பிம்பம் 


ஒரு கையில் கட்டைபையையும் மறுகையில் மகளையும் பிடித்தபடி கடைதெருவுக்குள்  நுழைந்தாள் கவிதா. அடுத்த நாள் வரப்போகும் மகளின் பிறந்தநாளுக்கு ஆடை எடுக்க  காரியத்தில் மட்டும் கண்ணாக ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கிக் கொண்டிருந்தாள். "ஒரு வாரம் முன்ன எடுக்க வந்திருந்தால் நிதானமாக எடுத்திருக்கலாம்..."என்று முணங்கியபடி இருவரும் வேறு கடைக்குள் நுழைந்தனர். விழாக்காலம் இல்லாததால் கூட்ட நெரிசல் இல்லாதது கொஞ்சம் நிம்மதியைத் தந்தது. கடை முழுதும் தொங்கிக் கொண்டிருந்த ஹங்கரில், ஆளுக்கு ஒரு பக்கம் அவர்களுக்கு பிடித்த ஆடையை தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்தார்கள்.


"கவி..."  திடீரென யாரோ அழைக்கும் குரல் கேட்டது கவிதாவிற்கு. கேட்ட குரல் போல் தெரிந்ததால் வேகமாக திரும்பி அங்கிருந்த மனித முகங்களை துலாவியதில், அவள் வயதில் ஒரு பெண் நின்றிருப்பதைக் கண்டாள். பக்கத்தில் இரண்டு வளர்ந்த பிள்ளைகள் நின்றிருந்தனர். கவிதாவிற்கு சட்டென்று அவர்களை அடையாளம் தெரியவில்லை. "கவி... என்னை அடையாளம் தெரியலையா...நான்தான் ஷர்மி.."சிரித்தபடி வேகமாக வந்து அணைத்துக்கொண்டாள். அவள் அணைத்ததில் உள்ள நெருக்கம், அவளுக்கு நொடி பொழுதில் அவள் நினைவு அடுக்குகளில் ‘ஷர்மி’யைத் தேடி எடுக்க வைத்தது. முக பளபளப்பும், மேற்கத்திய பாணியில் இருந்த சிகை அலங்காரமும் ஷர்மியை அவளுக்கு அடையாளம் காண முடியவில்லை. ஷர்மியை பார்த்து எத்தனை வருடங்கள் ஆகிறது... அவள் எங்கு இருக்கிறாள்... நன்றாக இருக்கிறாளா..என எதுவும் தெரியாமல் யாரிடமும் விசாரிக்கவும் முடியாமல் சமூக வலைதளங்களில் தேடிப் பார்த்து ஓய்ந்து போனவளுக்கு இன்று கண்முன் பார்த்ததும் அதிர்ச்சியாக இருந்தது. இருபது வருடங்களுக்கு பின் பார்த்தாலும், அவர்களது நட்பின் ஆழம் எளிதாக அவர்களை ஒரே அலைவரிசைக்குள் நிறுத்தியது. கவிதாவும் "ஷர்மி..."என்றபடி அவளைக் கட்டிக்கொண்டாள்.


பரஸ்பரம் தங்கள் பிள்ளைகளை அறிமுகம் செய்து விட்டு தங்களது திருமண வாழ்க்கையைப் பற்றி பேசியபடி கடையை விட்டு வெளியேறி தெருவில் நடந்தனர்.  தன் கணவன் அமெரிக்காவில் பணிபுரிவதாகவும், சில வருடங்கள் அவர்களும் அமெரிக்காவில் வசித்ததாகவும், வயதான அவர்களின் தாய், தந்தையை பார்க்கும் பொருட்டு இவர்கள் மட்டும் இந்தியா வந்த கதையை சொன்னாள். அவர்களுக்குள் பேசிக்கொண்டாலும் கவிதாவின் மனம் மட்டும் ஒரு சுழலுக்குள் மாட்டிக் கொண்ட அவஸ்தையை அனுபவித்தது. தோழியிடம் கேட்க பல கேள்விகள் முட்டி மோதிக்கொண்டாலும் எதும் கேட்க நா எழவில்லை. ஷர்மியின் பூரிப்பான முகம் கவிக்கு சந்தோஷத்தை கொடுத்தது. ஷர்மி மகிழ்ச்சியாக இருக்கிறாள் என்ற நிம்மதியே கவிதாவிற்கு போதுமானதாக இருந்தது. மேலும் முடிந்து போன தேவையற்ற விஷயங்களை கேள்விகளாக கேட்டு இன்றைய மகிழ்ச்சியை ஏன் கெடுத்துக்கொள்ளவேண்டும் என்ற எண்ணமும் கவிதாவை அமைதிப் படுத்தியது.


