நூல் : சேங்கை
ஆசிரியர் : கவிப்பித்தன்
பதிப்பகம் : நீலம் பப்ளிகேஷன்ஸ்

லாரி தொழிலாளர்களின் வாழ்க்கை பாடுகளை சொல்லும் நாவல் 'சேங்கை'. விகடன் நம்பிக்கை விருது, புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது போன்ற பல விருதுகளை பெற்றுள்ள எழுத்தாளர் கவிப்பித்தன் அவர்கள் எழுதியுள்ளார். விவசாய குடும்பத்தில் பிறந்து தற்போது ராணிப்பேட்டை மாவட்டத்தில் வசிக்கின்ற கவிப்பித்தன் அவர்கள் இதுவரை மூன்று நாவல்கள், மூன்று கவிதை தொகுப்புகள் மற்றும் ஆறு சிறுகதை தொகுப்புகள் வெளியிட்டுளார்.

நம் வாழ்வின் அன்றாட அத்தியாவசிய பொருட்களை நமக்காக ஒரு இடம் விட்டு வேறொரு இடம் சேர்க்கும் லாரி தொழிலாளர்களின் துயரங்கள் நமக்கு எள்ளளவும் தெரிய வாய்ப்பில்லை. வியர்வை நனைந்த காக்கி சட்டையுடன் சாலைகளில் அவர்களை பார்க்கும் பொழுது, அவர்களை ஒரு மதிப்பிற்குரிய மனிதனாக நாம் நினைக்காமல் கடந்து சென்றிருப்போம். குடும்பத்தை பிரிந்து பல நாட்கள் வேலையின் காரணமாக ஊர் ஊராக சுற்றும் அவர்களின் சோகக் கதைகளை விவரிக்கிறது  இந்நாவல். அதோடு லாரி வாடகை விடும் லாரி ஆபிஸில் நடக்கும் சம்பவங்களையும் சேர்த்து சொல்லி இருக்கிறார் ஆசிரியர்.

பாவனா டிரான்ஸ்போர்ட்ஸில் வேலை செய்யும் மணி, சுந்தர் தான் கதையின் பிரதான கதாபாத்திரங்கள். கிராமத்தில் வளர்ந்து பட்டதாரியாக சென்னை வரும் பல இளைஞர்களின் முகமாக அவர்கள் இருக்கிறார்கள். சரியாக ஆங்கிலம் பேச தெரியாமல், மனிதர்களுடன் பேசக் கூட தாழ்வுமனப்பான்மையுடனும்,    முதலாளி சொல்லும் வேலையை மட்டும் செய்பவர்களாக இருக்கிறார்கள்.

லோடு ஏற்றவும், தேவைப்பட்டால் வெளியூர் சென்று லோடு இறக்கவுமாக அவர்களின் பணி தூக்கத்தையும், பசியையும் பொருட்படுத்த இடம் தராமல் ஓடவைக்கிறது. ஆபீஸ் லாரி கிடைக்கவில்லை என்றால் புரோக்கரிடம் சொல்லி லாரி எடுப்பது, அதில் நடக்கும் பித்தலாட்டங்கள், சொற்ப்பமாக கிடைக்கும் லோடிங் மாமூலை பல பேர் பங்கிட்டு கொள்வதும், லாரி தாமதமாக சென்றால், ஆலை இன்ச்சார்ஜ்களை சமாதான படுத்தி, நேரத்தை கடத்தி வேறு லாரிகளை ஏற்பாடு பண்ணுவதுமாக அவர்களின் தினசரி பாடுகளை விவரிக்கிறது நாவல்.

வழியில் நடக்கும் கொள்ளை சம்பவங்கள், கொலைகள் என அனைத்தையும் மீறி சரக்கை கொண்டு சேர்க்கும் டிரைவர்க்கு கிடைக்கும் சம்பளமோ மிகவும் குறைவு என்பதால், சில டிரைவர்கள் செய்யும் பித்தலாட்டங்களையும் சொல்ல தவறவில்லை ஆசிரியர். பாலியல் தொழிலாளர்களிடம் சென்று நோய்களை பெற்று தங்கள் குடும்பத்திற்கும் டிரைவர்கள் பாரமாக இருப்பது வருத்தத்திற்குரியது.

