நூல் : பற் சக்கரம்
ஆசிரியர் : எஸ். தேவி
வறுமையின் கொடிய கரங்களில் சிக்கி தவிக்கின்ற இளம் பெண்களை அதில் இருந்து மீட்டு ஆலைகளின் பற் சக்கரத்தில் சிக்க வைக்கும் 'சுமங்கலி திட்டத்தை' மையமாக வைத்து, எழுத்தாளர் எஸ். தேவி அவர்கள் எழுதி இருக்கும் நாவல் 'பற் சக்கரம்'. இந்நாவல் 2023 ஆம் ஆண்டு ஸீரோ டிகிரி இலக்கிய விருது போட்டியில் மூன்றாம் பரிசு பெற்றது.
நேரடி கதையாக இல்லாமல் கதை நாயகி ரம்யாவின் வாழ்வில், வெவ்வேறு காலங்களில் நடக்கும் சம்பவங்களை கோர்த்து non linear முறையில் எழுதி இருப்பது சிறப்பு. பெரும்பாலும் இது போன்ற கதைகளில் வரும் குழப்பங்கள் எதும் இந்த நாவலில் இல்லாமல் மிக நேர்த்தியாக இருப்பது அருமை.
பொறுப்பற்ற தன் அண்ணனின் செயலால், கடனுக்கு எழுதிக் கொடுத்த தங்கள் வீட்டை மீட்க வேலைக்கு செல்ல நிர்பந்திக்கப் படுகிறாள் ரம்யா. மூன்று வேலை உணவிற்காக மூன்று வருட ஒப்பந்தந்தில் சிறை கைதியை போல் மாட்டிக்கொள்ளும் பல இளம்பெண்களின் வேதனையை இவளும் அனுபவிக்க நேர்கிறது. மூன்று பவுன் தங்கம் தருவதாக சொல்லி அவர்களின் மொத்த உழைப்பையும் சுரண்டுகிறார் ஆலை முதலாளி. முதலாளியின் சொந்த பிள்ளைகளை போல் நடத்துவதாக சொல்லி இளம் பெண்கள் உணர்வு ரீதியாக நம்ப வைக்கப்படுகிறார்கள். ஆலை இயந்திரம் ஒரு நிமிடம் கூட நின்று விடக் கூடாது என்ற நோக்கத்தில் ஷிப்ட் முறையில் பெண்களை பிரித்து வேலை வாங்குவது அராஜகமாக தெரிகிறது. பெண்களின் மாதவிடாய் காலங்களில் கூட அவர்களுக்கு ஓய்வு கொடுக்காமல் வேலை வாங்கும் உழைப்பு சுரண்டல் மட்டுமின்றி பாலியல் சுரண்டைலும் அங்கு நடப்பதாக அறியும் பொழுது அதிர்ச்சியாக இருக்கிறது. அதை தட்டிக்கேட்டால் வேறு ஆலைக்கு அவர்களை மாற்றி விடும் அடாவடித்தனமும் நடக்கிறது. இதில் இருந்து ரம்யா மீண்டாளா ? அவள் தோழிகளின் நிலை என்னவாகிறது ? என நீள்கிறது கதை.
இன்றும் பல தொழில் நகரங்களில், இளம் பெண்களை பிடித்து போடும் ஏஜென்ட்களின் அராஜகம் நடக்கத்தான் செய்கிறது. திருமண வயதை நெருங்கும் பெண்களுக்கு ஆசை வார்த்தை கூறி, பெற்றோர்களை சம்மதிக்க வைத்து சம்பளம் இல்லா வேலைக்காரர்களாக ஆலைகளுக்கு அனுப்பி வைக்கின்றனர். இது போன்ற ஆலைகளுக்கு எதிராக அரசு என்ன நடவடிக்கை எடுக்கிறது என்ற கேள்வி எழுகிறது.