பக்கத்தில் உள்ள உணவகத்தில் இரவு உணவை முடித்துக் கொண்டு, இருவரின் கைபேசி எண்ணையும் குறித்துக்கொண்டு விடைபெற்றனர்.  திரும்பி நடக்கையில் கவிதா ஏதோ மன உந்துதலில் "அம்மா எப்படி இருக்காங்க ஷர்மி " என்று கேட்டே விட்டாள். "அம்மாவும் சென்னைல தான் இருக்காங்க கவி... உன்னை பார்த்ததை அம்மாட்ட சொல்லுறேன்.. நீ வீட்டுக்கு வா... அம்மா ரொம்ப சந்தோஷப்படுவாங்க...' சொல்லிவிட்டு சென்று விட்டாள். ஆனால் கவிதாவிற்குதான் வீடு வந்து சேர்வதற்குள் அவர்களின் சிறு வயது நட்பும், பிரிவும் ஞாபகங்களில் அலைமோதி தடுமாற்றத்தைக் கொடுத்தது. 


கொண்டாட்டமும், குதூகலமும் நிறைந்து இருந்த பள்ளிப்பருவ வாழ்வில் திடீரென்று துரோகமும், குற்றவுணர்வும் எப்படி தன் வாழ்வின் இடையில் புகுந்து, இன்று வரை அலைகழித்துக் கொண்டிருக்கிறது என்பது அவள் முகத்திற்கு முன் நிழலாடியாது.


கவிதாவும் ஷர்மியும் பன்னிரெண்டாம் வகுப்பு ஒரே பள்ளியில் தான் படித்துக் கொண்டிருந்தார்கள்.. கவிதாவின் வீட்டுக்கு இரண்டு தெரு தள்ளி தான் ஷர்மி வீடு இருக்கிறது. தினமும் அவளும்  ஷர்மியும் சேர்ந்து தான் பள்ளிக்கு செல்வார்கள். யாராவது ஒருவர் விடுமுறை எடுத்தாலொழிய இருவரும் தனியே பள்ளிக்கு சென்றதில்லை. கவிதா வீட்டில் இருந்து பள்ளி நடக்கும் தூரம் தான் இருக்கும். ஐந்து நிமிட நடையில் சென்றுவிட முடிகிற பள்ளிக்கு, அரட்டை அடித்தபடி அரைமணி நேரம் ஆக்குவார்கள். இடையில் வேறு சில தோழிகளும் இணைந்து கொள்வார்கள். அன்று காலை சிலோன் ரேடியோவில் கேட்ட சினிமா பாடல்களில் இருந்து வகுப்பில் நடந்த விஷயங்கள் வரை பேசிக்கொண்டே செல்வது அவர்களின் வழக்கம். பள்ளி செல்லும் பாதையின் ஓரத்தில் இருக்கும் பேப்பர் பூக்களை பறித்து அதை ஒருவர் மீது ஒருவர் தூக்கிப் போட்டு விளையாடிக் கொண்டும், தெருவில் ஓடி பிடித்து விளையாடுவதுமாக பள்ளி போய் சேர ஒரு மணிநேரம் ஆகும். ஒரே பள்ளியில் படித்தாலும் இருவரும் வேறு வேறு பாடப்பிரிவு என்பதால் பள்ளி சென்றதும் இருவரும் பிரிந்து அவரவர் வகுப்புக்கு சென்று விடுவார்கள். மாலையும் அதேபோல் அரட்டை அடித்தபடியே நடந்து வீடு வந்து சேருவார்கள்.


"இன்னைக்கு ஷர்மி அப்பா "ஆசை" படப் பாட்டு கேசட் வாங்கிட்டு வந்து இருப்பார்... பாட்டு கேட்க நீ வர்றியாடி.." தங்கையை பார்த்து கேட்டாள் கவி.


"வேற வேலை இல்ல...பாட்டு கேட்க யாராவது அடுத்த வீட்டுக்கு போவாங்களா.. நான் வரல...".


ஷர்மி வீட்டில் புது டேப்ரிக்கார்டர் வாங்கியதில் இருந்து தான் கவிதாவுக்கு இந்த பழக்கம். "அப்பா..ஷர்மி வீட்ல  டேப்ரிக்கார்டர் வாங்கி இருக்காங்க..நாமளும்  வாங்குவோம்... "


"அப்பா சம்பளத்தில அதெல்லாம் வாங்க  கட்டுப்படியாகாதுடா..அதான் ரேடியோ இருக்குள்ள.. அதுல கேளு...." ஒவ்வொரு தடவை கேட்கும்போதும் அப்பாவின் பதில் இதுவாகத்தான் இருக்கும் என்பதால் கேட்பதை நிறுத்திக்கொண்டாள். "அப்போ ஷர்மி வீட்டுக்கு பாட்டு கேட்க போவேன்.. நீங்க ஒன்னும் சொல்லக் கூடாது..." என்று அப்பாவிடம் அனுமதி வாங்கி வைத்துக்கொண்டாள். 


