நூல் : தேவதையின் மச்சங்கள் கருநீலம்
ஆசிரியர் : கே. ஆர். மீரா
பதிப்பகம் : எதிர் வெளியீடு
Ph : 04259 226012

ஒரு சில எழுத்தாளர்களின் எழுத்துக்களை மட்டும் தேடி தேடி வாசிக்க தோன்றும். அப்படி சமீபத்தில் என்னை மிகவும் ரசிக்க வைத்தது கே. ஆர். மீரா அவர்களின் எழுத்து. அவரின் ' அந்த மரத்தையும் மறந்தேன் மறந்தேன் நான் ' வாசித்த பின் கையில் கிடைப்பவர்களிடம் எல்லாம் சிலாகித்து பேசிக் கொண்டிருந்தேன். தொடர்ந்து 'மீராசாது' வாசித்தது புது அனுபவம். அந்த வரிசையில் இப்போது 'தேவதையின் மச்சங்கள் கருநீலம்'.

சமகால மலையாள எழுத்துலகில் தவிர்க்க முடியாத எழுத்தாளரான கே. ஆர். மீரா அவர்கள் 2015 ல் தன்னுடைய 'ஆராச்சார்' நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவர். இவரது பெண் கதாபாத்திரங்கள் பெண்ணிய சிந்தனையுடனும், அவர்களது உரையாடல்கள் அறிவார்த்தமாகவும் இருக்கிறது.

கண்ணியமான ஆண்களும், பெண்களும் இக்கதையை வாசிக்க வேண்டாம் என்று கதையின் ஆரம்பமே disclaimer யுடன் ஆரம்பமாகிறது. அதுவே நமக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது. அதோடு கதையின் உள்ளடக்கத்தையும் அனுமானிக்க முடிகிறது. திருமணம் கடந்த உறவை இவ்வளவு புனிதப் படுத்தி இருப்பதை இது வரை எங்கும் வாசித்ததில்லை. அதை பெரிதாக நியாயப் படுத்தாமல் அதன் போக்கில் நம்மையும் ஏற்றுக்கொள்ள வைக்கும் அளவு அதை எழுதி இருப்பது அசாத்தியம்.

காதல் ஒரு பெண்ணை எந்த எல்லைக்கும் கொண்டு செல்லும் என்பதை நூலில் உள்ள 2 கதைகளையும் வாசிக்கும் பொழுது உணர முடிகிறது. பிடித்த ஆண்மகனை போல் பிள்ளை வேண்டும் என்கிற உச்சபட்ச காதல், பெண்ணை என்னவெல்லாம் செய்ய வைக்கிறது என்பதை எழுதி இருப்பதை வாசிக்கும் பொழுது 'இது தப்பு' தானே என்று அலாரம் அடித்து நம்மை எழுப்பினாலும், கதையின் கூர்மையான வசனங்கள் நம்மை ஒரு dilemma மனநிலையிலேயே வைத்திருக்கிறது.

ஒவ்வொரு பெண்ணின் மனதிற்குள்ளும் புகுந்து எழுதுயது போல் உள்ளது மீரா அவர்களின் எழுத்து. 'மீராசாது' வில் வரும் துளசி போல் இல்லை இந்த நாவலில் உள்ள நாயகிகள். கணவனை பழி வாங்க அவள் எடுக்கும் முடிவு அசாதாரணம். காதல் பெண்களுக்கு பலமா, பலவீனமா என்கிற கேள்வி எழுப்பியது மீராசாது. இந்நாவலின் நாயகிகளும் சில இடங்களில் காதலை பலமாக கையாண்டாலும் 'கருநீல'த்தில் வரும் நாயகி காதலில் தன்னையே உருக்கி, இப்படியும் காதல் செய்யலாம் என்பது போல் பெருங்காதலை கொண்டு வருகிறாள். இந்த காதலே ஒரு பலவீனமான உணர்வு தான் என புரிந்து கொள்ள முடிகிறது. இவ்வளவு மிகைத்தன்மையான காதலை, வாசிப்பவர் மனதில் எந்த நெருடலையும் ஏற்படுத்தாமல், எதார்த்தமாக எடுத்துக் கொள்ளும் வகையில் ஆசிரியர் எழுதி இருப்பது ரசிக்க வைக்கிறது.

இறுதியில் பிரிவைத் தான் சுமக்க நேரிடும் என்கிற பொழுது  இது போன்ற புதிய உறவெல்லாம் தேவை இல்லை என்ற கருத்தும், ஒரு பாடமாக அமைகிறது. பெண்ணை கொண்டாட எத்தனையோ விஷயங்கள் இருக்கும் பொழுது, காமத்தை மட்டும் காரணமாக சொல்லி தேவதையாக உருகும்பொழுது, வாசிக்கும்  நம்மால் ஒப்புக்கொள்ள முடியவில்லை . சூழ்நிலையை காரணம் சொல்லி பெண் செய்யும் தவறுக்கு பலிக்காடாவது என்னமோ குழந்தைகள் மட்டுமே என்பதை 'தேவதையின் மச்சங்களில்' புரிய வைக்கிறார் ஆசிரியர். தேவதையின் மச்சங்களில் வரும்  குழந்தைகள் ஆன், ஐரினின் இறுதி முடிவு கண்கலங்க வைக்கிறது. தாய், தந்தை சரியில்லாத பொழுது குழந்தைகள் அநாதை ஆக்கப்படுகிறார்கள்.

ஒவ்வொரு காதலும் ஒரு அனுபவமாக கருதுவதால், அதை கதையாக திரித்து எழுத முடியாமல் போகிறது. அனுபவத்தை மாற்றி எழுத முடியாது  எனக் கூறுகிறது மீராவின் கதைகள்.

மோ. செந்தில்குமார் அவர்களின்  மொழிபெயர்ப்பு, எளிய நடையில் உள்ளதால் நூலை தொய்வில்லாமல் வாசிக்க முடிவது சிறப்பு. நன்றி.
 

Comments