நூல் : ஆக்காண்டி
ஆசிரியர் : வாசு முருகவேல்
பதிப்பகம் : எதிர் வெளியீடு Ph : 04259 226012
விலை : Rs.180
எழுத்தாளர் வாசு முருகவேல் அவர்களின் ஐந்தாவது நாவல் 'ஆக்காண்டி'. இலங்கை யாழ் / நயினா தீவில் பிறந்து தற்போது சென்னையில் வசிக்கிறார்.
ஈழ போரில் தமிழர்கள் அனுபவித்த கொடூரங்களை காட்சிகள் மூலமாகவும் செவி வழி செய்தியாகவும் கேட்டு கடந்து விட்ட நமக்கு, கொடூரங்களின் உண்மை நிலவரத்தை எழுத்தில் நம்மிடம் கொண்டு சேர்த்திருக்கிறார். ஒவ்வொரு அத்தியாயத்தையும் கனத்த இதயத்தோடும், படபடப்போடும் கடக்க வேண்டியுள்ளது.
இலங்கையின் கிழக்கு பகுதியில் வசிக்கும் ஒரு குடும்பம், இலங்கை ராணுவம் மற்றும் ஊர்காவல் படையால் எவ்வளவு சித்திரவதைக்கு உள்ளாகி பிரிந்து போகிறார்கள் என்பதில் இருந்து ஆரம்பமாகிறது இக்கதை. கதையின் முதல் பாதி முழுவதும் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியும், அவர்களுக்கு கொடுக்கப்பட்ட தண்டனைகளுமாக செல்கிறது. ரத்த வாடையும், மனித மாமிச வீச்சமும் நம்மை வாசிக்க முடியாத மனநிலைக்கு தள்ளி விடுகிறது.
குடும்பத் தலைவன் பரஞ்சோதி இறந்து போய், மகள் அகிலா ராணுவத்தினர் கையில் சிக்கி தொலைந்து போகிறாள். மகன் தாசனின் நிலை என்னவாகிறது என்று போகிறது கதை. 'தமிழர்கள் என்றாலே புலிகளாக தான் இருப்பார்களா' என்ற கேள்வியை மனதில் சுமந்து கொண்டு வேலைக்காக அலையும் இளைஞனாக தாசன் வருகிறான். ஆனால் அவன் செல்லும் இடமெல்லாம் சோனகர்களின் கிண்டலுக்கு ஆளாகி பரிதவித்து கொண்டிருந்த நேரத்தில்தான் தன் குடும்பத்தை இழக்கும் சம்பவம் நிகழ்கிறது. தான் எந்த இயக்கத்தில் சேரக்கூடாது என்று நினைத்தானோ விதி அவனை அங்கேயே கொண்டு சேர்க்கிறது. ஈழப் போரின் இறுதியில் அவனும் ராணுவத்தினரிடம் சிக்கி தண்டனைகளை அனுபவித்த அத்தியாயங்களை கடப்பது சிரமம். அங்கு அவனுக்கு துணையாக அகிலன் கிடைக்கிறான்.
இந்த இடத்தில் தான் அமைதியின் உருவமாக நாம் நினைத்திருந்த புத்த பிக்குகளின் கொடூர முகத்தை பார்க்க முடிகிறது. காவி அணிந்த புத்த பிக்கு சிறுவர்களும் இதில் அடக்கம், ராணுவ முகாம்களில் இருக்கும் ஆண்களுக்கு, இவர்களே தண்டனைகளை முடிவு செய்கிறார்கள். நம் அறிவில் இருக்கும் புத்த பிக்குகளின் பிம்பத்தை அழித்துவிட்டு வாசிப்பது நலம். இனவெறியின் உச்சத்தில் இருப்பவர்களாக அவர்களை அடையாளப்படுத்தும் அளவு அரசியல் செய்கிறார்கள்.
/ இலங்கை கொழும்புசெட்டி தெருவில் மட்டும் தான் புத்தர் சிரிப்பார். அவர் சீனாவில் இருந்து வந்த புத்தர் /
என்று ஆசிரியர் குறிப்பிட்டு இருப்பது நிதர்சன உண்மை.
