நூல் : பங்குடி
ஆசிரியர் : க. மூர்த்தி

ஒடுக்கப்பட்ட எளிய மக்களின் வாழ்க்கையை செவி வழி செய்தியாகவும், நூல்களின் வழியும் அறிந்து வைத்திருந்தாலும், அவர்களின் வலியை பெரிதாக நாம் முழுதாக உள்வாங்கி இருக்க முடியாது. ஏனென்றால் அவர்களின் அனுபவங்களையும், நேரடியான சாதி வெறி தாக்குதல்களையும்  நாம் அனுபவித்து இருக்கவில்லை. அதை எளிதாக நம்மால் கடந்துவிடவும் முடியும். அவர்களின் நிலையில் நம்மை வைத்து பார்க்கும் பக்குவமும் இன்னும் நம்மிடம் ஏற்படவில்லை. பொருளாதார ஏற்றமும், சொகுசான வாழ்க்கையும், மேட்டிமை புத்தியும் இருக்கும் வரை கீழ்க்குடி மக்களின் இன்னல்களை புரிந்து கொள்வது சிரமம்தான். ஆனால் சாதி அரசியலை விரட்டி அடிக்க கல்வியால் மட்டுமே முடியும் என்பதை அவர்கள் புரிந்து வைத்துள்ளனர். கல்வி மூலம் படிப்படியான அவர்களின் முன்னேற்றத்தை காணப் போகும் காலம் வெகு தொலைவில் இல்லை எனலாம். கல்வி மட்டுமே ஒரு சமூகத்தை உயர்த்தும் என்பதை வலியுறுத்துகிறது இந்த நாவல்.

மலைகளில் இருக்கும் பாறைகளை உடைத்து திருவைகளும், அம்மிகளும் செய்து பிழைக்கும் பங்குடி இன மக்களை பற்றிய கதை இது. புழுதி காட்டுக்குள் தங்கள் வேளாண்மை நிலங்கள் நாசம் ஆவதை கண் முன்னே பார்த்து, பரிதவித்து பிழைப்புக்காக அடுத்தவர் கையை எதிர்பார்க்கும் நிலைக்கு ஆளாகும் இம்மக்களின் வாழ்க்கை போராட்டங்களை இந்த நாவல் மூலம் நமக்கு புரிய வைக்கிறார் ஆசிரியர் க. மூர்த்தி அவர்கள்.

வட இந்தியாவில் கட்டிக்கொண்டிருக்கும் ஒரு கோயிலுக்காக, எசனை மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் 'கம்பெருமாமலை' யை இயந்திரங்களை கொண்டு மொத்தமாக உடைத்து வட மாநிலத்துக்கு அனுப்ப கரசேவகர் கூட்டம் ஒன்று வந்து எசனையில் இறங்குகிறது. உடைக்கும் பொழுது கிளம்பும் புழுதி, மொத்த நிலப்பரப்பையும் நாசம் செய்து மக்களை பஞ்ச நிலைக்கு அழைத்து செல்கிறது. ஊருக்கு நீராதாரமாக இருக்கும் பெரியேரியும் வற்றிப் போகிறது. எதும் செய்ய முடியாமல் மக்கள் வக்காற்று நிற்கும் நிலை, அவர்களை மலை உடைக்கும் பணிக்கு அழைத்துச் செல்கிறது. கோயில் கட்டுமான பணிக்கும் மக்களை வெளியூர் அனுப்ப காரசேவகர்களோடு கைகோர்கிறான் மநுகோபால். பெருந்திரளாக வட மாநிலத்துக்கு வேலைக்கு செல்லும் மக்களை, அங்கு கொடுங்கோல் ஆட்சி செய்யும் அரசியல்வாதி லோகி எவ்வாறு  துன்புறுத்துகிறான், அதில் இருந்து பங்குடி மக்கள் மீண்டு வந்தார்களா என்பதாக போகிறது நாவல்.

கம்பெருமாமலை பாறைகளுக்கும் பங்குடி மக்களுக்கும் உள்ள உறவு சொல்லில் அடங்காத இணக்கமான உறவாக கருத வைக்கிறார் ஆசிரியர். உயிருள்ள மனிதனை போல் பாறைகளை விவரித்து இருப்பது அசாத்தியம். பாறைகளை அடிக்கும் முன் கையெடுத்து கும்பிடுவது, பாறைகளை தட்டிப் பார்த்து வயதை சொல்வது. ஓட்டை கல், தேரை உறங்கும் கல் என பாறைகளை ஒரு உயிருள்ள பொருளாக மட்டுமின்றி, துண்டாக இருக்கும் பாறைகளை உடலை கூறுபோட்டதாக சொல்வது என அதை ஒரு மனிதனாகவே பாவிப்பது உணர்ச்சி மேலிடுகிறது.

