட இந்நூலில் சிறைக்குள் இருக்கும் மனிதர்களின் வாழ்வு, அவர்களின் சுக, துக்கங்கள், சிறை கொண்டாட்டங்கள், கட்டுப்பாடுகள், போராட்டங்கள், மனித உரிமை மீறல்கள் என அனைத்து தளங்களிலும் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை தொகுத்துள்ளார் ஆசிரியர். பல வருட அனுபவங்களை மனதிலேயே பூட்டி வைத்திருந்தவர், தன் தோழர்களின் உந்துதலால் அவற்றை நூலாக எழுதி வெளியிட்டுள்ளது சிறப்பு.

காவலர்கள் நலன் கருதி இவர் வைத்த பல கோரிக்கைகளால் இரண்டு முறை சஸ்பண்ட் செய்யப்பட்டவர். கைதிகளிடம் மிக நெருக்கமான பிணைப்பை ஏற்படுத்திக் கொண்டு அவர்களுக்கு பல உதவிகளும், தேவைகளையும் நிறைவேற்றியுள்ளார்.அதோடு அவர்களின் மனதில் உள்ள பாரங்களை இறக்கும் இடமாகவும் விளங்கியுள்ளார்.சிறைக்குள் மதுரை நம்பி அவர்கள் ஒரு அதிகாரியாக இல்லாமல் சக மனிதருக்கான இயல்போடு கைதிகளை அணுகுகியுள்ளார்.அதுவே இந்நூலுக்கு அடித்தளமாக அமைந்துள்ளது எனலாம்.

சிறை நிரப்பும் போராட்டம் பற்றி பத்திரிக்கைகளில் செய்தியாகவே மட்டும் படித்து வந்த நமக்கு அதன் நடைமுறை செயல்பாடு எப்படி இருக்கும் என்பதை விளக்கி இருப்பது சுவாரசிய தகவல்கள். இந்தி எதிர்ப்பு போராட்டம், ஆசிரியர்கள் போராட்டம், பேருந்து கட்டண உயர்வு எதிர்ப்பு போராட்டம் என தமிழகத்தில் நடந்த முக்கிய போராட்டங்களின் வரலாற்றுத் தொகுப்பாகவே ஆசிரியர் எழுதியுள்ளார்.

மற்ற கட்சியினருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் உள்ள வேறுபாடுகளை இங்கு அறியமுடிகிறது. சிறையில் கம்யூனிஸ்ட் இயக்கத்தினரின் ஒழுங்கு பிரமிப்பு அடையவைக்கிறது. சிறை காவலர்களின் அடக்குமுறையை எதிர்த்தும், சிறை கைதிகளுக்கு கிடைக்க வேண்டிய அடிப்படை உரிமைகளை மீட்டு கொடுக்க போராடுவதும் மட்டுமின்றி சிறை காவலர்களின் பணி நேரத்தை குறைக்கவும் கோரிக்கை வைத்து போராடியது தன்னலம் கருதாது பொதுநலத்தோடு செயல்படும் அவர்களின் மாண்பை எடுத்துக்கூறுகிறது.செவ்வியக்கத்தின் செயல்பாடுகளையும், தோழர் பி. ராமமூர்த்தி அவர்களை பற்றிய தகவல்களும் சிறப்பு.அவருடைய மகள் ஆர். வைகை அவர்கள், மதுரை சிறைச்சாலையை ஆய்வு செய்து மனித உரிமை ஆணையத்துக்கு அளித்த அறிக்கையின் பலனாக தற்போது தமிழ்நாட்டில் உள்ள சிறைகளில் கூடுதலான கழிப்பறை, தரமான உணவு  என பல வசதிகள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சிறைத்துறையும் காவல்துறையும் வெவ்வேறு அதிகாரங்களுக்கு உட்பட்டது என்பதை இக்கட்டுரையின் வழி புரிந்துகொள்ள முடிகிறது. ஒவ்வொருவரும் தங்கள் அதிகாரத்தை வைத்துக் கொண்டு மற்றவர்களோடு உரசிக் கொள்கின்றனர்.கைதிகளை சிறைத்துறைக்கு ஒப்படைக்க வரும் காவல்துறையினர் பல சிக்கல்களை சந்திக்கின்றனர். ஆவணங்களில் இருக்கும் பல பிழைகளை காரணம் காட்டி காவல்துறையினரை அலைக்கழிக்கும் செயலை சிறைத்துறையினர் செய்கின்றனர். சிறைத்துறையினரின் தனிப்பட்ட பிரச்சனைகளுக்காக காவல் நிலையம் செல்லும் பொழுது அங்கு அவர்களை பழிதீர்க்க காவல்துறை காத்துக்கொண்டிருக்கும்.இப்படியாக இவர்களின் நிழல் யுத்தம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

