நூல் : உப்பேறிய மனிதர்கள்
ஆசிரியர் : அண்டோ கால்பட்

கால்களில் ஒட்டிக்கொண்டிருக்கும் கடற்கரையின் ஈரமணலோடும், உப்புக்காற்றின் பிசுபிசுப்போடும் வாழ்ந்துகொண்டிருக்கும் நெய்தல் நில மக்களின் வாழ்வியலை சொல்லும் தொகுப்பு ' உப்பேறிய மனிதர்கள் '. இதுவரை அறியப்படாத கடற்கரை மனிதர்களின் துயரங்களை பதிவு செய்துள்ளது இத்தொகுப்பு. தூத்துக்குடியை சேர்ந்த எழுத்தாளர் அண்டோ கால்பட் அவர்கள் நெய்தல் நில மக்களின் வாழ்வியலை மையமாக கொண்டு பல நூல்கள் எழுதியுள்ளார். 'பதினாறாம் காம்பவுண்ட்', 'ஒற்று' ஆகிய நாவல்களையும், 'இனியொரு விதி செய்வோம்' என்ற கட்டுரை தொகுப்பையும் வெளியிட்டுளார்.இது அவருடைய முதல் சிறுகதை தொகுப்பு.

ஒன்பது கதைகளை கொண்ட இத்தொகுப்பில் அனைத்து கதைகளும் ஒரே நிலப்பகுதியின் அடையாளங்களை மட்டுமே சார்ந்து எழுதியுள்ளதால், அம்மக்களின் துயரங்கள், மகிழ்ச்சி, கண்ணீர், காதல், கொண்டாட்டங்கள் என அனைத்தையும் தொட்டு கன கச்சிதமாக அவர்களை பற்றிய முழு பிம்பத்தையும் நம் மனதில் ஏற்றியுள்ளார் ஆசிரியர்.

தூத்துக்குடி பகுதி வட்டாரவழக்கு மொழியில் கதைகள் இருப்பதால் கடற்கரை மனிதர்களின் வாழ்வியலோடு பிணைந்து உயிர்ப்புடன் நகர்கிறது கதைகள்.

முதலாளிகளின் ஆதிக்கத்தால் மீன்பிடி தொழிலாளர்கள் எந்த அளவு பாதிக்கிறார்கள் என்பதை சொல்கிறது  'உப்பேறிய மனிதர்கள் ' கதை. மீன்பிடி தொழிலாளர்கள் சங்கத்தின் பிரதிநிதியாக இருந்து அச்சமூக மக்களுக்கு பல உதவிகள் செய்துவரும் சூசை அந்தோணியின் இறப்பு அவன் சார்ந்த சமூகத்துக்கு மட்டுமல்லாது அவன் குடும்பத்தையும் ஆதரவற்ற நிலைக்குத் தள்ளுகிறது. ஊருக்கு பொது மனிதராக இருப்பவர்கள் ஒரு தரப்புக்கு ஆதரவு நிலை எடுக்கும் இடத்தில் பல சிக்கல்களை சந்திக்கின்றனர். அதில் அவர்களது உயிர் இழப்பும் சேரும். அன்பும் கோபமும் எல்லையற்று இருக்கும் அம்மக்களிடம் சிறு பொறி கூட பெரும் தீயாக கிளம்புகிறது. அதையும் அம்மக்கள் இயல்பாக கடந்து போனாலும், இறுதியில் சூசையின் மகனிடம் இருக்கும் அந்த குழந்தைத்தன்மை விலகி ஒரு இறுக்கத்தை கொடுக்கப் போகிறது  என்ற உண்மை சுடுகிறது.

மென்மையான காதலை சொல்லும் கதையாக 'கிளிஞ்சல்கள்'. ஒரு காதல் கதையை இவ்வளவு இளமை தத்தும்ப எழுத முடியுமா என எண்ணவைக்கிறது இக்கதை.ராமா - ஸ்வீட்லினின் காதல் அத்தியாயம் அதிரடியாகவும், சேட்டைகள் நிரம்பியாதாக, இளமை ததும்பி மகிழ்ச்சியாக சென்று சுபமாக முடிந்தாலும் இடையில் ஏற்படும் அதிரடி திருப்பதில் அனைத்தும் குழைந்து போய் ஸ்வீட்லின் நிற்கதியாக இருக்கும் பொழுது மனம் கனக்கிறது. தன் மகளின் எதிர்காலத்திற்காக அவள் எடுக்கும் உணர்ச்சிமிகு முடிவு நமக்கும் திருப்தியை தருகிறது எனலாம். மாமா மகளின் துயர்மிகு வாழ்க்கையை சீர்படுத்த காத்திருக்கும் பிரவீனின் அன்பும் நெகிழ வைக்கிறது. மேலும் ராமா - பிரவீனின் நட்பின் இறுக்கத்தையும் உணரமுடிகிறது. 'மௌன ராகம்' திரைப்படத்தை பார்த்த அனுபவம் இக்கதையில் எனக்கு கிடைத்தது.

அனைத்து கதைகளிலும் ஒரு இறப்பு நிகழ்கிறது. மனிதர்களின் இழப்பு அவர்களை சுற்றியுள்ளவர்களை எந்த அளவு பாதிக்கிறது என்பதை ஒவ்வொரு கதையும் உணர்த்துகிறது. இறக்கும் தருவாயில் இருக்கும் தாயை காணமுடியாத மகனின் வலி, காதலியை இழந்த கிறிஸ்டோபர் அண்ணனின் தோல்வி என துவண்டு போய் கிடக்கும் மனங்களை ஆற்றுப்படுத்த நம்மையும் அழைத்து செல்கிறார் ஆசிரியர். இழப்பின் வலியை மட்டுமின்றி அவர்களைப் பற்றிய இனிமையான  விஷயங்களையும் நினைவுகூறுகிறது அக்கதைகள்.

