நூல் : பசி கொண்ட இரவு
ஆசிரியர் : கி. அமுதா செல்வி
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்
பெண்களுக்கு நிகழும் அவலங்களும், கொடுமைகளும் எங்கும் நிறைந்து இருக்கிறது. அவர்கள் அனுபவிக்கும் அல்லல்களை சொல்ல வார்த்தைகள் இல்லை. கிராமமோ நகரமோ, படித்தவறோ படிக்காதவறோ என எந்த பாகுபாடுமின்றி பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நிறைந்து இருக்கின்றது. அப்படி சில பெண்களின் கதைகளை எழுதியுள்ளார் எழுத்தாளர் அமுதா செல்வி அவர்கள். 'பசி கொண்ட இரவு ' இவரது முதல் சிறுகதை தொகுப்பாகும். சமீபத்தில் தமுஎகச விருதும் இந்நூல் பெற்றிருக்கிறது.
மொத்தம் ஒன்பது சிறுகதைகளை கொண்ட இந்நூலில் எழுத்தாளர் ஒவ்வொரு கதையையும் போகிற போக்கில் சொல்லிவிட்டு போகாமல், உணர்வு ரீதியாக நம்மை புரட்டி போட்டு விட்டு செல்கிறார். கதையில் வரும் பெண்களின் ஏக்கங்கள், ஆசைகள், தவிப்புகள், கவலைகள் என அனைத்து உணர்வுகளையும் அவளோடு தேக்கி வைக்காமல் நமக்கும் பகிர்ந்து அளிக்கிறார். அதற்கான அவர் மேனக்கிட்டு கொடுக்கும் விவரணைகள் அலாதியானது.
ஆண்களின் காம பசிக்கு உடலை கொடுத்து வாழ்ந்தவளுக்கு, அவளின் இறுதி காலத்தில் ஒரு வாய் தண்ணீர் கிடைக்காமல் தவித்து போனவளின் கதையை சொல்கிறது 'பசி கொண்ட இரவு '. தனிமையில் வாடும் நோயுற்ற மனிதர்களின் பிம்பமாக கங்கா இருக்கிறாள். பாலியல் தொழிலாளியாக இருந்து, ஆண்களின் உடல்பசிக்கு விருந்தாக மிருகவதையை அனுபவித்தவளுக்கு இறுதி நாளில் உணவுக்காக அல்லாடுவது வேதனையின் உச்சம்.
'மூன்றாம் நாளும் விடிந்தது' கதை வாசிக்க வாசிக்க உள்ளுக்குள் அழுத்தம் கூடுவதை உணரமுடிகிறது. நேர்மையான அதிகாரியாக இருப்பவரும், பெண்களுக்கு படிப்பு முக்கியம் என கூறும் செல்லமுத்து கதாபாத்திரம் திடீரென சாதி பற்றாளராக காட்டியது மனம் ஒப்பவில்லை. சாதி சங்கங்களுக்கு பயப்படும் அளவா சட்டம் இருக்கிறது என்ற கேள்வி மனதில் எழுகிறது. சாதி சங்கங்களின் அடாவடித்தனம் கொடூரத்தின் உச்சம். இறுதியில் மொத்த ஆண் வர்க்கமும் அன்னலட்சுமியின் வாழ்க்கையை கூறுபோட்டது மன்னிக்கவே முடியாத குற்றமாகும்.
ஜெயக்கோடி, சீதா என இத்தொகுப்பில் உள்ள பெண்கள் அனைவருமே ஒவ்வொரு விதமான பிரச்சனைகளுடன் ஆண்களிடம் அடிமைகளாக இருக்கிறார்கள். சந்தேகம் கொண்ட கணவன், குடித்து விட்டு ரவுடியாக இருக்கும் கணவன், சாதியை பெரிதாக எண்ணும் கணவன் என ஆண்களின் மறுபக்கத்தை காட்டுகிறது.
தன் சொந்த மகளை தீட்டு காரணமாக வீட்டை விட்டு ஒதுக்கி வைத்து புயலில் பலி கொடுக்கும் குடும்பத்தை 'தீட்டு' கதையில் பார்க்கும்பொழுது இவ்வளவு கொடூரமான குடும்பம் நிஜத்தில் இருக்கிறார்களா என்ற கேள்வி மனதில் எழாமல் இல்லை. அல்லது இது மிகைப்படுத்தப்பட்ட புனைவா ? ஊரே புயலுக்கு பயந்து தஞ்சமடைய இடம் தேடிக்கொண்டிருக்கும் வேளை ஒரு சிறு குழந்தைக்கு தன் வீட்டில் இடம் கிடைக்காமல் பலி ஆவது மனதை நெருட வைக்கிறது.
இக்கொடுமைகள் எல்லாம் எங்கே நடக்கிறது ? நம் கண் முன் தெரியாத அந்த சமூகம் எங்கு இருக்கிறது ? இது போன்ற கொடுமைகளை யார் அனுமதிக்கிறார்கள் ? என பல கேள்விகள் நம் மனதிற்குள் குடைகிறது. பாதுகாப்பான ஒரு வட்டத்திற்குள் வாழ்ந்து பழகிய பெண்களுக்கு இக்கதைகள் பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தும்.
இதில் கொஞ்சம் ஆசுவாசமான கதையாக 'மீனாட்சி அத்தை' இருக்கிறது. குழந்தை இல்லாத மீனாட்சி அத்தை ஊரில் உள்ள அனைத்து குழந்தைகளையும் தன் பிள்ளைகளாக வார்த்துகொள்வது அன்பின் உச்சம். மாமா குட்டிப்பிள்ளைக்கும் மீனாட்சி அத்தைக்கும் உள்ள அன்யோன்யத்துக்கு இடையே அவர்களுக்கு பிள்ளைகள் எதற்கு ? என தோன்ற வைக்குறது அவர்களின் வாழ்வு.
'கனலி' கதை என்னை பெரிதாக ஈர்க்கவில்லை. ஒரு குழப்பமான பெண்ணாக எனக்கு 'கனலி' தெரிகிறாள்.
பெண்களுக்கு நிகழும் அவலங்களை கதை வடிவமாக ஆயிரம் வந்தாலும், அது வெறும் கதைகளாக முடிந்து போய்விடுகிறது. மறுபடியும் ஏதோ ஒரு இடத்தில் வேறொரு பெண்ணுக்கு அநீதி இழைக்கப்பட்டு கொண்டுதான் இருக்கிறது. எந்த ஒரு தீர்வும் கிடைக்காமல், பெண்களுக்கு நடந்த கொடுமைகளை கதைகளாக மட்டும் வாசிப்பதை ஏற்க முடியவில்லை. நிஜமான பெண் விடுதலை என்பது கானல் நீர்தானோ என்ற ஏக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது இந்நூல்.நன்றி.
Comments
சிறப்பான விமர்சனம்
ReplyDeleteThank u
Deleteநன்றிங்க தோழர்
ReplyDeleteThank u
Delete