லாரி தொழிலில் ஏற்படும் நஷ்டங்கள், டோல் கேட், ரோடு டாக்ஸ், கடன் தொல்லையால் நடக்கும் தற்கொலை சம்பவங்கள், தலைமறைவு, என அவர்களின் பொருளாதார பிரச்சனைகளையும் கதையின் ஊடே விவரித்து கொண்டே செல்கிறது நாவல்.

இதில் லோடு ஏற்றும் பொழுதோ இறக்கும் பொழுதோ யாருக்காவது விபத்து ஏற்பட்டால் அதை ஆலை நிர்வாகமே மெஷினில் கொடுத்து அழித்துவிடுவது அதிர்ச்சியாக இருந்தது. பெரும்பாலும் இது வேறு மாநில டிரைவர்களுக்கே நேர்கிறது.

நடுவில் சுந்தரின் குடும்ப பின்னணியை விவரிக்கிறது நாவல். சுந்தரின் வாழ்க்கை ஒடுக்கப்பட்ட மக்களின் அவலத்தை சொல்கிறது. பிழைப்பிற்காக வேறு ஊர்க்கு இடம்பெயர்ந்து, சாதிய கொடுமையால் அல்லளுருகிறது சுந்தரின் குடும்பம். பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி இறந்து போகும் சுந்தரின் அக்கா ராணிக்கு நடந்த கொடுமைக்கு எந்த நியாயமும் கிடைக்காமல் போகும் பொழுது, அதற்கு பழி தீர்க்க நினைக்கும் சுந்தருக்கு இயற்கை மட்டுமே துணை நிற்கிறது. அதிகார வர்க்கத்தை எதிர்க்க அவனுக்கு வேறு எந்த உதவியும் கிடைக்கவில்லை என்ற உண்மை சுடுகிறது.

'இந்த காலத்தில் யார் சாதி பார்க்கிறா ' என்று மணி சுந்தரிடம் கேட்க,  சுந்தர் அவனுக்கு நடந்த சம்பவங்களை சொல்லுகையில், கதையில் இடம்பெறும் காட்சிகள் நினைவில் வந்து 'அட ஆமால்ல ' என யோசிக்க வைக்கிறது. கிராமம், நகரம் என்ற எந்த பாகுபாடுமின்றி எங்கும் நிறைந்திருக்கிறது சாதி அரசியல். சுந்தரின் தந்தை இறக்கும் சம்பவம் ஏதோ நேரில் பார்த்த உணர்வை தந்தது.

கதையில் மேலும் சுவாரசியம் சேர்க்கிறது மெலிதாக இழையோடும் மணி, சுந்தர்  காதல் கதைகள். லாரி ஆபிஸில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் தங்கள் தேவைகளே பூர்த்தி அடையாத நிலையில் காதல், திருமணம் என்பது எட்டாத கனியாக நினைத்துக்கொண்டு, காதலுக்கும் வாழ்க்கை போராட்டத்திற்கும் நடுவில் தத்தளிக்கும் பொழுது 'இவர்களுக்கு ஒரு நல்லது நடக்காதா..'என்று நம்மை ஏங்க வைத்து விடுகிறார் ஆசிரியர்.

எங்கள் தொழிலும் லாரியில் பலசரக்கு ஏற்றி கேரளாவில் இறக்குவது தான் என்பதால்  இந்த நாவலின் சம்பவங்களை என்னால் தொடர்பு படுத்தி பார்க்கமுடிந்தது. இன்றைய நிலையில் டிரைவர்களின் குடிப்பழக்கம் அவர்களின் குணத்தை நேர்மையற்றவர்களாக மாற்றிவிடுகிறது.

எளிதாக வாசிக்க கூடிய வகையில் இருந்தது எழுத்துநடை. சென்னையின் ஒரு பகுதியை சுற்றிபார்த்தது போன்ற உணர்வு ஏற்பட்டது.

பாழடைந்த நீர் நிலையை குறிக்கும் சொல் 'சேங்கை'. அதற்கு ஒப்பானவர்களாக லாரி தொழிலாளர்களை சொல்லி இருக்கிறார் ஆசிரியர். எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாமல்,  பாசிப்படர்ந்த குட்டைக்குள் மூழ்கி மூச்சு திணறுகிற அவர்களது வாழ்க்கைக்கு இத்தலைப்பு  பொருந்திப்போகிறது. நன்றி.

Comments