தேசிய தலைவர்கள் தங்கி இருந்த அறைகளை அவர்களது நினைவுச் சின்னமாக பராமரித்து வருகிறது சிறைத்துறை. ஆனால் சிறைக்கு வரும் கைதிகள் தேசிய தலைவர்களை, தங்கள் சாதித் தலைவர்களாக கொண்டாடி, சாதிசண்டைக்கு வித்துடுகின்றனர். இதனால் தலைவர்களின் புகைப்படங்கள், ஓவியகங்கள் என அனைத்தையும் அப்புறப்படுத்த வேண்டிய நிலைக்கு சிறைத்துறை தள்ளப்படுகிறது. வெளியுலகம் மட்டுமின்றி சிறைக்குள்ளும் சாதி பாகுபாடு தலைவிரித்தாடுகிறது என்பதை இதன் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது.

மற்றவர்கள் செய்யும் குற்றத்திற்கான தண்டனையை தான் ஏற்று பலமுறை சிறை சென்ற பால்ச்சாமி தேவர், எப்பொழுதும் நியாயத்தின் பக்கம் இருந்து போராடும் தோழர் புரட்சி மணி, திருட்டுத் தொழிலை அகிம்சை பாதையாக நினைத்து தன்னை நல்லவனாக நினைத்துக் கொண்டு சிறை செல்வதை வழக்கமாக கொண்ட கைதி ஐயப்பன், மனிதர்களிடம் காட்டும் அன்பை விட பறவைகளிடம் ஏற்படும் பரிவு ஒரு மனிதனின் 14 ஆண்டு சிறை வாழ்க்கையை அர்த்தப்படுத்துகிறது என்பதை புரிய வைத்த நாகு கோனார், தன் சொந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்ள தற்கொலையை ஓர் ஆயுதமாக பயன்படுத்தி மரத்திலோ, டவரிலோ ஏறி மிரட்டி காரியம் சாதித்து இறுதியில் மரணத்தை தழுவும் டவர் மாணிக்கம்,சிறை வளாகத்தில் பிள்ளையார் கோயில் கட்டிய சாமி ஏட்டைய்யா,இலக்கியத்தின் மீது பற்று கொண்ட காவல் கண்காணிப்பாளர் கருப்பண்ணன் என கைதிகள் மட்டுமின்றி சிறை காவலர்களின் சிறை வாழ்க்கையையும் எடுத்துரைக்கிறார் ஆசிரியர் மதுரை நம்பி.

சிறை ஒரு மனிதனின் மனநலத்தை எந்த அளவு பாதிக்கிறது என்பதை வீரணன் மற்றும் கம்யூனிஸ்ட் கந்தசாமி போன்றவர்களால் நாம் புரிந்துகொள்ளமுடிகிறது.மனநோய் அறிகுறி உள்ளவர்களை மேலும் தனிமைப்படுத்தி அதை மிகுதியாக்கும் வாய்ப்பை சிறை வாழ்க்கை தந்தாலும், சக சிறை கைதிகளின் உதவியை கொண்டு அவர்கள் மீண்டு தனிமை சிறையில் இருந்து பொது சிறைக்கு மாற்றம் அடைவது நெகிழ்ச்சி அளிக்கிறது.

ஊடகங்களில் மட்டுமே கேட்டு அறிந்த பல குற்ற சம்பவங்களும், அதில் ஈடுபட்டவர்களை பற்றியும் முழுமையாக அறிந்து கொள்ள முடிகிறது. அவர்களின் பின்னணி,கூட்டாளிகளை பற்றிய விபரங்கள் என அனைத்தையும் அவர்களிடம் நேரடியாக கேட்டு ஆசிரியர் எழுதியுள்ளார்.

