நூல் : அத்தினி
ஆசிரியர் : சித்ரா சிவன்
பதிப்பகம் : ஸீரோ டிகிரி பப்ளிஷிங்

பெண்களின் உரையாடல்கள், கொண்டாட்டங்கள், ஏக்கங்கள், திமிர், அதிகாரம், கண்ணீர், வைராக்கியம் என அவர்களின் மொத்த மன உணர்வுகளையும் கொட்டித் தீர்க்கிறது 'அத்தினி'. பெண்கள் மட்டும் இருக்க விரும்பும் ஒரு குட்டி உலகத்தில் அடங்கிவிட நினைக்கும் ஒரு பெண்ணின் கதை. இல்லை...அப்படி நினைக்கும் பல பெண்களின் கதை. பெண்களை, பெண் யானையோடு ஒப்பிட்டு இருக்கும் ஆசிரியர், அவரின் கதாபாத்திரங்களையும் அவ்வாறே வலிமையான பெண்களாக உலவ விட்டிருக்கிறார்.

சித்ரா சிவன், கவிஞராக இருந்து நாவலாசிரியராக பரிணமித்து இருக்கிறார். தேனி மாவட்டத்தை சேர்ந்த இவர் 'ஆதிலா, ஒளவையின் கள் குடுவை' என்ற இரண்டு கவிதை தொகுப்பை வெளியிட்டுள்ளார். 'அத்தினி' இவரது முதல் நாவல். 2024 ஸீரோ டிகிரி இலக்கிய விருது பெற்ற நாவல்.

ஒரு மருத்துவமனையில் கேன்டீன் வைத்து நடத்தும் பவித்ரா தேவி, உமையாள், அங்கு நர்ஸாக பணிபுரியும் பூங்கோடி, கண்மணிசாரதா அங்கு மருத்துவத்திற்கு வரும் வசந்தமுல்லை, சரிதா என அனைத்து பெண்களுக்கும் ஒரு கதை இருக்கிறது. ஒவ்வொரு கதையிலும் ஒரு ஆணின் அகங்காரமும், ஆணவமும் காரணமாக இருக்கிறது. சந்தேக கணவனை அடிபணிய வைக்க தன் உடம்புக்குள் முனி இருப்பதாக நம்பவைத்து ஆட்டுவிக்கும் பூங்கொடி, அருவாள் வெட்டு வாங்கியும் கணவனை காட்டிக் கொடுக்காத வாசவதத்தை என கணவனால் அவமானமும், வேதனையும் அடையும் பெண்கள் அந்த எல்லையை தாண்டி வெளிவர முடியாமல் மூச்சு விட சிரமப்படும் சூழலில் சிக்கியுள்ளனர். அவர்கள் மூச்சு விட ஒன்று கூடும் இடமாக கேன்டீன் இருக்கிறது. அங்கு அவர்களுக்குள் நடக்கும் உரையாடல்கள், கேளிக்கைகள் என கதை செல்கிறது.

இதில் தனித்துவமாக இருந்தது பவித்ராதேவியின் தாய் அன்னக்கொடியின் கதை. மனதை உருக்கும்படி இருக்கிறது. சிறு நகரங்களில் நடக்கும் சீட்டு பிடிக்கும் தொழிலில் நடக்கும் நன்மை தீமைகளை விலாவரியாக விளக்கி கதையின் மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கிறது அன்னக்கொடியின் கதை. அழுத்தமும், தாட்டியமான பெண்ணாக அறிமுகமாகும் அன்னக்கொடி திருமணத்திற்கு பின் அவளின் இயல்புநிலை மாறி இறுதியில் கொஞ்சமும் எதிர்பார்க்காத முடிவை எடுப்பது வேதனையின் உச்சம். எவ்வளவு மன உறுதியுடைய பெண்ணாக இருந்தாலும், ஒரு கட்டத்தில் ஆண்களின் காலடியில் கிடக்க வேண்டிய நிர்பந்தம் அவளுக்கு ஏற்படும் என்பதை சொல்வது போல் இருந்தது அன்னக்கொடியின் வாழ்க்கை.

ஆண், பெண்களை எப்பொழுதும் தனக்கு சேவகம் செய்யும் அடிமையாக இருப்பதையே விரும்புகிறான். அதில் இருந்து மீறி வர எத்தனிக்கும் பெண்ணுக்கு அவபெயர் கொடுத்து அசிங்கப்படுத்துவத்தில் கணவனின் பங்கு அலாதியானது என்பதை முகத்தில் அறைவது போல் சொல்லி இருக்கிறார் ஆசிரியர்.

கதைகளம் தேனி மாவட்டத்தை சுற்றியும், தோட்டங்கள், வைகை ஆற்றின் கரையிலும் நடப்பதால் பசுமையும் குளிர்ச்சியும் எழுத்தின் வழி நம்மை கரைய வைக்கிறது. அதே போல் அந்நிலத்தின் வட்டார வழக்கு மொழி எதார்த்தமாக வந்து விழுகிறது.

பெண்ணின் நுண்ணிய அக உணர்வுகளை விளக்கும் இடங்களில் சித்ரா கவிஞர் என்பதை நிரூபித்து விடுகிறார். அவ்வளவு emotional touch இருக்கிறது அவரது எழுத்தில். நேர்த்தியான விவரணை காட்சிகளாக கண்களில் விரிகிறது.

ஆண்களை அவ்வளவு வெறுக்கும் பவித்ராதேவி,  மனம் மாறும் அளவு justify செய்யவில்லை இளங்கோ, மாறன் கதாபாத்திரங்கள்.

மது அருந்தி தான் பெண்களின் கொண்டாட்டம் இருக்க வேண்டும் என்பது அவசியமாக எனக்கு படவில்லை.

எழுத்திலும், காட்சிப்படுத்துதலிலும் 'அத்தினி' யில் வென்றுவிட்டார் சித்ரா. தோழியாக அதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். மேலும் பல படைப்புகள் வெளிவர வாழ்த்துகள். நன்றி.


 

Comments