இதன் ஊடே ரம்யாவின் குடும்பத்தின் நிலையையும் சொல்கிறது கதை. சோடா தொழிலில் நன்றாக வாழ்ந்த ரம்யாவின் குடும்பம் சில காலம் கழித்து நொடித்து போய், மூன்று மகன்களின் பொறுப்பற்ற செயலால் சின்னாபின்னமாகி மொத்த குடும்பமும் கடனில் மூழ்கி போன கதை இன்னும் சுவாரசியமாக இருந்தது.
இதில் எனக்கு மிகவும் தொடர்புடைய கதாபாத்திரம் ரம்யாவின் அம்மா ராஜம்மா. கணவனின் சிறு வருமானத்தில் ஆறு குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பும், வாசிப்பின் மேல் அவளுக்கு இருந்த ஈடுபாடும் எனக்கு என் அம்மாவை ஞாபகப் படுத்தியது. வீடு முழுக்க இறைந்து கிடக்கும் அம்மா வாசிக்கும் வார இதழ்களே எனக்கும் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தியது. வாசிப்பின் அவசியத்தை முன்னிறுத்தி ஒரு கதாபாத்திரம் இருப்பது கதைக்கு மேலும் மெருகூட்டியிருக்கிறது எனலாம். எவ்வளவு படித்த பெண் என்றாலும் கணவனின் கட்டுப்பாடும், குடும்ப சூழலும் அவளை அடுத்த நிலைக்கு செல்ல விடாமல் தடுத்து விடுகிறது. புத்தகங்கள் வாங்கக்கூட அடுத்தவர் கையை எதிர்பார்த்து இருக்கும் நிலைமையை கொண்ட ராஜம்மா காலம் கடந்து அச்சு கோர்க்கும் வேலையில் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்கிறாள்.
அதே போல் சுப்பையா கதாபாத்திரம்.. ஒரு நிஜ அரசியல்வாதியின் சாயலை அப்படியே கதையில் உலவ விட்டிருப்பது அருமை. தன் சுயலாபத்திற்காக, மூன்று குடும்பங்களுக்கு இடையே நடக்கும் பஞ்சாயத்து சம்பவத்தை அவ்வளவு நேர்த்தியாக எழுதியுள்ளார் ஆசிரியர்.
கதையின் காலம் 80 களில் நடப்பதாக ஆசிரியர் ஒவ்வொரு காட்சியிலும் உணரவைக்கிறார். டெலிபோன் இணைப்பு, காஸ் இணைப்பு, சோடா கடை என காட்சிகள் விரிகிறது. வாசிக்க எளிதான, தடங்கல் இல்லாத விறுவிறுப்பான மொழிநடை.
இறுதி வரை ஆலை முதலாளியை நல்லவராகவே காட்சிப் படுத்தியது ஏன் என்ற கேள்வி எழுகிறது. மூன்று வேளையும் நல்ல உணவு கொடுப்பவர், அப்பா ஸ்தானதில் இருப்பவர், பெண்களுக்கு பாதுகாப்பான இடம் கொடுத்தவர் என அந்த கதாபாத்திரம் இறுதி வரை நல்லவராகவே காட்சிபடுத்தும் பொழுது, அங்கு வேலை பார்க்கும் பெண்களின் கஷ்டங்கள் நீர்த்து போவது போல் எனக்கு தோன்றியது. அதோடு ரம்யாவின் அம்மா முதலாளியின் காலில் விழ சொல்வதும் ஒப்புக்கொள்ள முடியவில்லை.
சிறுவயதில் இருந்து தைரியமான பெண்ணாக இருக்கும் ரம்யா கால சூழலில், அவளுடைய இயல்பான குணங்கள் நீர்த்து போகும் அளவு வாழ்க்கை பாடம் அவளை அலைகழித்து விடுகிறது. பாடுபட்டு உழைத்து சேர்த்த பணத்தில் மீட்ட தங்களுக்கு சொந்தமான வீட்டைக் கூட பங்கு கேட்க முடியாத அவலநிலைக்கு தள்ளப்படுவது, வாழ்வின் உண்மை நிலையை நமக்கு முகத்தில் அறைவது போல் சொல்கிறது. நன்றி.
Comments
Post a Comment