நூல் : மீட்சி
ஆசிரியர் : ஒல்கா
தமிழில் : கௌரி கிருபானந்தன்
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம் 044 24332424
விலை : Rs. 110

தந்தைவழி சமூகத்தில் வரையறைக்கப்பட்ட எல்லைக்குள் வாழும் பெண்களின் அனுபவங்களை சொல்லும் 5 கதைகளை கொண்ட தொகுப்பு 'மீட்சி'. தெலுங்கு எழுத்தாளர் ஒல்கா அவர்கள் எழுதிய இந்நூல் 'சாகித்ய அகாடமி ' விருது பெற்ற நூல் என்பது குறிப்பிடத்தக்கது.

புராண இதிகாசக் கதையான இராமாயணத்தில் வரும் சில கதாபாத்திரங்களை வைத்து, இன்றைக்கும், என்றைக்கும் நடக்கும் பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறை மற்றும் அதிகார அழுத்தங்களை கூறும் கதைகள். இராமாயணத்தில் இடம்பெறும் சில சம்பவங்களை மட்டும் எடுத்து ஒரு புதிய கோணத்தில் கதையை சுவாரசியமாக எடுத்துச் சென்றுள்ளார் ஆசிரியர் ஒல்கா. புனைவுக்கு எந்த அளவுகோலும் இல்லை என்பதை இக்கதையில் புரிந்து கொள்ள முடிகிறது. இதிகாசங்களில் குழம்பிப் போய் கிடந்த கதாபாத்திரங்கள் இந்நூலின் வழி தங்களுக்குள் கேள்விகளை எழுப்பி தெளிவடைய்வது போல் உள்ளது. அதோடு நம்மையும் தெளிவடைய வைக்கிறது.

கதை பெரும்பாலும் தர்க்க உரையாடல்களாகவே நகர்கிறது. கணவன், மகன் என்று வாழும் பெண்களுக்கு அவர்களைத் தவிர இந்த உலகத்தில் வேறு ஏதும் இல்லை என்ற மனப்போக்கை அவர்களுக்கு தெரியாமலே விதைக்கும் சமூகத்தை சாடுவது போல் உள்ளது அனைத்து உரையாடல்களும். சீதையின் மனதில் தோன்றும் கேள்விகளுக்கு முகத்தில் அறைவது போல் வாழ்க்கையின் நிதர்சன உண்மைகளை போட்டு உடைத்து இருப்பது அருமை. அவள் வாழ்க்கை அனுபவத்தில் இருந்து பார்க்கும் கோணம் மற்றவர்களிடம் இருந்து வித்தியாசப்படுவதை உணர்கிறாள். ஒருவரின் தனிப்பட்ட அனுபவம் வேறு ஒருவருக்கு இல்லையென்றாலும்,  அனைவரும் ஆணாதிக்கம் என்ற ஒற்றை புள்ளியில் வந்து சேருகிறார்கள்.

தன் மீது கொண்ட காதலால் தான் ராமன் சூர்ப்பனகையின் முகத்தை கோரமாக்கினான் என்ற சீதையின் எண்ணம், அவளுடன் உரையாடியப் பின்  முழுதும் வடிந்து, சூர்ப்பனகையின் இன்னொரு அமைதி முகத்தை காணும் இடம் உணர்வுப்பூர்வமானது. தனக்கு ஏற்பட்ட அவமானத்தை  கடந்து இயற்கைவசம் தன்னை ஒப்படைத்து அழகிய வனத்தை உருவாக்கி வாழும் அவளை நாமும் எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். தன்னைதானே நேசித்துக்கொள்ளும் மனப்பக்குவதை அவளிடம் கற்றுகொண்டு வனத்தை விட்டு மகிழ்வாக சீதை வந்தாலும்,  'ராமன் விரும்பிய தானும் சூர்ப்பனகையை போல் வனவாசத்தில் தானே இருக்கிறோம். இருவருக்கும் ஒரே நிலையை தானே ராமன் கொடுத்து இருக்கிறான்' என்ற கேள்வி அவளோடு சேர்த்து நம்மையும் குடைகிறது.

ஒருமித்த கவனத்தோடு செய்யாத மண்குடத்தை உடைத்த ரேணுகாதேவியின் கதை சொல்லில் அடங்காத துயரம். உடைந்த குடம் அவளின் பத்தினித்தனத்தை கேள்விக்குறியாகி போனதால், கணவனின் சொல்லைத் தட்டாத மகன், தன் தாயின் மேல் இருக்கும் நியாயத்தை கூட விசாரிக்காமல், தலையை சீவியது  கொடூரத்தின் உச்சம். பரசுராமன் போன்ற மகன்களை தான் நாம் வளர்க்கிறோம் என்ற ரேணுகா தேவியின் வாதத்தை சீதை புரிந்து கொள்ளும்பொழுது, பரசுராமனை போல் தன் மகன்கள் லவகுசனும் ராமனுடன் சென்று விடுவார்களோ என்ற ஐயத்தோடு செல்கிறாள்.