உட்கார்ந்த வேகத்தில் வீட்டுப் பாடத்தை முடித்து, "அம்மா...நான் ஷர்மி வீட்டுக்கு போறேன்.. அந்த அதிரசத்தை ஒரு பாக்ஸ்ல போட்டு குடு..ஆன்ட்டிக்கு  பிடிக்கும்..." அம்மா கொடுத்த  டிபன் பாக்ஸை எடுத்துக் கொண்டு  ஷர்மி வீட்டை நோக்கி நடந்தாள் கவிதா.


ஷர்மி வீடென்றால் கவிக்கு தானாகவே ஒரு குதூகலம் ஒட்டிக்கொள்ளும். ஷர்மியின் நட்பா அல்ல ஷர்மி அம்மா சித்ராவின் அன்பா என்ற கேள்வி எல்லாம் எழுப்பி மனதை போட்டுக் குழப்பிகொள்ளாமல் நினைத்த நேரம் அங்கு சென்று விடுவாள். ஷர்மி அம்மா சித்ரா எப்பவும் கவியுடன் நட்பாக பழகக்கூடியவள். தன் அம்மாவிடம் இருக்கும் சில கட்டுப்பாடுகள் ஷர்மி அம்மாவிடம் இருக்காது என்பதால் கவிக்கு சித்ராவை மிகவும் பிடிக்கும். அவர் கட்டும் புடவையில் இருந்து, வீட்டை வைத்திருக்கும் பாங்கு வரை அவளின் நேர்த்தி கவிதாவை அவளுடைய ரசிகை ஆக்கிவிட்டது. அதோடு ஷர்மியின் படிப்பு, ப்ராஜெக்ட், பள்ளியில் பங்கேற்கும் போட்டிகள், விளையாட்டு என எதில் ஆர்வமாக இருந்தாலும், தட்டிக்கொடுத்து ஊக்கப்படுத்தியும்  உறுதுணையாகவும் இருப்பார். இதனால் சில நேரம் ஷர்மி மீது கவிதாவிற்கு பொறாமைகூட எட்டிப் பார்க்கும். தன் அம்மா இப்படி இல்லை என்ற சின்ன வருத்தமும் அவளுக்குண்டு.


"ஆன்ட்டி இந்தாங்க அதிரசம்.. வீட்டுக்கு வந்தோன ஹோம் ஒர்க் முடிச்சுட்டேன்.ஷர்மி இன்னும் முடிக்கலையா..?அங்கிள் இன்னைக்கு 'ஆசை' பாட்டு கேஸட் வாங்கிட்டு வருவார்னு நேத்து ஷர்மி சொன்னாள்..அதான் வந்தேன்.. "


கவிதா, ஷர்மி படிக்கும் அறையை எட்டிப் பார்த்து விட்டு மறுபடி சமையலறைக்கு வந்தாள். அதற்குள் சித்ரா  இரண்டு டம்பளரில் காபியுடன் வந்தாள். அவள் போடும் பில்டர் காபிக்கு கவி அடிமை. இருவரும்  குடித்துக்கொண்டே அன்று பள்ளியில் நடந்தது, தெருவில் நடந்தது என அனைத்தையும் பேச ஆரம்பித்தார்கள். படிப்பிற்கு தேவையான சில சந்தேகங்களையும் கேட்டு தெளிவு படுத்திக்கொண்டாள்.


சிறிது நேரத்தில், "கவி...உள்ள வாடி.."ஷர்மியின் குரல் கேட்டது. படிப்பிற்காகவே பிரத்யோகமாக கட்டப்பட்ட அறை போல தோற்றமளிக்கும் அளவு ஷர்மியின் அறை இருக்கும், எழுத, படிக்க தனி மேஜை, நாற்காலி, கைக்கு எட்டும் தூரம் புத்தகங்கள் வைக்கும் அலமாரி, அதில் நிறைந்து கிடக்கும் எழுது பொருட்கள், ஓவிய பொருட்கள் மேலும் புதிய கணினியை வைக்க புதிய மேஜை ரெடியாக இருந்தது. படிப்பு, விளையாட்டு என ஷர்மி எதை தேர்ந்தெடுத்தாலும் அவள் பெற்றோர் அவளுக்கு அனைத்து சவுகரியமும் செய்து கொடுத்து விடுவார்கள். கவிதா உள்ளே சென்றதும், டப்பென்று கதவை சாத்தினாள் ஷர்மி.. சில நிமிடங்களில் டேப் ரெகார்டரில் பாடல் சத்தம் அலறியது. கவிக்கு எப்பொழுதும் பாடல் அதிக சத்தத்தில் கேட்கத் தான் பிடிக்கும்.அவள் வீட்டு ரேடியோவில் ஒலியை கூட்டி குறைக்கும் சிறு உருளை பழுதாகி விட்டிருந்தது. அதனால் ஒரே அளவு சத்தத்தில் தான் கேட்கமுடியும். அதனால் இங்கே வந்தால் பாடலை அலற விடுவார்கள். ஷர்மி அம்மாவிடமிருந்து எந்த எதிர்ப்பும் வராது என்பதால் மிகுந்த குதூகலமாக ஆடுவார்கள். பின் சிறிது அரட்டை என பொழுதை போக்கிவிட்டு வீடு செல்வாள். சில நேரங்களில் இரவு உணவைக் கூட அங்கேயே  முடித்து விட்டுதான் வருவாள்.


