நூல் : பெரியார் பிராமணர்களின் எதிரியா ?
ஆசிரியர் : சோழ . நாகராஜன்
பதிப்பகம் : டிஸ்கவரி புக் பேலஸ்
சிறுவயதில் பள்ளியில் படித்த காலத்தில், பாட புத்தகங்களில் மட்டுமே தந்தை பெரியாரை பற்றி அறிந்து வைத்து இருந்தேன். கடவுள் மறுப்பாளர், பெண்ணடிமையை எதிர்த்தவர், மூட நம்பிக்கைகளை அகற்றி முற்போக்கு சிந்தனையை விதைத்தவர் என்ற அளவு மட்டுமே அறிந்திருந்த எனக்கு, மேலும் அவரை பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வத்தை இந்நூல் தருகிறது. பெரியார் பிராமணர்களின் எதிரியா ?' என்ற நூலின் தலைப்பே நமக்கு வாசிக்கும் ஆர்வத்தை தூண்டுகிறது. அதுவும் இன்றைய பார்ப்பன அரசியல் சூழலில், இந்நூல் மிகவும் முக்கியமானதாக புரிந்து கொள்ள முடிகிறது.
பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கையை வைத்து, அவரை ஒரு பார்ப்பன எதிரியாக கருதும் பிராமணர்களுக்கு இந்நூல் ஒரு கண்திறப்பை தரும் என்பது மிகையாகாது.
நூலை, பெரியாரின் காலத்தை குறிக்கும் படி மூன்று பாகமாக பிரித்து விளக்கி இருப்பது சிறப்பு.
வேதகாலத்தில் பிறப்பின் அடிப்படையில் இருந்த வர்ண பேதங்களில் ஆரம்பித்து அது கடவுளால் தீர்மானிக்கப் பட்டதாகவும், அவரே நினைத்தாலும் அதை மாற்ற முடியாது என்பதை போல் கற்பித்து, மனிதர்களுக்குள் சாதிய பிரிவினையை உண்டாக்கியதும், கடவுளின் பெயரில் இந்த பிரிவினையை உருவாக்கினாலும் அது இயற்கையாக நடந்ததாக நிறுவ முயற்சித்ததையும் விளக்கி, எளிய மக்களின் உழைப்பை சுரண்ட இந்த சாதிய பிரிவுகள் எப்படி உதவுகிறது என்பதையும் நமக்கு புரியும் வண்ணம் விளக்கி இருக்கிறார் ஆசிரியர். ஆண்டான் அடிமைகளாக இருந்த மக்களை, தெய்வங்களை வைத்து அச்சப்படுத்தி மதங்களை உருவாக்கியதையும், இதனால் ஏற்படும் இன வேற்றுமைகளுக்கு எதிராக சமணம், ஆசீவகம் போன்ற மதங்கள் களம் கண்டதையும் கூறுகிறார். இந்த சாதி, மத வேற்றுமையை கலைய புத்தர் காலத்தில் ஆரம்பித்து அது சங்கிலி தொடராக பெரியாரில் வந்து நிற்பதாக இருந்தாலும், இந்த 20 ஆம் நூற்றாண்டிலும் அதை கலைய முடியாதது வேதனையின் உச்சம்.
பெரும் அறிவாளிகளாக தங்களை நினைத்துக் கொண்ட பிராமணர்கள் முழுக்க முழுக்க மூட நம்பிக்கையில் சிக்கி இருந்ததையும் சொல்ல தவறவில்லை ஆசிரியர். ஆரியபாட்டா போன்ற மேதைகள் வாழ்ந்த இம்மண்ணில், சாதி, மத மூடநம்பிக்கைகளால் அறிவியல் வளர்ச்சியின்றி, முட்டாள்களின் கூடாரமாக இருப்பதாக உணர முடிவதை வேதனையுடன் பதிவு செய்துள்ளார் ஆசிரியர். பெண்களை அடிமைகளாக நடத்தி, கணவனை இழந்தவர்களுக்கு மொட்டை, முக்காடு போடுவதும், குழந்தை திருமணம் செய்வதும், கல்வி கற்க அனுமதிக்காமலும் பிராமணர்கள் செய்த மூடத்தனங்கள் சொல்லில் அடங்காதது. இத்தனையும் கலைய தனி ஒருவனாக வந்தவர் தான் பெரியார் அவர்கள். கடவுள், மதம், தலைவிதி போன்ற பிற்போக்குதனமான கற்பித்தங்களை உடைக்கவே பெரியார் கடவுள் மறுப்பை கையில் எடுத்தார் என புரிகிறது.
