நூல் : கறுப்பின மந்திரவாதி
ஆசிரியர் : கூகி வா தியாங்கோ
மொழிபெயர்ப்பு : நாமக்கல் பழனிச்சாமி
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்
விலை : Rs. 90
பக்கங்கள் : 165

கென்யாவில் பிறந்து தற்போது வட அமெரிக்காவில் வசிக்கும் கூகி வா தியாங்கோ அவர்கள், ஆப்பிரிக்க ஏகாதிபத்திய ஒடுக்கமுறை, அரசியல், பண்பாடு, காலனித்துவம் பற்றி பல கருத்துகளை தன் நாவல்கள் மற்றும் சிறுகதைகளில் எழுதி வருபவர். அரசுக்கு எதிரான தனது கருத்துகளால் 1970-ல் கென்ய அரசாங்கத்தால் கைதுசெய்யப்பட்டவர். முதலில் ஆங்கிலத்தில் எழுதி கொண்டிருந்தவர் ஆப்பிரிக்க அரசாங்கத்தின் மொழி திணிப்பை எதிர்ப்பதன் அடையாளமாக, தன் தாய்மொழியான கிகுயூ மொழியில் எழுதத் துவங்கினார். எந்த ஒரு மொழியும் பண்பாடும் வேறொன்றின் மேல் திணிக்கப்படக் கூடாது என்பதை வலியுறுத்துபவர்.

இவர் எழுதிய ‘சிலுவையில் தொங்கும் சாத்தான்’, ‘தேம்பி அழாதே பாப்பா’, ‘இரத்தப்பூ இதழ்கள்’, ‘கறுப்பின மந்திரவாதி’ ஆகிய நாவல்களும் சில சிறுகதைகளும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. நோபல் பரிசை வெல்வதற்கான விருப்பப் பட்டியலில் பல ஆண்டுகளாக இடம்பெறுபவர்.

ஆப்பிரிக்காவின் பல்லாண்டு கால பாரம்பரிய கலாச்சாரத்தை அளிக்க பாடுபட்ட கென்ய நாட்டின் முன்னாள் அதிபரான டேனியல்  அரப் மோய் மற்றும் அவரது சகாக்களின் ஆட்சி காலங்களின் நிலவிய அரசியலை பேசுகிறது இந்த நாவல். ஆனால் நாவலை தொடர்ந்து வாசிக்கும்பொழுது தான் கதை ஆப்பிரிக்காவில் நடக்கிறதா இல்லை இந்தியாவிலா என்ற சந்தேகம் நமக்கு வருகிறது.

கதை, அபுரிரியா நாட்டின் அதிபரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இருந்து ஆரம்பமாகிறது. அதிபரை குளிர்விக்க 'மேலுலக நுழைவாயிலை  எளிதாக அடைய உலகத்திலேயே உயரமான கட்டிடம் எழுப்பும் யோசனையை' முன்வைக்கிறார் ஒரு அமைச்சர். அதிலிருந்து ஆரம்பமாகிறது அரசியல் சூதாட்டம்.

நாட்டின் வளர்ச்சிக்கு தேவையற்ற 'மெலோக யாத்திரை ' கட்டிட திட்டம்.

கட்டிடம் கட்ட நாட்டின் பன்னாட்டு நிறுவனங்கள் கோடிகளை கொட்ட வரிசையில் நிற்பதும், கட்டிடம் கட்டும் வேலையில் சேர ஒரு கூட்டம் வரிசையில் நிற்பதும், சமநிலையற்ற பொருளாதாரத்தை காட்டுவது.

மனைவியை தள்ளி வைத்து, தனியாக வாழும் அதிபர்.

அதிபரை கடுமையாக விமர்சித்து எழுதுவோரை சிறையில் தள்ளுவது.

அதிபரின் சுயசரிதையை வரலாற்று சரித்திரம் போல் மாற்றி 'அவர் ஒரு சுதந்திர போராட்ட வீரர் ' என எழுதுபவருக்கு பட்டம் அளிப்பது.

