நூல் : கற்றாழை

ஆசிரியர் : ஐ. கிருத்திகா
காலச்சுவடு பதிப்பகம்
Ph: 91-4652-278525
விலை : Rs. 140


பெண்களின் மன உணர்வுகளை பிரதிபலிக்கும் கதைகள் பல வாசித்திருந்தாலும், சில கதைகள் மட்டுமே மனதிற்கு நெருக்கமாக அமைந்து விடுகிறது. அப்படி அமைந்து விட்டது 'கற்றாழை ' சிறுகதை தொகுப்பு. ஒன்பது கதைகள் கொண்ட இத்தொகுப்பை எழுதிய ஐ. கிருத்திகா அவர்கள் திருவாரூர் மாவட்டம் மணக்கால் அய்யம்பேட்டையை சொந்த ஊராகக் கொண்டவர். தற்போது கோவையில் வசித்து வரும் அவர் இதுவரை மூன்று சிறுகதை தொகுப்புகள் வெளியிட்டுள்ளார். ' கற்றாழை ' இவரது நான்காவது சிறுகதை தொகுப்பு.

குடும்பம், பிள்ளைகள் என்று வீட்டிலேயே பெரும்பாலான காலத்தை கழிக்கும் பெண்களின் நுண்ணுணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் அனைத்து கதைகளும் அமைந்துள்ளது. நமக்கோ, நம் தோழிகளின் வாழ்விலோ நடந்தேறிய நிகழ்வுகளை அச்சு பிசக்காமல் ஒவ்வொரு கதையும் சொல்கிறது. எதிலுமே மிகைதன்மை இல்லாமல் உண்மைக்கு நெருக்கமாக அமைந்துள்ளது. பெண்களே சொல்ல கூச்சப்படும் அவர்களின் அந்தரங்க பிரச்சனைகளையே சில கதைகளின் மையமாக கொண்டு எழுதியுள்ளார் ஆசிரியர்.

குழந்தை பெற்ற வீட்டின் பால் கொச்சை வாடையையும், பிசுபிசுத்து தொடையை நனைக்கும் வெள்ளைப்படுதலின் நாற்றத்தையும், மகளின் திருமண வீட்டில் அனைத்து வேலையையும் இழுத்துப் போட்டு செய்யும் அம்மாவின் வியர்வை கசகசப்பையும் எழுத்தில் உணர வைக்க முடியுமா என்ற பிரமிப்பை இவரது எழுத்து ஏற்படுத்துகிறது.

சிறிய மார்பகங்களை கொண்ட ஒரு பெண்ணிற்கு மற்ற பெண்களிடம் ஏற்படும் பொறாமை அவளது மனச்சமநிலையை எந்தளவு குழைக்கிறது என்பதை 'கற்றாழை ' ரஞ்சனி உணர்த்துகிறார். அதன் காரணமாக அவள் செய்யும் செயல்கள் நிஜத்தில் பெரும்பாலான பெண்கள் செய்வது தான். அதை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கும் சமூகத்திற்கு அவளது வேதனை புரியாது. அதோடு நிதமும் தன் சூட்டு உடம்பின் காரணமாக வெளியேறும் white discharge க்கு நாப்கினும் வைக்க முடியாமல், பாவாடையில் துடைத்து அதன் நாற்றத்துடன் அலுவலகம் பயணிக்கும் அவளை பல பெண்களின் மறுபிம்பமாகவே பார்க்கமுடிகிறது.பொது இடங்களில் திடீரென்று உணரப்படும் ஈர பிசுபிசுப்பை உதிரப்போக்கா இல்லை வெள்ளை படுத்தலா என மனதுக்குள் ஏற்படும்  கலவரத்தை சொல்லில் அடக்கமுடியாது. அது பெண்கள் மட்டுமே அறிந்த வலி.அந்த வலியை எழுத்தின் மூலமாக நமக்கு கடத்துகிறார் கிருத்திகா.

மனதளவில் பாதிப்புக்கு உள்ளான 14 வயது மகனை வளர்க்கும் தாயை பற்றிய கதை 'கடன்'. முதல் குழந்தையே மனவளர்ச்சி இல்லாத குழந்தையாக இருக்கும் பொழுது அங்கு தாய்க்கும், தந்தைக்கும் அவனை வளர்ப்பதே பெரும் பொறுப்பாக அமைந்துவிடுகிறது. உணவு, தூக்கம், சிறு ஆசைகள் என எதன் மீதும் நாட்டம் இல்லாது வீட்டிலேயே முடங்கி விடுகிறது வாழ்க்கை.பதின்மவயதின் ஆரம்பக்கட்ட வளர்ச்சியை சுமந்து நிற்பவனை இச்சமூகம் ஒரு காட்சிப்பொருளாக பார்ப்பதை கண்டு பரிதவித்து போகும் அந்த தாய்க்கு இதற்கு மேல் ஒரு கடனை கடவுள் தந்துவிட முடியுமா என்ற கேள்வி நம் மனதில் எழாமல் இல்லை.அதோடு முடியவில்லை போராட்டம் என்பதை போல் கதையின் இறுதி பத்தி இன்னும் கனத்தைக் கூட்டுகிறது.

