நூல் : தொரட்டி
ஆசிரியர் : இறைமொழி
பதிப்பகம் : நம் பதிப்பகம் Ph: 9566110745
விலை :Rs.160
சொல்லில் அடக்க முடியாத பெண்களின் பாடுகளை எத்தனை கதைகளாக எழுதினாலும் தீராது. மனதாலும், உடலாலும் நொந்து போய் கிடக்கும் பெண்ணின் மன உணர்வுகளை, ஏக்கங்களை சொல்லில் அடக்க முயன்றிருக்கிறார் ஆசிரியர் இறைமொழி.
நூல் ஆசிரியர் இறைமொழி அவர்களுக்கு 'தொரட்டி' முதல் சிறுகதை தொகுப்பு நூல் ஆகும்.
குடும்ப வன்முறை, பெண் மீதான பாலியல் துன்புறுத்தல், மாதவிடாய் அவஸ்தை, ஆணின் அத்துமீறல், என பெண்களின் போராட்டத்தை, ஒரு பெண்ணின் பார்வையில் உணர்ந்து எழுதியுள்ளார் ஆசிரியர். ஒவ்வொரு கதையும் வெவ்வேறு களத்தில் நடந்தாலும், பாதிக்கப்பட்ட பெண் ஒருத்தி அனைத்து தளத்திலும் இருக்கிறாள். அவளின் வலியை அவளே சரி செய்து கொண்டால் தான் உண்டு என்பது போல் இந்த சமூகமும் கைவிரித்து விடுகிறது. அவளுக்கு துணையாக இருக்க வேண்டிய ஆண், அவளை அடிமையாக நடத்துவது இன்னும் வேதனை. இதில் இருந்து மீண்டு வர அவள் எடுக்கும் பிரயத்தனங்கள் அலாதியானது. அப்படிப்பட்ட பெண்களின் கதைகளே 'தொரட்டி' நூலில் இடம் பெற்றிருக்கிறது.
விருப்பமில்லாத ஆடையோ, அணிகலனோ அணிய ஒவ்வொரு பெண்ணிற்கும் நிர்பந்தம் செய்கிறது இந்த சமூகம். தாலி, மெட்டி, மூக்குத்தி என பெண்கள் மட்டுமே அணியும் ஆபரணங்கள் ஏராளம். இவைகளை அணிய விருப்பம் இல்லாவிட்டாலும், சமூகத்தின் அழுத்தத்தால் அதில் இருந்து விடுபட முடியாமல் அடங்கி போகிறாள் பெண். 'மூக்குத்தி' கதையிலும் வெண்ணிலாவிற்கு பிடிக்காத மூக்குத்தியை அவளால் கழற்றி எறிய தயங்கிக் கொண்டிருக்கும் பொழுது, போகிற போக்கில் அவளின் பேத்தி வெண்ணிலாவின் தயக்கத்தை ஆசால்ட்டாக முடித்து வைப்பது சிறப்பு.
நூலின் தலைப்பான 'தொரட்டி' யில் வரும் சுகுணா, விருப்பம் இல்லாத திருமண பந்தத்தில் உழன்று, சுயநலம் மிக்க ஆண்களின் கூட்டத்திற்குள் சிக்கி சீரழிவதைக் கூறுகிறது. பலவந்தப்படுத்தி ஒரு பெண்ணிற்கு தாலி கட்டினால் அவனுடன் தான் வாழ வேண்டும் என்கிற பத்தாம்பசலி முடிவை எடுக்கும் சுகுணாவின் அப்பாவும், அதற்கு ஒத்து ஊதும் சுகுணாவின் அம்மாவிற்கும் இடையில் சிக்கி தன் வாழ்வை அழித்துக்கொள்ளும் சுகுணா பரிதாபத்திற்குரியவள். இந்த இழி நிலையை அவள் எதிர்த்து போராடி இருக்க வேண்டியவள், தாலியை மட்டும் கழற்றி, அவனுடன் சந்தோஷமாக வாழ்பவளாக கதையில் சொல்லி இருப்பதை ஒப்புக்கொள்ள முடியவில்லை. அவளுமே ஒரு பத்தாம்பசலிதான் என்பதை நிரூபிப்பது போல் உள்ளது.
இந்த சமூகத்தில் ஆதரவற்ற மனநிலை பாதித்த பெண்களின் நிலை என்னவாக இருக்கிறது என்பதை சொல்கிறது 'அன்று பெய்த மழை'. ஆண்களுக்கு, மனநிலை பாதித்த பெண் என்றாலும் அவர்கள் கண்களுக்கு போகப்பொருளாகத்தான் தெரிகிறாள். அதன் பாதிப்பால் அவள் எத்தனை முறை கருவுற்று இருப்பாள் ? கேள்வி கேட்க யாரும் இல்லாத பொழுது, அதற்கு யார் நியாயம் கேட்பது ? தனி மனித ஒழுக்கமும், அறமுமே இது போன்ற கேவலங்களை செய்யாமல் காக்கும். ஆனால் அது நடக்குமா என்பது கேள்விக்குறியே. அவர்களுக்கு நேர்கின்ற துயரங்களை கண்டு 'உச்' கொட்டி விட்டு, கண்டும் காணாமலும் செல்கின்ற மனநிலை தான் இன்றும் நம்மிடையே இருக்கிறது. கதையிலும் அதே நிலைதான். கதையிலாவது அதற்கு ஒரு தீர்ப்பு வழங்கி இருக்கலாம்.
கதைகளின் உள்ளடக்கம் நம் மனதில் பெரும் அதிர்வை தந்தாலும், தேவையற்ற உரையாடல்கள் அதை நீர்த்து போகச் செய்கிறது. ' நெருஞ்சி முள் படுக்கை ' அப்படியான ஒரு கதையாக இருக்கிறது. தந்தை, தம்பி யால் abuse செய்யப்படும் ஒரு பெண்ணின் ஆழ்மனவலியை கதையில் சரியாக பதிவு செய்ய தவறிவிட்டார் ஆசிரியர். 'அவிழ்க்கப்படாத முடிச்சுகள்' கதையின் முடிவும் லட்சுமி அத்தனை நாள் பட்ட துன்பத்தையும் 'என்னத்தா' என்று சலிக்கத்தான் வைக்கிறது. மாதவிடாய் காலத்தில் பெண்கள் படும் துயரங்களை சொல்லும் 'இது கேள்வியா ? இல்லை கேள்வி மட்டுமா ?', வறுமையின் போராட்டத்தை சொல்லும் 'நீர்க்கோலம் ' கதைகள் சிறப்பாக இருந்தது.
ஆண்கள் என்றாலே மோசமானவர்கள் என்ற பிம்பத்தை கொடுக்கிறது சில கதைகள். அதே போல் 'பெண்ணிற்கு பெண்ணே எதிரி ' என்பதை போல் ஒவ்வொரு கதையிலும் ஒரு பெண் கதாபாத்திரமும் இருக்கிறது. பெண்ணின் வாதையையும், வலியையும் இன்னும் உணர்வுபூர்வமாக எழுதி இருக்கலாம். மனதில் நிற்காமல் வாசித்த வேகத்தில் எளிதாக நம்மால் கடந்துவிட முடிகிறது. எழுத்து நடை எளிமையாக புரியும்படி இருந்தாலும், பெரும்பாலான கதைகளில் சீன் continuity இல்லாமல் இருப்பது வாசகருக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் விதம் இருக்கிறது. நன்றி.
Comments
Post a Comment