'அல்பெர்ட்டா சிஸ்டரை',  காண அவரது கல்லறைக்கு செல்லும், மாணவனின் நினைவலைகள் அக்கதையில் வரும் பட்டாம்பூச்சியை போல் என் பள்ளிப்பருவ நினைவுகளை படபடக்க வைக்கிறது.

தாயின் இறப்பு நெருங்கும் தருவாயில் அவளின் அருகில் இருக்க இயலாமல் போகும் மகனின் தவிப்பை சொல்லும் கதை ' ஓயாத அலைகள் '. ஒரு பெண்ணால் மட்டுமே ஒரு குடும்பத்தை நிறைவான வாழ்க்கையை நோக்கி நகர்த்த முடியும் என்பதை 'மெர்லின்' கதாபாத்திரம் நமக்கு உணர்த்துகிறது. முரட்டு குணத்துடன் இருக்கும் கணவன் குருஸை நல்வழிப்படுத்தி ஒரு மனிதனாக மாற்றியதில் இருந்து, கணவன் இறந்த பின்பு தன் இரு குழந்தைகளை வளர்த்து அவர்களுக்கும் ஒரு நல்ல நிலையை ஏற்படுத்திக் கொடுத்தது வரை அவளது அர்ப்பணிப்பு அளப்பரியது. அவளின் கடைசி மூச்சு, அவள் மகனை பார்த்ததும் தான் நிற்க வேண்டும் என்ற தவிப்பை நம் மனதிற்குள் ஏற்படுத்துகிறார் ஆசிரியர். வாழ்வாதாரத்துக்காக கடலுக்குள் செல்லும் மனிதனுக்கு உறவுகளின் பிரிவு பெரும் துயரத்தை கொடுக்கிறது. அது குருஸ் போகும் வல்லமானாலும் சரி, ரெபிண்டோவின் கப்பலானாலும் சரி. ஆனால் கடலின் ஓயாத அலைகள் என்றும் அவர்களை கரை சேர்க்கும்.

கதை மாந்தர்களையும் அவர்களின் உணர்வுகளையும் மட்டுமின்றி கதையில் இடம்பெறும் நிகழ்வுகளையும் விவரித்த விதம் என்னை மிகவும் ஈர்த்தது. அனைத்தும் கொஞ்சமும் அலுப்பு தட்டாத விரிவான விவரணைகள். கிறிஸ்டோபர் அண்ணன், கைத்தான் பப்பாவின் தோற்றம், குணம், செயல்படும் விதம் குறித்து, ஒரு மனிதனை இவ்வளவு நுட்பமாக சொல்ல முடியுமா என்ற ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது ஆசிரியரின் எழுத்து.


கிருஸ்தவ மதத்தை பின்பற்றி வாழும் இம்மக்களின் மத சடங்குகள், திருமணத்தின் போது நிகழும் மத நடைமுறைகள், இறப்பின் பொழுது செய்யும் சடங்குகள் என அனைத்தையும் நமக்கு புரியவைக்கிறார் ஆசிரியர். அம்மக்களின் மத நம்பிக்கைகளை மட்டுமின்றி மூடநம்பிக்கைகளையும் பதிவு செய்துள்ளது சிறப்பு.

கடல் வியாபாரம் நன்றாக இருக்க மீனவர்கள் ஆரம்ப நாட்களில் மாந்தரீக செயல்பாடுகளில் அதிக நம்பிக்கை கொண்டு உயிர் பலி கொடுக்கும் அளவிற்கு சென்றுள்ளனர். ஆனால் கத்தோலிக்க திருச்சபையின் ஆதிக்கம் வந்த பின்னர் மீனவர்களிடம் இந்த போக்கு குறைந்துள்ளதாக அறிய முடிகிறது.

//தேவ மாதாவின் பாடுதான் கொஞ்சம் சங்கடம். அவள் ஏதோ அலாவுதீன் பூதம் போல் இவர்கள் உருட்டும் ஜெபமாலைக்கு கட்டுப்பட்டு கொலைகாரர்களுக்கு கூட தஞ்சம் கொடுக்கவெல்லாம் வேண்டியதாக இருக்கிறது. மனிதர்கள் கடவுளை கையாளும் விதமே அலாதியானது!..//

கொலை செய்த மகனுக்கு எந்த குற்றவுணர்ச்சியும் இல்லாமல் 'தேவமாதா உன்னை காப்பாற்றுவார்' என ஆறுதல் கூறும் தாய், தன்னோடு தேவமாதாவையும் இணைத்துக் கொள்கிறார். அவர்களின் இந்த நம்பிக்கை ஒரு மூடநம்பிக்கை என அவர்கள் அறியாமல் வாழ்வது வேதனைக்குரியது.

அனைத்து கதைகளும் யதார்த்த நிகழ்வாக நம் மனதை நிறைக்கிறது. கடலோடு மட்டும் உறவாடாமல் கடல் மனிதர்களோடும் கொஞ்சம் உறவாடுங்கள் என்பது போல் உள்ளது இத்தொகுப்பு. நன்றி.

Comments