நூல் : யூதாஸின் நற்செய்தி
ஆசிரியர் : கே. ஆர். மீரா
பதிப்பகம் : எதிர் வெளியீடு

K. R. மீரா... மனதுக்கு நெருக்கமான என் ஆதர்ச எழுத்தாளர். அடிஆழ இருட்டில் இருக்கும் பெண்களின் மன உணர்வுகளை வெளிச்சம் போட்டு காட்டுபவர். அவரது  நாவல்களில் வரும் பெண் கதாபாத்திரங்கள், மனவலிமை கொண்ட பெண்களாக இருக்கிறார்கள். அது காதலானாலும் சரி, போராட்டம் ஆனாலும் சரி.

இந்திராகாந்தி பிரதமராக இருந்த நேரம் நடைமுறை படுத்தப்பட்ட நெருக்கடிநிலை காலத்தில் நடந்த வன்முறை கொடுமைகளை புனைவின் ஊடாக கொண்டு எழுதி இருக்கும் நாவல் ' யூதாஸின் நற்செய்தி'.

யூதாஸ் என்றாலே நமக்கு கர்த்தரை காட்டிக்கொடுத்த ஒரு மனிதன் தான் ஞாபகம் வருவான். அதே போல் தன் சக போராளியை காட்டிகொடுத்த ஒரு மனிதனை பற்றிய கதை இது. தாஸ் என்பவன் எப்படி யூதாஸாக மாறி எவ்வாறு நிம்மதி இழந்து தவிக்கிறான் என்பதை பிரேமாவின் மயிலிறகு காதலோடு சொல்லி இருக்கிறார் மீரா.

ஆற்றில் சிக்கி இறக்கும் மனிதர்களின் சடலங்களை தேடி எடுத்து கரையில் போடும் வேலைக்காரனாக அறிமுகமாகும் யூதாஸை விரும்புகிறாள் 15 வயதுடைய பிரேமா. நெருக்கடி காலத்தில் தன் தந்தையால் கொடூர தாக்குதலுக்கு உட்பட்ட போராளியான தாஸை விரும்ப வேறு எந்த காரணமும் அவளுக்கு தேவை படவில்லை. சிறுவயதில் இருந்து தன் தந்தையின் கொடூர வசை சொற்களாலும், தாக்குதல்களுக்கும் ஆளான அவளுக்குமே, பாசிச மனநிலை கொண்ட தந்தையிடம் இருந்து விடுதலை தேவைபட்டது.

ஆனால் தாஸ் தன்னை ஒரு போராளியாக வெளிக்காட்டி கொள்ளாமல், தன் சக போராளி சுனந்தாவை காட்டி கொடுத்த குற்றவுணர்ச்சியில் இருக்கிறான். எப்பொழுதும் சுனந்தாவின் நினைவில் இருப்பவனுக்கு, பிரேமாவின் காதலை ஏற்க முடியாமல், அவளை விட்டு விலகுகிறான். எவ்வளவு விலகினாலும் 'நான் உனக்கானவள் ' என்று அவனை அடைய எந்த எல்லைக்கும் செல்கிறாள்.

அதிகாரத்தின் கைப்பிடியில் சிக்கி சின்னாபின்னமாக்கும் போராளிகளின் வாழ்க்கையை வாசிக்கும் பொழுது மனம் ரணம் ஆகிறது. ரத்த வீச்சம் தெறிக்க ஆசிரியர் எழுதிய அந்த காட்சிகள் வரலாற்றின் கறுப்பு பக்கங்களாக இருப்பது புரிகிறது. அதிகாரத்தின் கண்ணோட்டத்தில் பரமேஸ்வரன் என்கிற 'மிருகம்' சொல்லும் காரணங்கள் கொஞ்சம் பரிதாபத்தை தருகிறது. 'எத்தனையோ அரசாங்க பணியில் இருக்கையில் சட்டுவமாக தான் தேர்ந்தெடுக்கபட்டதை' நினைத்து அவர் புலம்பும் பொழுது நம் கோவம் அரசாங்கத்தின் மேல் திரும்புகிறது. அரசாங்கத்தின் அனுமதியோடு அதிகாரத்தை கையில் எடுக்கும் எவரும் இன்னொரு பரமேஸ்வரன் ஆகவோ இல்லை வாசுதேவனாகவோ தான் இருப்பர் என்பது நிதர்சன உண்மை.

மீராவின் பெண்களுக்கு பலம், பலவீனம் எல்லாம் காதலாகத்தான் இருக்கிறது. அவர்களின் அன்பு வாசிக்கும் நமக்கு மூச்சு முட்டுவது போல் உள்ளது. விலகி விலகி செல்பவனிடம் தன் காதலின் ஆழத்தை உணர்த்த பிரேமா இறுமாப்புடன் ஒவ்வொரு தடவையும் அணுகும் பொழுதும், அந்த சந்தோஷ தருணம் சில நிமிடங்களில் கை விட்டு போகும் பொழுதும் அவளை ஒரு பரிதாபத்திற்கு ஆளான பெண்ணாகத்தான் பார்க்க முடிகிறது.

'என்னை அழ வைப்பதற்கு நான் அவனை மட்டுமே அனுமதிப்பேன்...'

'என்னை ஏமாற்றுவதற்கு நான் அவனை மட்டுமே அனுமதிப்பேன்...'

ஒருவனிடம் சரணாகதி மனநிலையோடு இருந்தால் மட்டுமே இப்படியாக எண்ணி ஒரு பெண்ணால் வாழ முடியும். காதலின் பலம் அவளையும் ஆற்றில் இறங்கி சடலத்தை தேட வைக்கிறது. பிரேமா மட்டுமின்றி சுனந்தா, சங்கீதா போன்ற பெண்களும் அசாத்திய வலிமை கொண்ட பெண்களாக இருக்கிறார்கள்.

மோ. செந்தில்குமார் அவர்களின் மொழிபெயர்ப்பு கதையின் உயிரோட்டத்தை அப்படியே தக்க வைத்திருக்கிறது. கதை மாந்தர்களின் மன உணர்வுகளை தன் மொழிபெயர்ப்பின் வழி நம் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார்.

போராட்டங்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அதிகாரத்திற்கு எதிராக ஒரு மக்கள் கூட்டம் போராடி கொண்டுதான் இருக்கிறது. அதில் பல உயிர்கள் மாண்டு கொண்டிருந்தாலும், போராட புதியவர்கள் ஜனித்து கொண்டே தான் இருக்கிறார்கள். சுனந்தா, சங்கீதாவிற்கு பின் பிரேமாவும் தான்... நன்றி.

Comments