நூல் :தாஸ்தோவ்ஸ்கி சிறுகதைகள்
தமிழில் : சி. எஸ். வெங்கடேஸ்வரன்

ரஷ்ய எழுத்தாளர் தாஸ்தோவ்ஸ்கியின் ஆறு சிறுகதைகள் கொண்ட தொகுப்பு நூல். தமிழில் சி. எஸ். வெங்கடேஸ்வரன் மொழி பெயர்த்துள்ளார்.

தாஸ்தோவ்ஸ்கியின் 'வெண்ணிற இரவுகள்' மட்டுமே வாசித்திருந்த எனக்கு, அவரின் சிறுகதைகள் புதிய அனுபவத்தை கொடுத்தது. நேர்கோட்டுச் சிறுகதைகளாகவே வாசித்து பழகி இருந்த எனக்கு இக்கதைகள் கொஞ்சம் திணறச் செய்தது எனலாம். கதை ஒரு சம்பவத்தில் ஆரம்பித்து, பல முடிச்சுகளில் சிக்கி இறுதியில் ஆரம்பித்த இடத்திற்கே வருகிறது. அதற்குள் பல மனிதர்களின் மன எண்ணங்களையும், உண்மை முகங்களையும் புனைவின் வழி கதைக்கு உயிர் கொடுத்து இருக்கிறார். கனவிலும், நிஜத்திலும் உள்ள உலகை வித்தியாசப் படுத்துகிறது ஒவ்வொரு கதையும்.

ஒரு சிறுவன் இறக்கும் தருவாயில் அவனுக்குள் நடக்கும் ஆழ்மன பதற்றத்தை குறிக்கும் கதை 'ஸ்வர்க்கத்தில் கிருஸ்துமஸ் மரம் '. இறப்பின் கடைசி நொடியில், ஆன்மா வெளியேறியும், பின் மறுபடி உடலுக்குள் செல்வதுமாக இருக்கும் கோட்டில் கதை நிற்கிறது. சிறுவனின் மனம் ஸ்வர்கத்திற்கு சென்று அங்கு கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் பங்குபெறுவது போலவும், பின் திரும்புவதுமாக இருக்கிறது. ஆசிரியருக்கு இக்கதை எழுதும் பொழுது ஸ்வர்க்கம் இருப்பதில் உள்ள சந்தேகம் நமக்கும் ஏற்படுகிறது. ஆனால் தாயும், மகனும் ஸ்வர்க்கத்தில் இணைந்து நிம்மதியாக இருக்க போவது கண்டிப்பாக நமக்கு சந்தோஷத்தை கொடுக்கிறது.

ஒரு திருடனை இதை விட நேர்மையாக காட்டி இருக்க முடியாது. திருட்டு தொழில் செய்தாலும் அவனை நல்லவனாகவே அஸ்டாபியால் பார்க்க முடிகிறது. இறக்கும் தருவாயில் தன் தவறை ஒப்புக்கொள்ளும் திருடனை நேர்மையான மனிதனாகவே பார்க்கிறான் அஸ்டாபி. திருடன் தன் தவறுக்கு பிராயச்சிதமாக தன் பழைய கோட்டை விற்க அஸ்டாபியிடம் கேட்கும் பொழுது நம் மனம் கனத்துப் போகிறது. அந்த 'நேர்மையான திருடன்' நம் மனதில் நீங்காத பாரத்தை இறக்கி வைத்து செல்கிறான்.

புனைவின் உச்ச நிலையை தொட்டிருக்கிறது 'பிறர் கேலிக்கு ஆளானவனின் கனவு' சிறுகதை. பிறர் கேலிக்கு ஆளாகும் ஒருவனின் கனவே கதை. உலகில் நடக்கும் வேறு எதுவுமே அவனுக்கு பொருட்டாக தெரியாத அளவு, பிறர் செய்யும் கேலி அவனுக்கு பெரும் மனஉளைச்சலுக்கு தள்ளுகிறது. இதுவே அவனை தற்கொலைக்கு தூண்டுகிறது. ஆனால் அவனிடம் உதவி கோரிய ஒரு சிறுமியால் அவன் தற்கொலை எண்ணம் கைவிடப்படுகிறது. அந்த இரவு அவன் காணும் கனவே அவனை ஒரு புது மனிதனாக உருவாக்குகிறது. கனவில் அவன் காணும் புது உலகத்தை நிஜத்தில் உருவாக்க அவன் எடுக்கும் முதல் படியாக அந்த சிறுமியை தேடி செல்வதோடு முடிகிறது கதை. கதையில் வரும் கனவு உலகம் நம் அனைவருமே விரும்பும் உலகு. போட்டி, பொறாமை, வன்மம் இல்லாத உலகை யாருக்கு தான் பிடிக்காது. கதையின் நாயகனை போல் நாமும் அவ்வுலகுக்குள் செல்ல ஆயத்தமாவோம்.

கல்லறை மனிதர்களின் பேச்சுகளை கேட்கும் ஒரு எழுத்தாளனின் எண்ணப் போக்கை சொல்கிறது 'போகோக்' சிறுகதை.

கதைகளில் பெரும் அயர்ச்சியாக இருந்தது கதைகளின் கதாபாத்திரங்களின் பெயர்களை உச்சரிக்கவும், ஞாபகத்தில் வைத்துக் கொள்வதும் தான். இது கதாபாத்திரங்களோடு நம்மால் ஒன்ற முடியாமல் கதையை எளிதாக கடந்து விடச் செய்கிறது. ஆனாலும் அவர் எழுத்தின் ஆழம் நம்மை உள்ளிழுக்காமல் இல்லை. மேலோட்டமாக வாசிக்காமல், ஆழ்ந்து கதை மாந்தர்களுடன் பயணிக்கும் அனுபவத்தை நாம் பெற வேண்டும். அதற்கு அவரின் ஏனைய படைப்புகளையும் வாசிக்க வேண்டும் என்ற புரிதல் கிடைக்கிறது. நன்றி.

Comments