எந்த போர் சூழலிலும் பெண்கள் தான் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி உயிர் போனாலும் பரவாயில்லை என்ற நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
இன்றைய திரைப்படங்களில் ரத்தம் தோய்ந்த கத்தியோடு அறிமுகமாகும் வில்லன் கதாபாத்திரம் போல் இருந்த கமாண்டர் நஜீப், ராணுவம் மற்றும் ஊர் காவல் படையுடன் சேர்ந்து செய்யும் அட்டூழியங்கள் கொடூரத்தின் உச்சம். வாசிக்கும் பொழுதே பெண்களின் ஓலம், குழந்தைகளின் அழுகுரலை கேட்கமுடிகிறது. இதில் அகிலா, ஜீவமலர் ஆண்களின் காம இச்சைக்கு ஆளாகும் இடத்தில், அந்த நிலை அவர்களுக்கு மட்டுமின்றி மொத்த தமிழ் பெண்களுக்குமே அதுதான் கதி என்பதை கதையின் இறுதி வரை சொல்லிக்காட்டுகிறார் ஆசிரியர். தண்டனை என்ற பெயரில் ஆண்கள், பெண்கள் என அனைவரையும் எந்த நேரத்திலும் நிர்வாணத்தோடே இருக்க வைப்பது பெரும் கொடுமை.
இக்கதையில் மையப் புள்ளியாக இருப்பது ஒரு பகுதியில் வாழும் இலங்கை இஸ்லாமியர்களுக்கும், தமிழர்களுக்கும் இடையில் நடக்கும் அரசியல். சோனகர் என்று அழைக்கப்படும் இஸ்லாமிய குழுவை இலங்கை ராணுவம் தங்களுக்கு உதவியாக வைத்துக் கொள்கிறார்கள். பெரும்பாலான சோனகர்கள் தமிழ் இஸ்லாமியர்கள்தான். ஆனால் இந்து தமிழர்களை 'புலி படையில் ' இருப்பவர்களாகவே சந்தேகித்து சித்திரவதை செய்கிறார்கள். தமிழர்களை எதிர்க்க சோனகர்களை ஊர்காவல் படையில் நியமித்து விட்டு, தமிழர்களின் நிலம், ஆபாரணங்கள் என அனைத்தையும் அவர்களுக்கே பரிசாக கொடுத்து விடுகிறது இலங்கை அரசாங்கம். உள்ளூர் மக்களை இனவெறி ஊட்டி அவர்களை பிரிப்பதை இலங்கை அரசு வெகு சாமர்த்தியமாக நடத்தியுள்ளது. தமிழர்களை மலடாக்க, சோனகர்கள் உணவகத்தில் ஏதோ மருந்து கலப்பதாகவும் சொல்லப்படுகிறது.
அதேபோல் ஈஸ்டர் பெரு நாளில் நடந்த கிருஸ்துவ தேவாலய தாக்குதலை இஸ்லாமியர்கள் செய்ததையும், அதற்கு அவர்கள் அரபு நாடுகளில் நிதி பெற்றது போலும் கதையில் வருகிறது. ஹாசிமின் போன்ற அரசியல்வாதிகள் மக்களுக்கு சேவை செய்வதை விட்டு நிதி பெறுவதிலேயே குறியாக இருப்பதையும் காண முடிகிறது. சோனகர்களின் இந்த போக்கு பிடிக்காத உஸ்மான் நம் மனதில் நிறைகிறான்.
ஆனால் அதே சோனகர்களை 2018 கண்டி கலவரத்தில் சிங்கள மக்களும், புத்த பிக்குகளும் சேர்ந்து கடை, வீடு என அவர்களின் சொத்துகளை நாசம் செய்ததை சொல்ல தவறவில்லை ஆசிரியர்.
ஈழ மக்களின் துயரை சொல்லும் ஈழகவிஞர் சண்முகம் சிவலிங்கம் அவர்கள் எழுதிய 'ஆக்காண்டி ஆக்காண்டி' என்ற பாடலில் வரும் ஒரு பறவையின் பெயரை தலைப்பாக வைத்துள்ளார் ஆசிரியர். கதையிலும் ஈழமக்களின் துயரங்களை சொல்லுவதால் இத்தலைப்பு மிகச் சரியாக பொருந்திப் போகிறது. கதையின் இறுதியில் அக்கவிதையை வாசிக்கும் பொழுது மனம் கனத்துப் போகிறது.
கதை தமிழர்களுக்கு ஆதரவாகவும், சோனகர்களுக்கு எதிராகவும் உள்ளது. இதன் உண்மை தன்மையை அறிய கண்டிப்பாக இலங்கை அரசியலை வாசித்தால் தான் புரியும் என தோன்றுகிறது.நன்றி.
Comments
Post a Comment