நூல் : காஷ்மீர் குருதியால் சிவக்கும் ஆப்பிள்
ஆசிரியர் : களப்பிரன்
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்

பல வருடங்களாக, சொந்த நாட்டில் அகதிகளாக வாழும் காஷ்மீர் மக்களின் நிலையை ஒரு சிறிய நூலில் அடக்கிவிட முடியுமா ? எந்த நாட்டுக்கு நாம் சொந்தமானவர்கள் என்ற கேள்வியுடன், எப்பொழுதும் ராணுவ கட்டுப்பாட்டுக்கு அடங்கி வாழப் பழகியவர்களின் மன வேதனையை சொல்லில் அடக்க முடியாதுதான். ஆனால் அரைகுறையாக தெரிந்து வைத்துக் கொண்டு காஷ்மீர் அரசியல் பேசும் சிலருக்காவது உண்மை நிலையை எடுத்துக் காட்டும் பொறுப்பு இருக்கிறது என்பதை செயலில் காட்டி இருக்கிறார் ஆசிரியர் களப்பிரன்.

ஆசிபா கொலை வழக்கை வெளி உலகிற்கு கொண்டுவந்த கம்யூனிஸ்ட் தோழர் யூசுப் தாரிகாமி அவர்களோடு நடந்த உரையாடலை நூலாக வெளியிட்டுளார் ஆசிரியர். காஷ்மீரை பற்றிய ஒரு ஆவண பதிவாகவே இருக்கிறது இந்த நேர்காணல். காஷ்மீர் வரலாறு, காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து, கல்வி, வேலைவாய்ப்பு, இந்திய காஷ்மீர் இணைப்பு என காஷ்மீரின் ஒட்டு மொத்த வரலாற்றையும் சிறு குழப்பம் கூட இல்லாமல் நமக்கு புரியும் வண்ணம் எழுதியுள்ளார் ஆசிரியர்.

இக்கட்டுரையில் பல புதிய தகவல்களை அறிய முடிந்தது. இந்திய பிரிவினைக்கு ஜின்னாதான் காரணமாக இருந்தார் என நான் இது வரை கருதி இருந்தேன். ஆனால் சாவர்க்கருக்கும் இதில் பங்குண்டு என புரிகிறது. தனி சமஸ்தானமாக இருந்த காஷ்மீர் எப்படி இந்தியாவுடன் இணைந்தது என்பதையும், பெரும்பாலும் இஸ்லாமிய மக்கள் வாழ்ந்த காஷ்மீர், பிரிவினையின் பொழுது பாகிஸ்தான் பக்கம் செல்லாமல் இந்தியாவில் இணைய எப்படி சம்மதித்தது என்பதையும், அதற்கு உறுதுணையாக இருந்த இடதுசாரிகளை பற்றியும் விரிவாக எழுத்துள்ளது சிறப்பு. தேசப்பிரிவினையின் பொழுது ஒரு கலவரம் கூட நடக்காத அமைதி தேசமான காஷ்மீர் ஏதோ தீவிரவாத தேசம் போல, இன்றைய ஒன்றிய அரசு சித்தரிப்பது அபத்தம்.

காஷ்மீர் மக்களின் அடிப்படை உரிமைகளை பறித்து, எப்பொழுதும் சந்தேகக் கண் கொண்டு அவர்களை நடத்துவதும், காஷ்மீர் இளைஞர்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளை பற்றிய அக்கறை சிறிதும் இல்லாமல் அவர்களை தனி தீவில் வசிப்பதை போல் நினைக்க வைத்து, அவர்களின் வாழ்வாதாரத்தை சிதைக்கிறது இன்றைய ஒன்றிய அரசு. காஷ்மீர் இளைஞர்களுடன் ஆசிரியர் நடத்திய உரையாடலில், அவர்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளை பற்றி அறிந்து கொள்ள முடிகிறது. படித்த இளைஞர்கள் கூட டீ விற்பவறாகவோ, குதிரை ஓட்டுபவறாகவோ இருக்கின்றனர். ஒன்றிய அரசு பதவி ஏற்ற நாள் முதல் இன்று வரை அவர்களுக்கு கல்வியிலோ, வேலைவாய்ப்பிலோ எந்த முன்னேற்றத்தையும் தராமல் முடக்கி போட்டு வைத்துள்ளது வேதனையின் உச்சம். எந்த நேரமும், ஊரடங்கு, இணைய சேவையை துண்டிப்பது என்று மாணவர்களின் கல்வியை பாழ்படுத்தி இருப்பது புரிகிறது.

மன்னராட்சிக்கு எதிராக,  மார்க்சிய சிந்தாந்தம் கொண்ட ஷேக் அப்துல்லா ஆரம்பித்த 'தேசிய மாநாட்டுக் கட்சி ' யின் 'நயா காஷ்மீர் ' திட்டம்,  அவருடன் தோள் கொடுத்து காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்த கம்யூனிச தலைவர்கள், காஷ்மீர் ஆப்பிள் பொருளாதாரம் என பல தகவல்களை நமக்கு தருகிறது இந்நூல். இந்திய இணைப்பின் பொழுது காஷ்மீருக்கு கிடைத்த சிறப்பு அந்தஸ்து சட்டத்தை, ஒன்றிய அரசு ரத்து செய்தது எவ்வளவு கீழ்த்தரமான செயல் என்பது காஷ்மீரின் வரலாறு தெரிந்தவர்களுக்கு மட்டுமே புரியும். மதச்சார்பற்ற காஷ்மீரை, மத அரசியல் செய்யும் ஒன்றிய அரசிடம் எந்த தீர்வையும் எட்ட முடியாத நிலையில் அம்மக்களுக்கு நாம் துணை நிற்பது மட்டுமே வழியாகப் படுகிறது.

காஷ்மீர் பற்றி ஊடகங்கள் வழியே நாம் அறிந்து வைத்திருப்பது சொற்ப விஷயங்கள் மட்டுமே என்பதை இந்நூல் நமக்கு புரியவைக்கிறது. அதோடு காஷ்மீரை பற்றி மேலும் அறிந்து கொள்ளும் ஆர்வமும் தருகிறது. காஷ்மீரை பற்றி மேம்போக்காக தெரிந்து வைத்திருந்த எனக்கு மேலும் தேடி வாசிக்கும் ஆர்வத்தை கொடுத்தது இந்நூல். நன்றி.

Comments