பெண்களுக்கு மட்டுமே தாய்மையுணர்வு இருக்குமா.. இல்லை ஆண்களுக்கும் இருக்கும் என்பதை 'அவனொரு குழந்தை வளர்க்கிறான்' கதையில் கதிரேசன் உணர்த்துகிறான். நந்தியாவட்டை செடியில் துளிர்க்கும் பூக்களை ஒரு குழந்தை போல் உறவாடி ரசிக்கும் கதிரேசன், தினமும் அதில் எத்தனை பூக்கள் பூக்கின்றது என்பதை எண்ணி சிறுபிள்ளை போல் குதுகலிக்கும் மனம் ஒரு தாய்மையுணர்வை கொண்டது. அதை பார்த்து அவன் மனைவி ரசிக்கும் இடம் கவிதை எனலாம். மொட்டுகள் உருவாகும் போது கதிரேசனின் குரலில் ஒரு அவுன்ஸ் கனிவு கூடி விடுகிறது என்பதிலேயே அவன் அந்த செடியின் மீது கொண்ட பற்றை புரிந்து கொள்ள முடிகிறது.அந்த வீட்டில், அவர்களின் குழந்தையோடு அந்த செடியும் சேர்ந்து வளர்கிறது என்ற அழகியலோடு இக்கதை நகர்கிறது.

அனைத்து கதைகளிலும் ஒரு 'அம்மா'  இருக்கிறாள். எத்தனை உறவுகள் வந்தாலும் பெண்களுக்கு எல்லா நிலையிலும் அவள் தேவைப் படுகிறாள். பள்ளி, கல்லூரி வாழ்க்கைக்கு பின் திருமணம், பிரசவத்திற்கு முன், பின், அதன் பின் எப்பொழுதும் அம்மா மட்டுமே ஒரு பெண்ணிற்கு துணையாகவும், தோழியாகவும் இருக்க முடியும் என்பதை முன்னிறுத்திகிறது அனைத்து கதைகளும்.

'கற்றாழை' யில் வரும் அம்மா கேலியும் கிண்டலுமாக மகளிடம் பேசியபடியே அவளுடைய பிரச்சனைகளுக்கும் தீர்வை தேடுகிறாள். 'கடன்' ல் வருபவள், அவளோடு சேர்த்து நம்மையும் அழ வைக்கிறாள், 'மணப்பு ' கதையில் அம்மாவோடு அத்தையும் சேர்ந்து கொள்கிறாள். 'பெருக்கு ' கதையில் இரண்டு அம்மாக்கள்  என்று இப்படியாக தொடர்ந்து நம் வீட்டுக்குள் இருப்பவர்களோடு நம்மை உலவ விட்டிருக்கிறார் கிருத்திகா.

திருமணம் என்பது உறவுகளின் கொண்டாட்டமாக இருந்தாலும் அங்கும் ஒரு 'அம்மா' மட்டும் எப்பொழுதும் வேலையோடு இங்கும் அங்கும் அல்லாடிகொண்டிருப்பாள். உறவுகள் அனைவரையும் திருப்தி படுத்த ஓடிக்கொண்டிருக்கும் அவளுக்கு அலுப்போ, சலிப்போ ஏற்படுவதில்லை. மகளின் திருமணத்தை நிறைவுடன் செய்து முடிக்க வேண்டிய முனைப்பு மட்டுமே அவளிடம் இருக்கும். அன்றைய நாளில் கிடைக்கும் சிறு இடைவேளையில் போடும் குட்டி தூக்கம் கூட அடுத்து செய்யப்போகும் வேலைக்காகவே என தோன்ற வைப்பாள். அவள் நம் வீட்டு அம்மாவின் பிரதிபலிப்பு. எப்படி நம் வீட்டுக்குள் நுழைந்து என் அம்மாவை பார்த்தார் என்ற எண்ணம் வாசிப்பவர் அனைவரையுமே யோசிக்க வைக்கும். நம் அம்மாவின் முகத்தை நினைவில் கொண்டு வராமல் இக்கதை நிறைவடையாது.எந்த அதிர்ச்சி முடிவும் இல்லாமல் ஒரு நேர் கோட்டுக் கதையாக இருந்தாலும் 'இடைவேளை ' யில் வந்த அம்மா என் மனதிற்கு பிடித்தவளாக இருக்கிறாள்.

அம்மாவின் வாசத்தையும், அவளுடன் விளையாடிய நாட்களையும் ஞாபக அடுக்குகளில் வைத்திருப்பவளுக்கு நிகழ் கால மனிதர்கள் அந்நியர்களாக ஆகி போனதை சொல்கிறது 'படிமங்கள்'. கணவனிடம் இருக்கும் அன்னியோன்யத்தை தோழியிடம் பகிர்ந்து மனதை ஆசுவாசப்படுத்தும் மீனாட்சிக்கா ' உயிர்த்தெழலில்' நம்மை நெகிழ வைக்கிறாள்.

பெண்களின் உலகில் அவர்களுக்குள் பேசும் உரையாடல்களில் இருக்கும் மகிழ்ச்சி, ஏக்கங்கள், பகிடிகள், அனுபவங்கள், அறிவுரைகள் என எதையும் விட்டு விடாமல் எழுதி, அதை வாசிக்கும் பெண்களை தங்களுக்குள் அங்கு பொருத்திப் பார்க்கும் தன்மையில் இருக்கிறது இவரது எழுத்து.

ஆர். சூடாமணி அவர்களின் சிறுகதை வாசிப்பனுபவத்தை கொடுக்கிறது கிருத்திகா அவர்களின் சிறுகதைகள்.ஒரு சிறு விஷயத்தைக் கூட விவரித்து அழகியலோடு எளிய நடையில் எழுதி இருப்பது அருமை. அனைத்து கதை மாந்தர்களையும் நேர்மறை கதாபாத்திரங்களாக உலவவிட்டு இருப்பது நம் மனதோடு இணக்கமாக்கி, மென்புன்னகையோடு வாசிக்க வைக்கிறது.நன்றி.


Comments