அதிபர் மேலுலகம் செல்வது போல் படப்பிடிப்பு எடுத்து விளம்பரம் செய்வது.

'நானே நாடு, நாடே நான் ' என சர்வ வல்லமை பெற்ற அதிபராக காட்டிக்கொள்வது.

கட்டிடம் கட்ட உலக வங்கியிடம் கடன் பெற அமெரிக்கா சென்று அதிபர் அங்கு மூக்குடைப்படுவது.

தனக்கு சாதகமாக இருக்க நாட்டின் மத்திய வங்கி
கவர்னரை மாற்றுவது.

தகுதியற்றவர்களுக்கு நாட்டின் அதிகார பொறுப்பை கொடுப்பது.

செய்தியாளர்களை தவிர மக்கள் கூட்டம் வராத அதிபரின் கட்சிக் கூட்டம்.

வெளிநாட்டு முதலீடு கிடைக்க, தன் நாட்டிற்கு வரும் வெளிநாட்டு தூதுவர்களை கவர, நாடு சுபிட்சமாக இருப்பது போல் காட்டிகொள்வது.

இதெல்லாம் ஏதோ நமக்கு நெருக்கமான ஒரு அரசியல்வாதியை நினைவூட்டுவது போல் உள்ளதா...இதை விட  ஸ்பெஷல் ஒன்றும் கதையில் உள்ளது.. அதிபர் 'ஜனநாயக குழந்தை' யை பெற்றெடுப்பதும், இதனால் நாடு மேலும் சுபிட்சமாகும் என்று மக்களை ஏமாற்றுவது, நம் நாட்டின் பிரதமர் அடிக்கடி சொல்லும்  'புதிய இந்தியா பிறப்பதை' நினைவூட்டியது.

அதிகார உச்சத்தில் இருப்பவர்களை சம்மட்டியில் அடிக்க கண்டிப்பாக ஒரு போராட்ட குழு இருக்காதானே செய்யும்.. இங்கு அதிபருக்கு எதிராக 'மக்கள் குரல் ' என்ற அமைப்பு செயல்படுகிறது. அதில் 'நையாவிரா' வும், 'காமிட்டி'யும் சேர்ந்து செயல்படுவது சிறப்பு. அதிபரின் பிறந்த நாள் கொண்டாட்டத்தை தடுக்க பாம்பு விட்டு கூட்டத்தை கலைத்த நையாவிரா வை தேடும் பகுதியே கதையின் மைய முடிச்சு. தன்னை மந்திரவாதியாக காட்டிக்கொள்ளும் 'காமிட்டி', அதிபரின்அமைச்சர்கள் செய்யும் சூது, முதலீடுக்கு வந்த பணத்தை கையாடல் செய்யும் அரசு அதிகாரி, இதற்கு துணை போகும் நையாவிராவின் கணவன் 'கனியுறு', கூடவே இருந்து குழி பறிக்கும் 'டஜ்ஜரிக்கா' என மொத்த நாவலும் அரசியல் சதுரங்க விளையாட்டு போல் உள்ளது.

மந்திரவாதி 'காமிட்டி' கதாபாத்திரம், இந்தியாவில் படித்து பட்டம் பெற்றதாக வருவதும், கல்கத்தா சாலைகள், ராமாயண மஹாபாரத கதை உதாரணங்கள், இந்திய எழுத்தாளர்களை பற்றிய உரையாடல்கள் என நமக்கு தொடர்புள்ள பல விஷயங்கள் நாவலில் விரவிக் கிடக்கிறது.

இந்நாவல் தமிழில் சுருக்கப்பட்ட வடிவமாக உள்ளது. நாமக்கல் பழனிச்சாமி அவர்கள் இந்நாவலை சிறப்பாக மொழி பெயர்த்துள்ளார். நன்றி.

Comments