கதையில் வரும் கதாபாத்திரங்களில் பேரிங்கை மனதில் நிற்கிறாள். சாமிகண்ணு மேல் அவள் வைத்திருந்த காதல், கானல் நீராக போய், தன் கை குழந்தையை விட்டு பொக்காளியை திருமணம் செய்து எசனைக்கு வருபவளுக்கு ஏற்படும் இன்னல்கள் சொல்லில் அடங்காதது. எந்த ஈர்ப்பும் இல்லாத திருமண வாழ்வு, அவளை காண்டீபனுடன் சேர வைத்து, அவளது மொத்த வாழ்வையும் காவு வாங்குகிறது. எதையோ தேடி எங்கயோ போய் சிக்கிக் கொள்கிறது அவளது வாழ்வு. இறுதியில் அவள் மகனுடன் சேர்வது அவளுக்கும் ஒரு விடிவு காலம் இருக்கிறது என்பது புலப்படுகிறது.

கதையில் உணவு அரசியலையும் பேசி இருக்கிறார் ஆசிரியர். பன்றி கறியையும், மாட்டு கறியையும் சாப்பிடுபவர்களை தீண்டத்தகாதவர்களைப் போல் நடத்துவதும், ஆனால் உயர்குடி மக்களாக தங்களை நினைக்கும் மக்களும் திருட்டுத்தனமாக அவைகளை சாப்பிடுவதும் என இரண்டு நிலையில் இருப்பது அநாகரிகம். பள்ளி செல்லும் குழந்தைகளை, அவர்கள் மேல் நாற்றம் அடிப்பதாக சொல்லி பள்ளியை விட்டு வெளியேற்றிவிடும் அளவு அவர்கள் அராஜகம் நீண்டு கொண்டே செல்கிறது. மாட்டு மூத்திரத்தை பிரசாதமாக குடிக்கும் அரசியல்வாதி, மாட்டு கறியை ஏற்றுமதி செய்வது முரணாகப்படுகிறது. ஆனால் அதை கேள்வி கேட்க மக்களுக்கு திராணி இல்லை.  இயற்கை வளத்தை பாழ்படுத்தி, மக்களை துன்பறுத்தி கண்டிப்பாக இந்த கோயில் கட்ட வேண்டுமா என்ற கேள்வி நம்முள் எழுகிறது.

பங்குடி மக்களை பஞ்சாயத்தில் வைத்து உயர்குடி மக்கள் கொடுக்கும் தண்டனைகளை நினைத்தாலே மனம் வெம்புகிறது. அதற்கு எந்த எதிர்வினையும் புரியாமல் தண்டனையை அனுபவிப்பது அவர்களுக்கு என்ன சாபமா? என்ற கேள்வி நம் மனதில் எழுகிறது. அதுவும் மநுகோபால், பங்குடிகளின் பஞ்சாயத்தில் வாய்க்கு வந்தப்படி வசவு சொற்கள் பேசுவதை, பங்குடிகள் கேட்டுக்கொண்டே நிற்பது மனிதனுக்கு மனிதனே எதிரி என்பது போல் உள்ளது. அவர்களுக்குள் கூட்டு சேர்ந்து விடாமல் பார்த்து கொள்ள, மநுகோபால் போன்ற ஆட்களை ஏவி விடுகிறார்கள் ஆட்சியாளர்கள்.


கதையில் பங்குடி மக்களின் வாழ்வியலை பேசுவதோடு சமகால அரசியலையும் பேசி இருப்பது சாட்டையாடியாக உள்ளது. குறிப்பிட்ட அரசியல்வாதிகளை கிண்டல் செய்வது போல் எழுதியுள்ளார். கதையோடு அது பொருந்தி போவதால் அது மிகையாக தெரியவில்லை.

பங்குடி மக்களின் மொழியை புரிந்து கொள்ள அவகாசம் தேவைபடுகிறது. கதை போகிற வேகத்தில் மொழியை அறிந்து கொள்வதில் உள்ள சிரமம் குறைகிறது. ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒவ்வொரு கதாபாத்திரம் புதிதாக நுழைவது சிறிது சலிப்பை தருகிறது. பங்குடிகளின் நிலம், உணவு, மொழி, வாழ்வியல் என அவர்களை பற்றி முழு கண்ணோட்டத்தையும் நமக்கு தந்து இருப்பது சிறப்பு. நன்றி.

Comments