அதேபோல் சீதை சந்திக்கும் மற்றொரு பெண் அகல்யா. இந்திரனின் சூழ்ச்சியால் ஒழுக்கமற்றவளாக சித்தரிக்கப்பட்டவள். அவளின் துயரத்தை ராமனிடம் சீதை கூறும்பொழுது 'ஒழுக்கமற்றவர்களிடம் பேசாதே' என்று சிறு குற்றவுணர்வு கூட இல்லாமல்  சொல்லும் போது சீதை மனம் உடைகிறாள்.

/உன் மனதிற்கு எது அமைதி தருமோ அதுவே சத்தியம் /

என்ற அகல்யாவின் சொல், அவள் ராமனை பிரியும் தருணத்தில் வேதவாக்காக அமைந்துவிடுகிறது.

இந்நாள் வரை உயர்த்திப் பிடித்திருந்த ராமன் என்கிற பிம்பத்தை உடைக்கிறது இக்கதைகள்.  இராவணனை எதிர்க்க சரியான காரணம் இன்றி சூர்ப்பனகையை பகடை காயாக வைத்து சண்டைக்கு அழைத்த ராமனின் செயல் ஆரிய தர்மமாக கூறப்படுகிறது. ஆண்களின் பகையை தீர்த்துக் கொள்ள ஒரு பெண் தான் தேவைப்படுகிறாள். சீதையால் ராவணனை வென்று தப்பிக்கும் நிலை இருந்தும், ராமனுக்கு நற்பெயர் வாங்கி தர காத்திருந்த சீதையை என்னவென்று சொல்வது. தன் கணவன் தன்னை காப்பான் என்ற மாயையில் தன்னிடம் இருக்கும் திறமைகளை மறைத்தும், மறந்தும் வீட்டில் முடங்கி கிடக்கும் பெண்களின் பிம்பமாக சீதை தெரிகிறாள். தீட்டு, பவித்திரம், ஒழுக்கம், ஒழுக்கக்கேடு போன்ற வார்த்தைகளை ஆண்கள் வலிமையாக உருவாக்கி வைத்து பெண்களை ஒரு எல்லைக்குள் வைத்து அதிகாரம் செலுத்துகிறார்கள் ஆண்கள். தன்னுடைய அடையாளத்தை தெரிந்து கொள்ளாமல் மற்றவர்களின் அதிகாரத்திற்கு கட்டுப்பட்டு வாழும் நிலையில் தான் பெண்கள் இருக்கிறார்கள்.
இதில் ஊர்மிளாவின் கதாபாத்திரம் மிக நேர்த்தியாக வடித்திருந்தார் ஆசிரியர். ' நமக்கு நாமே எஞ்சியிருக்க வேண்டும் ' என்று சீதைக்கு அவள் செய்யும் உபதேசம் நமக்கானதும் கூட. "யாரிடம் இருந்தும் நாம் மீள முடியாது. அது மற்றவரிடம் இல்லை, நம்மிடம் மட்டுமே உள்ளது" என்பதை புரியவைக்கிறாள் ஊர்மிளா. அஸ்வமேத யாகத்தில் ராமன் பக்கத்தில் யார் அமர்வார்கள் என்ற கேள்வி மனதில் குடைந்தாலும், ஊர்மிளாவின் அறிவுரைக்கு பின் அதை எளிதில் கடந்து வருகிறாள் சீதை.

இறுதியில் ராமனும் ராஜ்ய அதிகாரத்தில் சிக்குண்டு தன் இல்லற வாழ்வை இழந்து நிற்பது போல் எழுதியுள்ளார் ஆசிரியர்.

/ உன் மீது  அதிகாரத்தை நீயே எடுத்துக்கொள்...மற்றவர் மீது அதிகாரத்தை விட்டுக் கொடு...அப்பொழுது நீயே உனக்கு சொந்தமாவாய்../

என்ற ஊர்மிளாவின் கூற்று ராமனுக்கும் ஏற்றதாக அமைந்து விடுகிறது. மனைவிக்கு தான் செய்த அதிகாரம் இப்பொழுது ராஜ்ஜியம் தனக்கு செய்கிறது என்பதை உணர்ந்தாலும், சீதை இப்பொழுது அவனுடன் இல்லை.

இதிகாச கதையாக இருந்தாலும் நம் இன்றைய வாழ்வோடு தொடர்பு படுத்திப் பார்க்கும்படி உள்ளது. பெண்களின் நிலை அன்றிலிருந்து இன்று வரை எந்த மாற்றமும் இல்லாமலா இருக்கிறது என்ற அங்கலாய்ப்பு தான் ஏற்படுகிறது.

கௌரி கிருபானந்தன் அவர்களின் மொழிபெயர்ப்பு வாசிக்க எளிமையான நடையில் இருந்தது சிறப்பு. நன்றி.

Comments