நூல் : காடர்
ஆசிரியர் : பிரசாந்த் வே
பதிப்பகம் : எதிர் வெளியீடு
விலை : Rs. 140

கடல், காடு என்றாலே அதில் இருக்கும் பிரம்மாண்டம் நம்மை உள்ளிழுக்கும். கடலின் ஆழத்திற்குள்ளும், அடர்ந்த காட்டுக்குள்ளும் சென்று வர எவருக்குமே ஆசை இருக்கும். மனிதர்களற்ற இருண்ட காட்டுக்குள் சென்று அங்கிருக்கும் பல்லுயிர்களை காண விரும்பி நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும், எவ்வாறு காடுகளை பாதிக்கிறது என்பதை சொல்கிறது 'காடர்'. Adventure & explore செய்கிறோம் என்ற பெயரில் இயற்கையை எவ்வளவு நாசம் செய்கிறோம் என்பதை முகத்தில் அடிப்பது போல் சொல்லி இருக்கிறது 'காடர்'. அதோடு அங்கு வாழும் ஆதிவாசி மக்களின் இன்னல்கள், காட்டுயிர்களுக்கு நாம் கொடுக்கும் இன்னல்கள் என ஒவ்வொரு கதையும் காட்டை சுற்றியே நகர்கிறது.

கோவையை சேர்ந்த பிரசாந்த் வே அவர்களின் முதல் சிறுகதை தொகுப்பு 'காடர்'. காட்டின் மேல் உள்ள காதலை  பத்து சிறுகதைகளாக தொகுத்து வெளியிட்டு இருக்கிறார் ஆசிரியர். தற்போது ஒரு தனியார் செய்தி தொலைக்காட்சியில் செய்தியாளராக பணியாற்றி வருகிறார்.

'தொடர்பு எல்லைக்கு அப்பால்' கதை மிகவும் உணர்வுபூர்வமாக இருந்தது. மலை கிராமங்களில் பள்ளிக்கூடம் என்பது பெரிய விஷயம். அங்கு பிள்ளைகளை படிக்க வைக்க நினைப்பவர்கள் சொற்பமே. அவ்வாறு படித்து பலர் உதவியுடன் மேற்படிப்பை எதிர்நோக்கி இருந்த மாடனுக்கு, ஒரு சதவீத பழங்குடி இட ஒதுக்கீட்டில் அது கிடைக்காமல் போகிறது. மருத்துவமும், வேளாண்மை படிப்பும் கண்ணுக்கு எட்டிய தூரம் இருந்தும் பற்றிக் கொள்ளமுடியாமல் மறுபடி காட்டிற்கு மாடுகளை மேய்க்க செல்வது மீள முடியாத துயரம்.

படிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் மற்றொரு கதை 'காட்டுப் பள்ளி'. பள்ளியின் ஆசிரியர் ஜெயராஜின் உன்னதமான பணி நம்மையும் நெகிழ வைக்கிறது. அக்கதையில் ஜெயராஜ் சாரை யானை துரத்தும் சம்பவம் நிஜத்தில் நடப்பது போல் பதைபதைக்க வைக்கிறது.

ஒரு யானையின் பரிதவிப்பை சொல்கிறது 'வலசை தொலைத்த யானை'. கும்கியாக பல காலம் முகாம்களில் இருந்து பழகிய 'ஆசாத்' என்கிற யானை தப்பித்து தன் இருப்பிடத்துக்கு போக நினைத்து காட்டுக்குள் ஓடுகிறது. ஆனால் மனிதர்களின் ஆக்கிரமிப்பால் அதனால் தன் பாதையை கண்டுபிடிக்க முடியாமல் திணறுகிறது. அதன் பாதையை தேயிலை காடும், குடியிருப்பும் ஆக்கிரமித்து, மின் வேலி போட்டும், குழி தோண்டி போட்டும் காட்டின் பாதையை மறைத்து, மொத்த காட்டின் வழித்தடத்தையும் அழித்திருப்பதை காணும் யானை மனதிற்குள் குமுறும் இடம் நமக்கு கண்ணீரை வரவழைக்கிறது.