ஆனால் இன்று எல்லாம் தலைகீழாக மாறிப்போனது. பாடலை அதிக சத்தத்தில் வைத்து ஷர்மி சொன்ன விஷயம் அவள் மனத்தில் திக்கென்ற உணர்வை தந்தது. அரசல் புரசலாக கவி கேள்விப்பட்டிருந்த ஷர்மியின் காதல் விஷயத்தை அன்று அவளிடம் வெளிப்படையாக கூற ஆரம்பித்தாள் ஷர்மி. அதோடு மட்டும் இல்லாமல் ஆறு மாதமாக  காதலித்த குருவுடன் நாளை ஓடிப் போக போவதாக சொன்னதும் பதற்றத்தில் ஒடுங்கிப் போனாள் கவிதா. "இப்போ எதுக்கு இவ்வளவு அவசரம்? " என்ற அவள் கேள்வி ஷர்மியை எரிச்சல் அடைய வைத்தது. "அவங்க வீட்ல பொண்ணு பார்க்க ஆரம்பிச்சுட்டாங்கன்னு குரு அவசரப்படுத்தறார் கவி.. அவர் இல்லாம நான் எப்படி இருப்பேன்... அதான் அவரோட போய்டலாம்னு இருக்கேன்…”


ஷர்மியிடம் ஒரு பதட்டமோ, குற்றவுணர்வோ என எதுவும் தட்டுப்படவில்லை. மனதுக்கு பிடித்தவுடன் வாழ போகும் சந்தோஷம் மட்டுமே அவள் பேச்சில் இருந்தது. 'அதெப்படி அம்மா, அப்பா இல்லாமல் வேறு ஒருவனுடன் போக முடியும்..ஸ்கூல் ப்ராஜெக்ட் செய்யனும்.. பப்ளிக் எக்ஸாம் எழுத வேணாமா..?' கவியின் மனம் தோழியின் முடிவை விட பள்ளி ப்ராஜெக்ட் பெரிதாக தெரியும் அளவே பக்குவப்பட்டிருந்தது. அலட்சிய படுத்தவோ ஆமோதிக்கவோ அறியாத நிலையில், ஒரு பந்து வயிற்றுக்குள் சுழல ஆரம்பித்தது. 'அம்மாட்ட சொல்லி பார்க்கலாமே..." என்றாள். அவள் கேட்ட வேகத்தில் அவளின் வாயை பொத்தி “சத்தமா பேசாத... அம்மாக்கு தெரியக்கூடாது.. குருவோட என்னால சேர முடியாம போய்டும்... நீயும் யார்ட்டயும் சொல்லாத... நான் சமாளிச்சுக்குவேன்... குரு எல்லாத்தையும் பார்த்துப்பார்... நீ கிளம்பு.. " கவியை அனுப்பும் வேகத்தில் இருந்தாள் ஷர்மி. 'எப்பொழுதும் சிரித்துக் கொண்டு ஜாலியா பேசிட்டு இருக்கும் சித்ரா ஆன்ட்டி இதை தாங்குவாங்களா...' மேலும் என்ன பேச என்ற தடுமாற்றதுடன் இருந்தவளிடம், “நாளைக்கு நீதான் எப்படியாவது சமாளிக்கனும் கவி...”என்றபடி சில திட்டங்களை சொன்னாள். புது பாடல் கேட்கும் பரவசத்தை மறந்து அடுத்த நாள் அவர்கள் செய்யப் போகும் விஷயத்துக்கு பல யோசனைகள், திட்டங்கள் என பேச்சு திசைமாறியது.  இது சரியா, தவறா என்ற கேள்விக்கே இடம் தராமல் ஷர்மி அவள் செய்வது தான் சரி என்ற முடிவோடு பேசிக் கொண்டிருந்தாள். திடீரென அறைக் கதவு திறக்கும் சத்தம் கேட்டதும் இருவரும் அமைதியாகி ஏறிட்டனர். மடித்து வைத்த துணியை பீரோவில் அடுக்கியப்படி 'என்னங்கடி குசு குசுனு பேசிட்டு இருக்கீங்க ' என்று கிண்டல் செய்துவிட்டு மறுபடி கதவை மூடிவிட்டு சென்றாள் சித்ரா. ‘எவ்வளவு நம்பிக்கை இருந்தால் சித்ரா ஆன்ட்டி இப்படி தனியே பிள்ளைகள் பேசுவதை ஒட்டு கேட்கக் கூட தோன்றாமல் சிரித்து விட்டு செல்கிறாள்’. கவியின் எண்ண ஓட்டத்தை தடை படுத்தியது ஷர்மியின் பேச்சு. இருவருக்கும் ஒரு தெளிவற்ற மனநிலைதான் என்றாலும், எதையும் செய்து பார்க்கும் வயது அதை பொருட்படுத்தவில்லை. மனதில் பாரமும்,சஞ்சலமுமாக வீடு வந்து சேர்ந்தாள் கவிதா.