பிராமண துவெஷி என்று பெரியாரை அழைப்பவர்களுக்கு தெரியாது, அவர் தனிப்பட்ட பிராமணரை வேற்றுமை பாராட்டியதில்லை என்பது. சிருங்கேரி மடாதிபதி சங்கராச்சரியாருக்கு பெரியார் எழுதிய கடிதமே அதற்கு சாட்சியாகும். கருத்தியல் வேறுபாடு இருந்தாலும் பெரியார் அவருக்கு கொடுத்த மரியாதை இதை புலப்படுத்தும். அதே போல் ராஜாஜியுடன் இருந்த நட்பையும் குறிப்பிடலாம். பல முரண் கருத்துகள் கொண்ட இருவர் இவ்வளவு நட்புடன் இருப்பது சிறப்பான விஷயம். தொடர்ந்து எஸ். எஸ். வாசனுடன் இருந்த நட்பு என அவர் பிராமணர்களுடன் நெருங்கிய நட்பை விளக்குகின்றன.
அதேபோல் பிராமண துவெஷி என்ற பதத்தை பொய்யாக்கும் வகையில் நடந்த சில சாம்பவங்களையும் விவரித்துள்ளார் ஆசிரியர். பல மாநாடுகள் , கூட்டங்களில் பேசிய பெரியாரின் முக்கிய கருத்துக்களையும், உரைகளையும் சுருக்கி அளித்திருப்பது சிறப்பு. வாசிக்கும் நமக்கு புரிந்ததா என்பது போல் ஆசிரியர் கேள்வி கேட்டுக்கொண்டே வருவது ஏதோ ஆசிரியரிடம் படிக்கும் மாணவர் போல் நம்மை கருதச் செய்கிறது. அதுவே மேலும் பெரியாரைப் பற்றிய தேடுதலில் நம்மை கொண்டு விடுகிறது.
இன்றைய இந்துத்துவ அரசியல் களத்தில், மதத்தின் பெயரில் அடிக்கும் கூத்துகளை பார்க்கும் பொழுது எங்கே நாம் கற்காலத்துக்கு சென்று விட்டோமோ என்ற ஐயம் ஏற்படுவதை தடுக்க முடியவில்லை. இந்த கூத்துக்களை முடிவுக்கு கொண்டு வர இன்னொரு பெரியார் தேவையில்லை. அவரின் கொள்கைகளை நாமே செயல்படுத்தினாலே போதும் என்ற புரிதல் வருகிறது.
அதோடு 'பெரியார் பிராமண துவெஷி இல்லை ' என்பதை யாருக்கும் நிறுவும் அவசியம் இருக்கிறதா என்ற கேள்வியும் எழுகிறது. ஆனால் இன்றைய தலைமுறைக்கு பெரியாரை பற்றி நாம் சொல்லியே ஆக வேண்டிய கட்டாயம் இருக்கிறது. வரலாற்றின் பக்கங்களை இளைய தலைமுறைக்கு நினைவூட்ட வேண்டிய நிலை இருப்பதால், இந்த நூலின் தேவை முக்கியமானது. இந்நூல் நமக்கு ஒரு பாடமாக அமைந்திருப்பது போல் உள்ளதால் ஒரு புரிதலையும், பல திறப்புகளையும் கொடுக்கிறது என்பது மிகையல்ல. நன்றி.
Comments
Post a Comment