ரேமண்ட் கார்வர் எழுதிய What we talk about when we talk about love? என்ற கதையின் உள்ளடக்கத்தை வைத்து எழுதப்பட்ட குறுநாவல் 'உண்மையான காதல் '.
கதையாக இல்லாமல், காதலை பற்றிய தர்க்க உரையாடல்களாக செல்கிறது நாவல். சமீபத்தில் பார்த்த '
ஆயிரதோன்னு நுனகல்
' 'ஆட்டம்' போன்ற மலையாள திரைப்படங்களில் வருவது போல் ஒரே இடத்தில் 10 நபர்கள் கூடி பேசுவதை, நாம் கேட்பது /வாசிப்பது புது அனுபவமாக இருந்தது. Conversation குள்ளே சென்று நாமும் சில கருத்துகளை முன்வைக்கலாம் போல் ஆர்வத்தை தூண்டுவது ஆசிரியரின் எழுத்தின் வலிமை என்றே சொல்லலாம்.
காதல் என்றாலே புனிதமானது, ஒரு செடியில் ஒரு ரோஜாப்பூ தான் பூக்கும் போன்ற சினிமா வசனங்களை கேட்டு, காதலை glorify பண்ணி கொண்டிருப்பவர்களுக்கு இந்நாவல் ஒரு அதிர்வை தருவது உறுதி.
காதல் என்பது ஒரு உணர்வு மட்டுமே. ஆனால் அதை ஏன் ஒரு உறவுமுறைக்குள் அடக்குகிறோம் என்ற கேள்வியில் இருந்து ஆரம்பமாகிறது உரையாடல். உணர்வை அனுபவிப்பதை விட்டுவிட்டு, அதை வைத்து மனிதர்களை ஒரு உறவுமுறைக்குள் அடக்குவது சரியானதாக இல்லாது போனதால் தான் பல சிக்கல்களை சந்திக்கிறது இந்த காதல் என்ற கருத்து சரியானதாகவே படுகிறது.
காதல் என்றாலே டிரான்ஸ்பரன்சி இருக்க வேண்டும் என்பது ஒருவருக்கு ஒருவர் கொடுக்கும் மறைமுக அழுத்தமே என்று அஸ்வத் சொல்லுவது முழுக்க உண்மையாகவே படுகிறது. காதலுக்கு ஆளுக்கு ஒரு எதிக்ஸ்யை வைத்துக் கொண்டு relationship குள் சண்டையிட்டு கொள்ளும் பொழுது அங்கு அன்புக்கு ஏது இடம் என்ற கேள்வி எழுகிறது.
போகிற போக்கில் இன்பா சொல்லும் சில காதல் அனுபவங்கள் பகீர் ரகம். அந்த சைக்கோத்தனமான செயல்களையும் அவள் காதல் என்று உளறும் பொழுது, இப்படித்தானே நிஜ உலகில் பல பெண்கள் ஏமாறுகிறார்கள் என தோன்றுகிறது. அதற்கும் அஸ்வத்தின் விளக்கம் ஏற்புடையதாக உள்ளது.
சைக்கோத்தனமான இன்பாவின் காதலும் சரி, புனிதமாக காதலித்த நரேனின் காதலும் சரி, இறுதியில் காதல் முறிவில் கொண்டு போய் விடுவது, காதலின் எதார்த்த உலகை காட்டுகிறது. காதலுக்கும் நல்லது, கெட்டது இல்லை என்று புரிகிறது.
எழுத்தாளராக அறிமுகமாகும் அஸ்வத் கதையின் முக்கிய கதாபாத்திரமாக வந்து காதலை அண்டர் ரேட்டட் கன்டென்டாக மாற்றி விட்டு செல்கிறார். மொத்தத்தில் காதல் உரையாடல் சுற்றி சுற்றி இறுதியில் காமத்தில் வந்து நிற்கிறது. காதல் என்றாலே காமம் மட்டும்தான் என்று சொல்லும் இடத்தில் எனக்கு ஏற்புடையாதாக இல்லை. பொத்தாம் பொதுவாக அப்படி சொல்லிவிட முடியாது. இன்றும் தீவிரமான நல்ல காதல்கள் இருக்கத்தான் செய்கிறது. இப்போ எனக்கே ஒரு கேள்வி தோன்றுகிறது, 'நல்ல காதலுக்கு எது வரையறை' என்று.
கதை ஒரு எலைட் தன்மையுடன் இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட மக்களின் மனநிலையை மட்டும் பேசியது போல் உள்ளது. இன்னும் விரிவாகக் கூட உரையாடி இருக்கலாம்.
சிறப்பான வாசிக்க தூண்டும் விமர்சனம் 👏 வாழ்த்துகள் 💐
ReplyDeleteThank u
Delete