அவளுக்கு அம்மாவிடம் சொல்லலாம் என்று இருந்தது. ஆனால் இது போன்ற விஷயங்களை இது வரை அம்மாவிடம் பேசி பழகவில்லை என்ற ஞாபகம் வந்தது. 'சோறு, படிப்பைத் தவிர அம்மாவுடன் என்ன பேசி இருக்கோம்...ஷர்மி அவள் அம்மாவை கட்டிக்கொண்டு கொஞ்சியபடி பேசுவதை ஆற்றமையுடன் பார்த்து வீட்டில் அம்மாவை கட்டிக்கொண்ட போது, 'வயசுபிள்ளை இப்படியா தொட்டு பேசுறது...தள்ளி நின்னு பேசு ' என்று கத்திய அம்மாவிடம் என்னவென்று சொல்வது..' ‘அதோடு இது ஷர்மிக்கு பிரச்சனையை உண்டாக்கும்..’ என்ற பயமும் அவளை எதுவும் சொல்ல விடாமல் தடுத்தது. அன்றைய இரவை தூக்கமற்ற இரவாக கடத்தினாள் கவிதா.


இன்று ஷர்மி பள்ளிக்கு வரவில்லை. அவள் இல்லாமல் வெறுமையாக இருந்தது கவிதாவிற்கு. ஏதோ ஒரு பெரும் மனஅழுத்தம் அவள் மனதை ஆட்கொண்டது. அழுத்தம் தாங்க முடியாமல் சீக்கிரமாகவே பள்ளிக்கு கிளம்பி இருந்தாள். எப்பவும் ஆட்டம் பாட்டமுமாக பள்ளி செல்பவள், நிதானமாக ஏதோ யோசித்தபடி நடந்து கொண்டிருந்தாள். 'இனி எப்பொழுதும் தனியாக தான் பள்ளி செல்லவேண்டுமோ... ஷர்மி இல்லாமல் எப்படி இருப்பது... ஆறு வருட நட்பு இன்றோடு முடியப் போகிறதா... ஒரே நாளில் எல்லாமும் மாற போவது போன்ற ஒரு பிரம்மை அவளை பயமுறித்தியது. இதை நான் கடந்து விட முடியுமா? இல்லை  சிக்கிவிடுவோமா? என்ற பதபதைப்பும் அவளை அலைக்கழித்தது. நேற்று மாலை வரை இயல்பாக நகன்ற பொழுதுகள் ஒரே இரவுக்குள் எவ்வளவு மாற்றத்தைக் கொடுத்து மன உளைச்சலுக்குள் தள்ளும் என்பதை கவிதா கனவிலும் நினைக்கவில்லை. ஷர்மியின் கையை பிடித்தபடி, அவள் மட்டுமே துணையாகி போனவளை இன்று காணாமல் காலில் இடரிய ஒரு சிறு கல்லை துணையாக்கிக் கொண்டாள் கவிதா. எதிர் வரும் மனிதர்கள், வண்டிகள் பற்றி எந்த  கவனமும் இல்லாமல்  அக்கல்லை எத்திக்கொண்டே நடக்கலானாள். மனம் மட்டும் ஷர்மியை நினைத்துக் கொண்டிருந்தது. நேற்று அவள் சொன்னதை நினைக்கக் கூடாது என்ற பிடிவாதம் அவள் கல்லை எத்திய வேகத்தில் தெரிந்தது. ஓடி ஒளிந்த கல்லை தேடி அதனுடன் மல்லுக்கட்டியபடி நடந்தாள். ஆனால் அந்த கல் அவள் மனம் என்னும் குட்டையை கலக்கியப்படிதான் இருந்தது. புதருக்குள் ஓடிவிட்ட கல்லை  சலிப்புடன் தேடிகொண்டு, அது கிடைக்காததால் விட்டுவிட்டு அருகில் இருந்த மற்றொரு கல்லை எத்தினாள்.


"கவி.. கவி..."


