நூல் : காதுகள்

ஆசிரியர் : எம். வி. வெங்கட்ராம்
பதிப்பகம் : காலச்சுவடு ph : 04652 278525
விலை : Rs. 200

எம். வி. வெங்கட்ராம் அவர்களின் 'பைத்தியக்காரப் பிள்ளை' சிறுகதை வாசித்ததில் இருந்து அவருடைய வேறு படைப்புகளை வாசிக்க ஆர்வம் வந்து தேடியதில் கிடைத்த நாவல் 'காதுகள்'. இலக்கிய இதழான '
மணிக்கொடி'யில் தனது 16 வயதில் 
'சிட்டுக்குருவி’ என்ற சிறுகதை மூலம் இலக்கிய உலகிற்கு வந்தவர் எம்.வி.வெங்கட்ராம். சௌராஷ்டிர மொழிபேசும் பட்டு நெசவாளர் குடும்பத்தில் பிறந்து, இருநூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், நாவல்கள், வரலாற்று நூல்களை எழுதியவர்.

நேர்கோட்டுக் கதைகளாக படித்து பழகிய எனக்கு இந்த கதை வித்தியாசமான அனுபவத்தை கொடுத்தது. தூங்கும் பொழுது காதுகளில் கேட்கும் கொசுவின் ரீங்காரமே எரிச்சலை ஏற்படுத்தும் நமக்கு, நாள் முழுவதும் பல புதிரான குரல்களை கேட்டால் என்ன மனநிலை ஆட்கொள்வோம் என்பதை ஒரு சைக்கலாஜிகல் பார்வையில் கதையை நகர்த்தி இருக்கிறார் ஆசிரியர்.

மாலி என்கிற மகாலிங்கத்தின் சிறுவயது வாழ்க்கையில் இருந்து அவன் கடந்து வந்த பாதையை கதையாக சொல்கிறார் ஆசிரியர். கூச்ச சுபாவமும், இறை பக்தியையும் இயல்பாக கொண்ட மாலி, திருமணத்திற்கு பின் மனைவியின் மேல் உள்ள காமத்தின் வழி வரிசையாக குழந்தைகளை பெற்று, வியாபாரத்திலும் கோட்டை விட்டு வறுமையின் வாசல்படியில் வந்து நிற்கிறான். அந்த நேரத்தில் அவன் காதுகளில் ஏதோ ஓசை கேட்க ஆரம்பிக்கிறது. நாள் செல்ல செல்ல  அது அவனுக்கு சம்பந்தமே இல்லாத  உரையாடல்களாக மாறுகிறது. அது காதுகளுக்கு மட்டுமாக இருந்து பின் ஐம்புலன்களையும் ஆட்சி செய்கிறது. உரையாடல் கேட்கும் நேரம் அவன் நாசியில் நுகரும் வாசனை, கண்களில் தெரியும் புகைமண்டலமான உருவம் என அவனது அனுபவங்கள் அவனுக்கு பீதியை ஏற்படுத்துகிறது. ஐம்புலன்களையும் அடக்க தன் புத்தியால் போராடிப் பார்க்கிறான் மாலி.

தன் இறை பக்தியின் காரணமாக கடவுள் வந்து பேசுகிறாரோ என்ற ஐயம் ஏற்பட்டாலும், அந்த உரையாடல் ஆபாசமாக மாறும் பொழுது பதறிப் போகிறான். அப்பொழுது இது ஏதும் நாச சக்தியின் குரலோ என்று குழம்பிப் போகிறான். தன் கடவுள் பக்தியின் காரணமாக, இறை சக்தி தன்னை காப்பாற்றும் என்ற சரணாகதி நம்பிக்கையில் வாழ்கிறான்.

அவன் காதுகளில் ஒலிக்கும் உரையாடல்கள் பெரும்பாலும் காமம் கலந்த கேட்கவே சங்கடப்படுத்தும் கெட்ட வார்த்தைகளின் தொகுப்பாகவே உள்ளது. கற்பனை உரையாடல்களுக்கு எந்த எல்லையும் வகுக்காமல் அனாயாசமாக எழுதியுள்ளார் ஆசிரியர். நம் கனவுகளில் வருவது போல் காட்சிகளுக்கு சம்பந்தம் இல்லாத உரையாடல், புதிய மனிதர்களின் வருகை என மாய உலகத்தில் இருப்பதை போன்று மாலியின் அக உலகம் இருக்கிறது. ஆன்மீக வழியில் தன் ஆதர்ச கடவுள்களான ராமனையும் முருகனையும் வேண்டினால் எங்கிருந்தோ வந்த காளி அவன் தலைக்குள் புகுந்து குடைகிறாள். இவர்களுக்குள் நடக்கும் சண்டையில் அவன் தூக்கம், குடும்பத்தின் மீதான கவனம் அனைத்தையும் விட்டு வீட்டுக்குள் அடைந்து விடும் நிலைமை ஆகிறது.

கருப்பனுக்கும் ராமனுக்கும் நடக்கும் கதையின் இறுதி உரையாடல் மாலியின் தலை, காது, பல், நாக்கு என அனைத்து உறுப்புகளையும் இணைத்து அவன் முகத்தை அஷ்டகோணலாக்கி விட்டிருக்கிறார் ஆசிரியர். ஒருவனின் மனநிலை குழப்பம் எந்த அளவு அவனை அதன் கட்டுப்பாட்டுக்குள் வைக்கிறது. நம் மனதில் ஏற்படும் எண்ணங்களின் பாதிப்பு தான் auditory hallucination ஆக நமக்கு வெளிப்படுகிறது என்பதை மாலி கதாபாத்திரம் உணர்த்துகிறது.

இக்கதை எனக்கு  ஒரு சம்பவத்தை நினைவூட்டியது. என் நெருங்கிய கிருஸ்தவ தோழி, அவளது காதில் ஜீசஸ் பேசுவதாக சொன்னாள். இது எனக்கு அதிர்ச்சியைத் தந்தது. நானும் அவளை போன்று ஜெபம் செய்தால் தேவனின் குரல் கேட்கும் என்று சொன்னாள். அவளின் இறைநம்பிக்கையின் மேல் எனக்கு எந்த வாதமும் இல்லை. ஆனால் தேவனின் குரல் கேட்பதை பற்றி பேசாமல் இருக்க முடியவில்லை. கடைசி அது சண்டையில் போய் நின்றது. இக்கதையில் வரும் மாலியும் அதே போன்ற தன்மையுடன் இருப்பது புரிகிறது.

கடவுள்கள் தங்களுக்குள் ஆபாசமாக பேசுவது போல் எழுதி இருப்பது ஆசிரியரின் புரட்சி என்றே சொல்லலாம். "தரித்திரத்துக்கு பசி அதிகம்" என்ற ஒரே வாக்கியத்தில் மாலியின் வறுமையை படம் போட்டு காண்பித்திருக்கிறார் ஆசிரியர்.

/ அகத்தில் சித்தப்பிரமை உடையவன் நான்; புறத்தில் சித்தசுவாதீனம் உள்ளவன் போல் நடித்துக்கொண்டு இருக்கிறேன்! /

இக்கதை, நாவலின் ஆசிரியர் எம். வி. வெங்கட்ராம் அவர்களின் வாழ்க்கையில் நடந்த உண்மை அனுபவம் என்பது குறிப்பிடத்தக்கது. நன்றி.

Comments