நூல் : சிந்து சமவெளி நாகரிகம்
ஆசிரியர் : நிவேதிதா லூயிஸ்
பதிப்பகம் : கிழக்கு பதிப்பகம்
வரலாறு, தொல்லியல் போன்ற வார்த்தை பதங்களே நம்மை ஒரு ஆர்வம் மிகுந்த அனுபவத்திற்கு இட்டுச்செல்லும். நம் முன்னோர்களின் வரலாறை தெரிந்து கொள்ள நமக்கு மிஞ்சி இருப்பது தொல்லியல் எச்சங்களும், வரலாற்று நூல்களும் தான். அப்படிப்பட்ட தொல்லியல் எச்சங்களை தேடி பார்க்க கிடைத்த வாய்ப்புகளை விடாமல் சென்று வந்த அனுபவம் மேலும் மேலும் உத்வேகத்துடன் வரலாறை நோக்கி பயணம் செய்ய வைத்தது. அப்படி தேடி கண்டடைந்து வாசித்த நூல்கள் பல. அதன் தொடர்ச்சியாக கிடைத்த நூல்தான் 'சிந்து சமவெளி நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்ட கதை '.
பெண்கள் மற்றும் சிறுபான்மையினரின் வரலாற்றை மக்களிடம் முனைப்புடன் எடுத்து செல்லும் நிவேதிதா லூயிஸ் அவர்கள் எழுதிய நூல்.
பள்ளி காலத்தில் படித்த சிந்து சமவெளி நாகரிகம் குறித்த பாடங்கள், அந்நாகரிகம் கண்டுபிடித்த பின் கிடைத்த வரலாறாக இருந்தது. அதன் கட்டுமானம், நீர் மேலாண்மை, கிடைத்த காசுகள், தொல்லியல் பொருட்கள் என்று ஓரளவு மேலோட்டமான தகவல்களாகவே இருந்துள்ளது. அதே போன்ற ஒரு தகவல் குறிப்பாகவே இந்நூலும் இருக்கும் என்ற எண்ணத்தில் தான் வாசிக்க ஆரம்பித்தேன்.
ஏழு அத்தியாயங்களாக பிரித்து எழுதி இருக்கும் இக்கட்டுரை தொகுப்பில் முதல் அத்தியாயமே, இன்றும் எப்பொழுதும் புதிராகவே இருக்கும் 'சரஸ்வதி நதி' பற்றியதாக இருந்தது என் வாசிப்பின் வேகத்தை அதிகரித்தது.
சிந்து சமவெளி நாகரிகம் உருவாக்கியது யார் ? புதைந்து இருந்த நகரம் எவ்வாறு வெளியில் வந்தது ? அங்கு இருந்த தொல்லியல் எச்சங்கள் எவ்வாறு சிதிலங்களாக சேதமடைந்தது ? அதில் இருந்து ஆய்வு செய்து உலகிற்கு வெளிக்கொண்டு வந்தவர்கள் யார் ? போன்ற பல கேள்விகளுக்கு பதில் கிடைக்கிறது இந்நூலில்.
ஆங்கிலேயர்களால் மட்டுமே இந்த ஆய்வுகள் நடந்ததாக நினைத்து கொண்டிருக்கும் வேளையில் அதில் பங்கு கொண்ட இந்தியர்களின் பெயர் பட்டியல் மலைக்க வைக்கிறது. இந்தியர்களின் ஆய்வுகளை இருட்டடிப்பு செய்து அதில் குளிர்காய்ந்த ஆங்கிலேய ஆய்வாளர்களின் பெயர்களே சரித்திரத்தில் இடம் பிடித்துள்ளது என்பது வருந்தத்தக்கது.
வரலாற்றின் சிதிலங்களை பாதுகாக்காமல், ரயில் தண்டவாளங்களில் கொட்டியாதாக அறியும் பொழுது அதிர்ச்சியாக இருக்கிறது. தொல்லியல் எச்சங்களை பாதுகாப்பது மட்டுமே, தாமதம் ஆகாமல் வரலாற்றின் பக்கங்களை நாம் அறிந்து கொள்ள முடியும் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. குறுகிய காலத்தில் கண்டுபிடிக்க வேண்டிய இந்நாகரிகம், பல தடைகற்கள் விழுந்து தாமதமாகி போய் இருக்கிறது.
கட்டுரை தொகுப்பு தான் என்றாலும் dry ஆக இல்லாமல், கதை வடிவில் வாசிக்க சுவாரசியமாக இருக்கிறது.
கட்டுரையில் அடுத்தடுத்து வரும் ஆய்வாளர்களின் அறிமுகம் இன்னும் விரிவாக இருந்திருக்கலாமோ என தோன்றியது. ஆனால் மேலும் அவர்களை பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வத்தை அது கொடுத்தது மிகையல்ல. வரலாற்றை தேடி வாசிப்பது என்றும் அலுக்காத விஷயம். அதனை முழுமை படுத்தியது இந்நூல். நன்றி.
Comments
Post a Comment