சித்ரா ஆன்ட்டியின் குரல் கேட்டது ."என்னடா தனியா வர்ற..உன் கூட தான  ஷர்மி வந்தா.. டிபன் பாக்ஸை வீட்லயே வச்சுட்டு போய்ட்டாள்... அதான் ஸ்கூல்க்கு வந்துகொடுக்கலாம்னு வந்தேன்...கிளாஸ்ல  இல்ல.. அதான் தேடிட்டே வாசலுக்கு வந்தேன்...நீ எதிர்ல வர்ற.. அவ ஸ்பெஷல் கிளாஸ்னு சொல்லிட்டு 7.30 கே போய்ட்டாள்.. உனக்கும் ஸ்பெஷல் கிளாஸ் இருக்கும்னு நினைச்சேன்.. உனக்கில்லையா..? " படபடவென்று கொட்டியவளை ஏறிட்ட கவிதா ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் சுதாரித்து, மனதை தயார் நிலைக்கு கொண்டு வந்தாள். உலன்ற உதடுகளை நாவால் ஈரப்படுத்தி, முகத்தை எதார்த்ததுக்கு கொண்டுவந்து,


"இல்ல ஆன்ட்டி... அவ வரலையே.. எனக்குத்தான் ஸ்பெஷல் கிளாஸ்.. நேத்தே அவட்ட சொல்லிட்டேனே.. அவ ரெகுலர் டைம்க்கு ஸ்கூல் வந்தால் போதுமே.." கவி வார்த்தை தடுமாறாமல் பதில் சொன்னாள். ஆனால் அவள் நெஞ்சம் மட்டும் தட தடவென அடித்துக்கொண்டது அவள் காதுக்கே கேட்டது.


ஷர்மியின் அம்மா முகத்தில் லேசான பதற்றம் தொற்றியது. "எங்க போனாள்... கிளாஸ்லயும் இல்ல...உன் கூடவும் வரல..." யோசனையுடன் அவளை பார்த்தார். அவரது பார்வை கவியின் கண்களை துளைத்த நொடி அவளையறியாமல் தலை குனிந்தாள். அதே வினாடி சுதாரித்து, 


"தெரியலயே ஆன்ட்டி.. வேணா சீதா வீட்டுக்கு போய் இருப்பாளோ.. அவதான்  அவளுக்கு பிராஜக்ட் பார்ட்னர்.. எதாவது டிஸ்கஷன்க்கு போய் இருப்பா... பக்கத்துல தான் ஆன்ட்டி அவ வீடு.. வாங்க போய் பார்ப்போம்.." அரைகுறை மனதுடன் தலையசைத்த சித்ரா, கவியோடு நடக்க ஆரம்பித்தாள். இருவரின் நடையிலும் இயல்பாகவே வேகம் தொற்றிக்கொண்டது. சிறிது  நேரத்திலேயே வேகத்திற்கு தடை போட்டது போல் சீதாவே எதிரில் வந்தாள். 


"உன் வீட்டுக்குதான்டி வந்திட்டு இருந்தோம்.. ஷர்மி அங்க வந்தாளா..?"


"இல்லையே..ஏன்.. என்னாச்சு..? 


"இல்ல ப்ராஜெக்ட் டிஸ்கஷன்க்கு உன் வீட்டுக்கு வந்திருப்பாளோனு கேட்டேன்..."


"அவ எப்பவும் உன்னோடதான வருவா...ப்ராஜெக்ட் எல்லாம் நேத்தே முடிச்சு என்ட கொடுத்துட்டாளே.."  இப்போது ஷர்மியின் தாய் கண்களில் கண்ணீர் எட்டிப்பார்க்க ஆரம்பித்தது.


சித்ராவை தேற்ற வழி தெரியாமல், "கவலைபடாதீங்க ஆன்ட்டி..ஷர்மி இங்கதான் இருப்பாள் திரும்ப ஸ்கூல் முழுக்க தேடிப்பார்ப்போம். டாய்லெட் கூட  போயிருப்பா..நான் போய் பார்த்துட்டு வரேன் "என்று ஒரு சிறு நம்பிக்கையை  விதைத்துவிட்டு அவளும், சீதாவும் ஆளுக்கொருப்பக்கம் பள்ளி முழுவதும் தேடிப்பார்க்கச் சென்றனர்.


"என்ன  பிரச்சனை கவி..? ஷர்மி எங்க போனாள்.. உனக்கு தெரியாம இருக்காதே.. சொல்லுடி..அவ அம்மாவை பார்க்க பாவமா இருக்கு..டெய்லி குசுகுசுனு பேசிட்டே இருப்பீங்களே.. எதாவது சொன்னாளா..? " சீதா கேள்வியை அடிக்கிக்கொண்டே சென்றாள்.