தங்களது நிலம் என்று பல காலம் காடுகளில் வாழும் ஆதிவாசி மக்களை, அங்கிருந்து அவர்களை வெளியேற்றி விட அரசாங்கம் எடுக்கும் பிரயத்தனங்களை காடுகளின் மேல் சிறிதளவு காட்டி இருக்கலாம். ஒவ்வொரு காடுகளையும் சரணாலயங்களாக மாற்றி, அங்கிருக்கும் உயிர்களுக்கு அம்மக்கள் இடைஞ்சலாக இருப்பதாக சொல்லி அவர்களை ஊருக்குள் அனுப்பி விட நினைக்கிறார்கள். அதற்கு அவர்கள் கையில் எடுத்து இருக்கும் ஒரு ஆயுதமாக திருட்டு பழியை சுமக்க வைக்கிறார்கள். சமீபத்தில் கேரளாவில் மது என்கிற வனவாசியை சந்தேகத்தின் பெயரில் அடித்து கொன்ற சம்பவம் நமக்கு ஞாபகத்தில் வருகிறது. அதே கதாபாத்தித்தை தன் சிறுகதையிலும் உலவ விட்டிருக்கிறார் ஆசிரியர்.

காட்டு மிருகங்களை வைத்து நாட்டில் நடக்கும் பிரச்சனைகளை பேச வைப்பது போல் எழுதி இருக்கும் 'காட்டு மாதா கி ஜெ ' சிறுகதை சுவரசியமாக இருந்தது. இன்றைய ஒன்றிய அரசை பகடி செய்வது போல் இருந்தது இக்கதை.

மனிதனும், மிருகமும் ஒன்றாக வாழ முடியாது என்று சொல்லும் அரசாங்கம் காசுக்காக eco tourism, resort என்று காட்டை திறந்து விடுவதும், அதற்காக தார் சாலை, காட்டேஜ் என கட்டி காட்டை அழிப்பது எந்த விதத்தில் நியாயம் என்று கேள்வி எழுப்புகிறது 'கானகம்' சிறுகதை. வனத்தில் இருக்கும் மனிதர்களை வெளியேற்றிவிட்டு தந்தம், புலி தோல், சந்தன மரம் என வேட்டையாடி காசு பார்க்கும் ரேஞ்சர்களும் இருக்கிறார்கள். ஆனால் மொத்த பழியையும் காட்டுவாசிகளின் மேல் போட்டு விட்டு தப்பித்து விடுகிறார்கள். இப்படிப்பட்டவர்களின் கைகளில் காட்டை ஒப்படைத்து விட்டு ஆதி மனிதர்களை விரட்டுவது  நியாயமற்ற செயலாக இருப்பதை அரசாங்கத்திடம் யார் கேள்வி கேட்பது ?

பிரசாந்த் வே அவர்களின் எளிமையான, கோர்வையான எழுத்து நடையும், காடுகளை பற்றிய விவரணையும் நம்மையும் இயற்கையோடு ஒன்றச் செய்கிறது.

'உணவும் வாழிடமும் மறுக்கப்படும் போது, மிருகங்கள் கூட காட்டை விட்டு வெளியே வந்து அதன் பிரச்சனையை உலகிற்கு புரிய வைக்கிறது. ஆனால் பழங்குடி மக்களின் அழுகையும், குரலும் காட்டுக்குள்ளயே புதைந்து விடுகிறது ' என கூறும் ஆசிரியரின் கூற்று எவ்வளவு உண்மை என புரிகிறது. 'மனிதன் காலடி தடம் பட்டால் புல் கூட முளைக்காது ' என்பதை கண்கூடாக பார்த்தும், காட்டுயிர்கள் வாழும் இடத்தை மனிதர்களின் கையில் விடுவது பேராபத்து என்பதை இச்சிறுகதை தொகுப்பு உணர்த்துகிறது. நன்றி.

Comments