நூல் : பாரிஸ்
ஆசிரியர் : அரிசங்கர்
பதிப்பகம் : எதிர் வெளியீடு
Ph: 04259 226012
விலை : Rs.250

எழுத்தாளர் அரிசங்கர் அவர்கள் பாண்டிச்சேரியை இருப்பிடமாக கொண்டவர். இவர் நான்கு சிறுகதை தொகுப்புகள் மற்றும் குறுநாவல்கள் எழுதி வெளியிட்டுள்ளார். 'பாரிஸ்' இவரது இரண்டாவது நாவல் ஆகும்.

பாண்டிச்சேரியை விட்டு பிரெஞ்சுக்காரர்கள் வெளியேறும் பொழுது, அவர்கள், பாண்டிச்சேரி மக்களுக்கு பிரெஞ்சு குடியுரிமையை வழங்கினார்கள். அன்றைய நேரம் பிரெஞ்சு கலாச்சாரத்தின் மீது மோகம் கொண்ட பல பாண்டிச்சேரி மக்கள் அதை கெளரவமாக கருதினர். பிரெஞ்சு கலாச்சாரம், மொழி என இன்றும் அந்த மோகம் அம்மக்களுக்கு குறையவில்லை என்பதை காட்டுகிறது இக்கதை.

எப்பொழுதாவது தமிழகம் விட்டு பாண்டிச்சேரி போகும் பொழுது அங்கு இருக்கும் சூழல், பிரெஞ்சு கட்டிடங்கள் என நமக்கே ஒரு ஈர்ப்பு இருக்கத்தான் செய்கிறது. அங்கேயே வாழும் மக்களுக்கு, இன்னும் ஒரு படி மேலே போய் பாரிஸ்கே செல்லும் ஆசை இருக்கத்தானே செய்யும். ஆனால் அந்த ஆசையை நியாயமாக பெறுவதற்கான வழியை கையாளாமல், குறுக்கு வழியில் கண்டடைய நினைப்பது தவறு என்பதை இக்கதையின் மூலம் ஆசிரியர் வலியுறுத்தி இருக்கிறார்.

பிரெஞ்சு குடியுரிமை உள்ள பெண்களை காதல் மற்றும் திருமண வலையில் சிக்க வைத்து, அவர்களுடன் பாரிஸ் சென்று குடியுரிமை பெற பாண்டிச்சேரி இளைஞர்கள் செய்யும் மோசடி ஒரு பக்கம் என்றால், பணக்கார இளைஞர்களை குடியுரிமை ஆசை காட்டி பெண்களே அவர்கள் குடும்பத்தினருடன் சேர்ந்து மோசடி செய்வது இன்னொரு பக்கம். இவர்களுக்கு பாலமாக பல புரோக்கர்கள் இருக்கிறார்கள்.

ரஃபி, ஜென்னி காதல் இந்த வகையாக உள்ளது. பாரிஸ் போவதற்காகவே ஜென்னியை அவன் விரும்புவதும், ஜென்னி குடும்பத்திற்கு தெரியாமல் அவளை பதிவு திருமணம் செய்ய நிர்பந்தித்து அவன் போடும் திட்டங்கள் கடைசி நேரம் தவிடுபொடி ஆவதும், அதே ஜென்னியை கிரிஸ்டோவிற்கு மணம் முடிக்க தயார் பண்ணுவதும் என கதை ஒரு loop connectivity யோடு நகர்கிறது.

இன்றைய gay கலாச்சாரத்தையும் கையில் எடுத்திருக்கிறார் ஆசிரியர். சட்டம் அதற்கு அனுமதி கொடுத்தாலும், சமூகமும், குடும்ப சூழலும் இன்றும் அதை எதிர்க்கத்தான் செய்கிறது. பெற்றோர்களின் கௌரவம், மரியாதைக்கு இழுக்கு ஏற்படுத்தும் இது போன்ற உறவுகளை கடக்க முடியாமல் அழும் செலினா, ஜோசபை பார்க்கும் பொழுது பெற்றோர் நிலையில் அவர்களின் மேல் பரிதாபம் தான் ஏற்படுகிறது. ஆனால் கதையின் போக்கில் கிரிஸ்டோ, பிஜேஷ் ஜோடியையும் அதே நிலையில் தான் பார்க்க முடிகிறது. இது போன்ற தேவையற்ற உறவு அனைவருக்குமே சங்கடத்தை கொடுக்கிறது என்பது உண்மை.

நடுவில் அசோக், கதிர், டைலர் கதாபாத்திரங்களும் மனதில் நிற்கிறார்கள். பிரான்ஸ் போக பிரெஞ்சு படிக்கும் அசோக், இங்கு கொட்டி கிடக்கும் வேலைகளை விட்டு பறக்க ஆசைப்படுவதை எடுத்து கூறி அவனை நல்வழி படுத்துகிறார் டைலர். அவரது ஆலோசனை, பாண்டிச்சேரியின் ஒட்டுமொத்த இளைஞர்களுக்கும் ஒரு பாடமாக இருக்கிறது.

கதையில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் ஒருவரோடு ஒருவர் தொடர்போடு இருப்பதால், எந்த கதாபாத்திரமும் முக்கியம் இல்லை என்று சொல்ல முடியாத அளவு கதை கட்டமைப்பு இருக்கிறது. முதல் ஏழு அத்தியாயங்கள் ஒரே இரவில் நடப்பதாக வருவது சினிமா திரைக்கதைக்கு உண்டான எழுத்து எனலாம். மொத்த கதையும் ஒரு வட்டத்திற்குள் அடங்கி விடுகிறது. ஆனால் கதையை இன்னும் விரிவாக எழுதி இருந்தால் மேலும் சிறப்பாக இருந்திருக்கும். எழுத்து நடை வாசிப்பதற்கு மிகவும் எளிதாக இருந்தது. நன்றி.

Comments