"நீ கொஞ்சம் பேசாம இரு.. நானே அவளை காணோம்னு கவலைல  இருக்கேன்.. நீ வேற என்னை கேட்டுட்டு இருக்க..எனக்கு தெரிஞ்சால் சொல்லமாட்டேனா? போ.. போய் கேன்டீன்ல தேடு.. "


அதற்குள் மேலும் இரண்டு தோழிகளுக்கு விஷயம் தெரிந்து தேட ஆரம்பித்தனர். கழிப்பறை, கேன்டீன்,மற்ற வகுப்பறைகள் என ஒன்று விடாமல் தேடினர். ஷர்மி காணவில்லை. 


"இப்போதைக்கு இந்த விஷயத்தை கிளாஸ்ல யாரிடமும் சொல்லிடாதீங்க.. நான் ஷர்மி அம்மாட்ட சொல்லிட்டு வரேன்.." தோழிகளிடம் சொல்லிவிட்டு பள்ளி வாசலை நோக்கி நடந்தாள் கவிதா. எப்பொழுதும் புத்துணர்ச்சியுடன் காணும் சித்ரா, ஒரு வித இறுக்கத்துடனும், தளர்ந்து போன முகத்துடனும் நிற்பதை பார்த்த கவிக்கு மனம் வலித்தது. 


"ஆன்ட்டி .. ஸ்கூல் பூரா தேடிட்டேன்...அவ காணோம் ஆன்ட்டி…"


"நேத்து நீ வீட்டுக்கு வந்தப்ப உன்ட எதாவது சொன்னாளா கவி..? ஒன்னுமே புரியலையே.. மிஸ் எதும் அவளை திட்டினங்களா..? எதுனாலும் என்ட சொல்லிடுவாளே கவி. வேற பிரண்ட்ஸ் யார்ட்டயும் எதும் ஷேர் பண்ணினாளானு விசாரி கவி..." கண்ணில் நீர் தளும்ப அவள் சொல்ல, கவிக்கும் அழுகை வந்தது. அவளுக்கு இப்பொழுது தான் அவர்கள் செய்த தவறின் வீரியம் புரிந்தது. ஆனால் அவளுமே கையறு நிலையில் தான் இருந்தாள்.


"ஒன்னும் சொல்லலையே ஆன்ட்டி..நான் மற்ற பிரண்ட்ஸ்கிட்ட கேட்குறேன் ஆன்ட்டி... ஒருவேளை டிபன் பாக்ஸ் எடுக்க திரும்ப வீட்டுக்கு போய் இருப்பாளோ "என்ற அடுத்த நம்பிக்கையை சித்ராவிடம் விதைத்தாள் கவி. சற்றென்று சித்ராவின் முகம் பிரகாசமானது. 


"இருக்கலாம் கவி... நான் மெயின் ரோடு வழியா வந்தேன்.. ஒருவேளை அவ உங்க வீட்டு தெரு வழியா போயிருக்க வாய்ப்பிருக்கு.. சரி வா நாம போய் பார்க்கலாம்... "


"ஆன்ட்டி.. ஸ்கூல் பெல் அடிச்சுட்டாங்க... நீங்க வேணா போய் பார்த்து அவளை அனுப்புங்க.. நான் கிளாஸ் போறேன்.." கவியின் மனதில் தப்பித்துக்கொள்ளும் அவசரம் தெரிந்தது. 


"இல்லடா.. நீயும் வா... எனக்கு மனசு ரொம்ப சோர்வா இருக்கு.. நீ துணைக்கு வந்தால்  வீடு வரை போக கொஞ்சம் தைரியமா இருக்கும்.. " சித்ராவின் முகத்தை பார்த்த கவிக்கு, அவளின் சொல்லை தட்ட முடியவில்லை. உடன் கிளம்பினாள். எதும் பேசாமல், மனதில் சிறு நம்பிக்கையுடன் நடந்த சித்ராவின் கையை பிடித்துக் கொண்டாள் கவி. 


மனதின் பயம் உடலை இயங்கவிடாமல் செய்தது. அவர்கள் இருவருக்குமே நடை தளர்ந்தது. "என்ன சித்ரா இந்த பக்கம்.. "என்று கேட்டபடி திடீரென்று சரசக்கா எதிரில் வர, சித்ராவின் முகம் மேலும் கலவரமானது. 


"நம்ம ஷர்மியை காண…."என கவி ஆரம்பித்த நொடி, அவள் கையை இறுகப் பற்றி அவளின் பேச்சை தடுத்தாள் சித்ரா.


