நூல் : மாயாதீதம்
ஆசிரியர் : என். ஸ்ரீராம்
பதிப்பகம் : தமிழ்வெளி
ஒரு மனிதனின் வாழ்க்கை அனுபவத்தின் மாய விளையாட்டை சொல்லும் கதை. கையடக்க நூலாக இருந்ததாலும், எழுத்து நடை, கதையின் விறுவிறுப்பும் நம்மை ஒரே மூச்சில் வாசிக்க வைத்து விடுகிறது.
கதையின் ஆரம்பமே கதையின் உள்ளடக்கத்தை பூடகமாக சொல்கிறது. பொய் சத்தியத்தினால் ஏற்படும் விளைவை, இறை நம்பிக்கையோடு சேர்த்து சொல்லி இருக்கிறார் ஆசிரியர்.
கதை களம் எனக்கு புதிதாக இருந்தது. கோட்டை மாரியம்மன் கோயில், அமராவதி நதிக்கரை, கோயில் மடம் என அப்பகுதியை சுற்றி நடக்கும் கதையை மனத்திரைக்கு கொண்டு வர சிரமமாக இருந்தாலும் வேணுவும், அவன் சித்தப்பாவும் என் மனதிற்கு நெருக்கமாகி விட்டனர்.
இறை நம்பிக்கைக்கும் நியாயத்திற்கும் கட்டுப்பட்டும் இருக்கும் சித்தப்பா மனதில் நிறைகிறார். வேணுவிற்கு கண் பார்வை கிடைக்க அவர் எடுக்கும் பிரயத்தனங்கள் ஒரு கட்டத்தில் மிகையாக தோன்றினாலும் அவர் கடவுள் மேல் வைத்திருக்கும் ஆசாத்திய நம்பிக்கை ஆச்சரியமளிக்கிறது. அந்த நம்பிக்கை இறுதி வரை இருப்பது, தெய்வ நம்பிக்கையின் பின் நம்மையும் இழுத்துச் செல்கிறதோ இல்லையோ அதன் மீது ஒரு அமானுஷ்ய பயத்தை விதைக்கிறது.
'நம்மளை கொல்லுற சாமி.. என் கண்ணை எப்படி குணமாக்கும்...' என்கிற வேணுவின் கேள்வியால் நம்மை யோசிக்கவும் வைக்கிறார் ஆசிரியர்.
கிராமத்து நம்பிக்கைகள், வழிபாட்டு முறைகள் என நிலம் சார்ந்த வாழ்வியலை தொட்டுச் செல்கிறது கதை.
வேணு - பார்கவி காதல் அத்தியாயம், பிரிவு துயர் அனைத்தும் உணர்வுபூர்வமாக இருந்தது.
கதையின் ஆரம்பம் முதல் வரும் சித்தி கதாபாத்திரம் நல்லவளாகவே நம் மனதில் பதிந்தவள் திடீரென்று தன் மகனுக்காக தடம் மாறுவது ஏற்றிக்கொள்ள முடியவில்லை. ஆனால் அவளை குறை சொல்லவும் முடியவில்லை.
கதையின் ஊடே வரும் தேசாந்திரக்காரன், கருநாய் கதையின் போக்கிற்கு ஏற்ற குறியீடாக உள்ளது.
வேணு ஓவிய கல்லூரியில் சேர்ந்து, சினிமா உலகில் காலடி எடுத்து வைத்து முன்னேறி வரும் காலகட்டத்தை வேகமாக முடித்தது போல் இருந்தது. ஆரம்பம் முதல் உயிரோட்டமாக சென்று கொண்டிருந்த கதை சட்டென்று முடிந்தது ஏமாற்றமே.
வட்டார வழக்கு மொழி கதைக்கு மேலும் வலு சேர்க்கிறது.நன்றி.
Comments
Post a Comment