1988 ஆண்டில் பரபரப்பாக பேசப்பட்ட ஆட்டோ சங்கரின் கொடூர பின்னணியும், அவன் சிறையில் இருந்து தப்பித்த கதையும் சுவாரசியம். கொடூர மனதோடு இருக்கும் அவன் சினிமா, பக்தி பாடல்களை இனிமையாக பாடக்கூடிய திறமையுள்ளவன் என்பது எதிர்பாராதது.அதுபோல் ராஜிவ் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளி ஒற்றைக்கண் சிவராசனின் கூட்டாளிகளை பற்றிய அனுபவ பதிவுகளும் சிறப்பு. ஆசிரியருக்கும் அவர்களுக்கும் இடையே நடந்த கடவுளை பற்றிய உரையாடல் நம்மை சிந்திக்க வைக்கிறது. தன் மகனை கொன்று சிறை தண்டனை அனுபவித்து இறுதியில் தண்டனை காலத்திலேயே தன் மூச்சை நிறுத்திக்கொண்ட எழுத்தாளர் சௌபா அவர்களின் கதையை அதிர்ச்சியும், நெகிழ்ச்சியுமாக கடக்க வேண்டியுள்ளது.

சிறை கைதிகளுக்கு உள்ளே நடக்கும் ஓரின சேர்க்கை சிக்கல்களை பற்றியும் ஒரு பார்வை நமக்கு கிடைக்கிறது. ஓரின சேர்க்கையாளர்களை தனியாகப் பிரித்து வைக்க வேண்டும் என்ற சிறை நடைமுறை புத்தகத்து விதியை தவறாக புரிந்து கொண்டு அவர்களை தனிமைப்படுத்தி தண்டிக்கிறது சிறைத்துறை. இதனால் ஏற்படும் குழப்பங்கள், அவர்களை உளவியல் ரீதியாக மேலும் பாதிக்கிறது. அதோடு திருநங்கையாக வரும் கைதிகளின் நிலையையும் விவரித்துள்ளார் ஆசிரியர்.

சிறை மனிதர்களின் அனுபவங்கள் ஒரு பக்கம் என்றால் சிறை நடைமுறை கட்டுப்பாடுகள் பற்றி வாசிக்கையில் மிக அதிர்ச்சியாக உள்ளது. இரவு மலம், சிறுநீர் கழிக்கும் சிறை கைதிகளுக்கு மண்சட்டி கொடுக்கும் நடைமுறையை அறியும் பொழுது வேதனை ஏற்படுகிறது. 1999 வரை சில சிறைச்சாலைகளில் இது நடைமுறையில் இருந்திருக்கிறது என்பதை நம்ப முடியவில்லை.

சிறைகைதிகளின் நிலை மட்டுமின்றி சிறைத்துறை காவலர்களின் நிலையையும் எடுத்துரைக்கிறது இந்நூல். அவர்களின் பணிநேரம் 8 மணி நேரமாக இல்லாமல் நினைத்த நேரம் பணியில் ஈடுபட வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கின்றனர். தினமும் கைதிகளின் எண்ணிக்கை சரியாக இருந்தால் மட்டுமே அந்த நாளை அதிக பணியில்லாமல் அவர்களால் கடக்க முடிகிறது. சிறை நிரப்பும் போராட்டங்களில் சிறைத்துறை காவலர்களின் பணிச்சுமை கூடுவதையும் எடுத்துக்காட்டத் தவறவில்லை ஆசிரியர். இது போன்ற நேரங்களில் அவர்களின் ஓய்வு நேரத்தையும், விடுப்புகளையும் ரத்து செய்வதால் அவர்கள் மனதளவில் பெரிதளவும் பாதிகின்றனர்.

திரைப்படங்களில் மட்டுமே பார்த்த சிறைச்சாலை காட்சிகளை நேரில் பார்ப்பது போன்ற உணர்வை தருகிறது இந்நூல். நாம் அறிந்திடாத பல புதிய தகவல்களை, எளிய நடையில் எழுதி இருப்பதால் எந்தவித தொய்வும் இல்லாமல் வாசிக்க முடிகிறது.ஒவ்வொரு அத்தியாயமும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையாதாக உள்ளது. இந்நூலை ஒரு வரலாற்று ஆவணமாகவே கருதலாம்.சமூகத்தில், குற்றவாளி என்ற அவபெயரோடு வெளிவரும் கைதிகள், சிறைவாழ்க்கைக்கு பின் என்னவாகின்றனர் என்பதையும் தொடர்ந்து கண்காணித்து எழுதி இருப்பது ஆசிரியரின் அன்பை எடுத்துக்காட்டுகிறது. நமக்கு அவர் மீது ஒரு பெரும் மதிப்பையும் ஏற்படுத்துகிறது என்பது மிகையல்ல.நன்றி.

Comments