"ஸ்கூல்ல ஷர்மி மிஸ் வரசொன்னாங்க... அதான் வந்தேன்க்கா.. "என்று சிரித்தபடி சொல்லிக்கொண்டே சரசின் பதிலைக் கூட எதிர்பாராமல் கவியின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு வேகமாக நடக்க ஆரம்பித்தாள் சித்ரா. சரசக்கா இந்த தெருவின் லௌட் ஸ்பீக்கர். ஒன்று சொன்னால் ஒன்பதாக திரித்து சொல்லக்கூடியவள். ஷர்மியை தேடுவதாக சொன்னால், இவளே ஒரு கதையை கட்டி விடுவாள் என்று தான் சித்ரா வேகமாக போகிறாள் என்பதை கவி புரிந்துகொண்டாள்.


“ஆக்சிடெண்ட் எதாவது ஆகி இருக்குமோ ‘, ஒரு மனிதனின் பதற்றம் பல அசம்பாவிதங்களை நினைவுகளுக்கு கொண்டு வருகிறது. “அதெல்லாம் இருக்காது ஆன்ட்டி…” கவி சமாதானப் படுத்தினாள். அந்த நேரம் அவள் சித்ராவிற்கு அன்னையாக தன்னை பாவித்துக் கொண்டாள். 


எதிர்பார்ப்போடு வீடு வந்த இருவருக்கும் அங்கும் அவள் இல்லை என்றதும் கவியின் மனதில் கலவரம் பூண்டது. சித்ராவின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. கேவல் சத்தம் வெளியே கேட்டுவிடாதபடி சேலை முந்தானை தலைப்பை வாயில் பொத்தியபடி அழுத சித்ராவை தேற்ற வழி தெரியாமல் கவியும் கூட சேர்ந்து அழுதாள். 


"அம்மாவை கூட்டிட்டு வரவா ஆன்ட்டி.."கவியின் கேள்விக்கு மறுப்பாக தலையசைத்தாள் சித்ரா. 


"நீ ஸ்கூல் போ.. நான் ஷர்மி அப்பாக்கு போன் போட்டு வர சொல்லிக்குறேன். ஸ்கூல்ல யார்ட்டயும் எதும் சொல்லிடாதடா.." என்று வீட்டை பூட்டி டெலிபோன் பூத் நோக்கி நடந்தாள்.


ஷர்மி தன் காதலனுடன் ஓடிப் போக போவதாக சொன்ன பொழுது, பதற்றமாகவே இருந்தாலும், தோழியின் காதலுக்கு உதவ போவதை பெருமிதமாக நினைத்த கவிதாவின் மனம், ஷர்மி அம்மாவின் பரிதவிப்பின் உணர்வை கண்கூடாக பார்த்ததில் இருந்து தான் செய்த தவறின் ஆழம் புரிந்தது. பதற்றம்,பயம்,துரோகம் என பல கலவையான உணர்ச்சிகளுடனும் கேள்விகளுடனும், அவை தந்த பாரத்தோடும் பள்ளி நோக்கி நடக்க ஆரம்பித்தாள் கவிதா.


அடுத்த இரண்டு நாட்களில் ஷர்மியை கண்டுபிடித்து, மொத்த குடும்பமும் இரவோடு இரவாக ஊரை விட்டு சென்னைக்கு சென்று விட்ட செய்தி கவிதாவின் காதில் எட்டியது. விடலைப் பருவ விளையாட்டில் கிடைத்த அடி கவிதாவின் மனதில் ஆழப்பதிந்தும் போனது. எதுவுமே தெரியாத மாதிரி சித்ரா ஆன்ட்டியிடம் அவள் நடந்து கொண்ட விதம்  இன்றளவும் அவளை குற்றவுணர்ச்சிக்கு தள்ளி இருந்தது. சித்ரா ஆன்ட்டியை பார்த்துவிட்டால் இத்தனை நாள் பட்ட மன அவஸ்தை தீரும் என்று நினைக்கையில் கவிதாவின் மனம் லேசானது. அழுத்திக்கொண்டிருந்த பாரத்தை இறக்கி வைத்த ஆசுவாசம் கிடைத்தது.


நினைவுகளை கலைப்பது போல் வாசலில் அழைப்பு மணி அடித்தது. சத்தம் கேட்டு எழுந்து வந்து வாசலை பார்த்தாள் கவிதா. மகளின் பள்ளித் தோழி பவித்ரா நின்றிருந்தாள். "வாடா பவி...  அதுக்குள்ள ஹோம்ஒர்க் முடிச்சிட்டியா....கீது ரூம் உள்ளதான் இருக்காள்... போய் பாரு... நான் காபி போட்டு எடுத்து வரேன்.."என்றபடி சமையலறைக்குள் நுழைந்தாள். சிரிப்பு சத்தத்துடன் பிள்ளைகள் பேசிக் கொண்டிருந்ததை காபியை ஆற்றியப்படி பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு, தன் சிறு வயது நட்பின் பிம்பம் தெரிந்தது. அது ஒரு மாசற்ற நிர்மலமான ஒளியாகவே அவள் உணர்ந்தாள்.

                               முற்றும் 




Comments