நூல் : இதோ நம் தாய்
ஆசிரியர் : வயலட்
பதிப்பகம் : சால்ட்

சென்னையை சேர்ந்த எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் வயலட் அவர்களின் நாவல். இதற்கு முன் இரு சிறுகதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.

அடையாளத்தை தொலைத்து தனிமையின் பிடியில் சிக்கி வாழும் ஆனந்தியின் கதை. தாய் கௌதமியுடன் ஏற்படும் முரண் மட்டுமின்றி அவளுக்குள் நிகழும் பல தர்க உரையாடல்களுடன் நகர்கிறது கதை.

தன்னை ஒரு மொழிபெயர்ப்பாளராக முன்னிறுத்தி, திருநங்கை அடையாளத்தை அழிக்க போராடிக் கொண்டிருப்பவள் ஆனந்தி. கடந்து செல்லும் மனிதர்களிடத்தில் கிடைக்காத உணர்வுகளை அவள் மிருகங்களிடம் தேடிக் கொண்டிருப்பவள். பூனை, நாய் என அனைத்துக்கும் ஒரு பெயரிட்டு அழைத்து நெருக்கமாகி விடுகிறாள்.

'உடலோடு வாழ்வதற்கு நிகரான துன்பம் வேறில்லை' என்று தம்மபதத்தின் சொல்லுக்கு, ஆனந்தி தன்னை பொருத்திக் கொள்கிறாள். பெண்ணாக மாறினாலும், தன் தாயின் கசப்பான வார்த்தைகள் அவளை மனம் நோக வைக்கிறது. ஆனந்தியின் கடவுள் எதிர்ப்பு, புத்தகங்கள் வாசிப்பது என அவள் விரும்பும் அனைத்திற்கும் எதிர்வாதம் செய்யும் தாயை வெறுப்பது போல் இருந்தாலும், அவளின் தாய்மை உணர்வை கிளற, அவளின் தாயே முக்கிய காரணியாக அமைகிறாள்.

'Acceptance' நம் வாழ்வில் பல இடங்களில் நம் மனதை தேற்றிக்கொள்ள எடுக்கும் துருப்பு சீட்டு. யாரை ஏற்றுக்கொள்வது, எதை ஏற்றுக்கொள்வது என்பது மட்டுமே குழப்பம். தன் உடல் மாற்றத்தால் விளைந்த பிரச்சனைகளுக்கு காரணமாக அவள் யாரை கை நீட்ட முடியும், இயற்கையின் இயல்பை ஏற்க முடியாத சமூகத்தில் அவள் மட்டும் அனைத்தையும் ஏற்றுக்கொள்ளும்படி நிர்பந்திப்பது எது என்ற கேள்வி எழுகிறது.

யசோதா, யாஸ்மின், தோழர் சிவா போன்றவர்கள் அவளின் பிடிப்பான உறவுகளாக இருந்தாலும், தனிமை மட்டுமே அவளின் நெருக்கமான உறவாக அமைகிறது.

"நாம் ஒரே ஒரு நாள் இத்தனை மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்றால் அதற்காக ஆயிரமாயிரம் நாட்கள் வெறுமனே சேர்ந்திருக்கும் துயரத்தை ஏற்பாயா ? "

யசோதாவின் இந்த கேள்விக்கு ஆனந்தியின் 'ஆம்' என்கிற பதில் அவளின் மனவேதனையை முழுதாக காட்டுகிறது.

நாவலின் முன்கதை பகுதி  சுவாரசியம் மிகுந்தது.

ஆனந்தியின் துயரத்தையும், தனிமை வேதனை உணர்வுகளை அழுத்தமாக எழுத்தின் மூலம் நமக்கு கடத்துகிறார் ஆசிரியர். வாசிக்க எளிமையான எழுத்து நடை. நூல் வடிவமைப்பு அருமை. நன்றி.

Comments