நூல் : கலவை
ஆசிரியர் : ம. காமுத்துரை
பதிப்பகம் : விகடன் பிரசுரம் 9500068144
நூல் : மில்
ஆசிரியர் : ம. காமுத்துரை
பதிப்பகம் : டிஸ்கவரி புக் பேலஸ் 044 48557525
வருடத்தின் முதல் நூலாக எதை வாசிக்கலாம் எனத் தேடியதில் தோழர் காமுத்துரை அவர்களின் 'மில்' நாவல் கையில் கிடைத்தது. ஏற்கனவே அவருடைய 'குதுப்பி', 'கடசல்' வாசித்த அனுபவம், கதை ஆரம்பித்த வேகத்தில் என்னை உள்ளே இழுத்துச் சென்றது. 100 பக்கம் வாசித்து முடித்திருந்த வேளை, அன்பு தோழி ஆர்த்தி 'கலவை' நூலை பரிசாக அனுப்பி இருந்தார். உடனே மனம் 'கலவை' யை வாசிக்க பரபரத்தது. 'மில்' யை விட்டு 'கலவை' யை வாசிக்க ஆரம்பித்தேன்.
எளிய மனிதர்களின் வாழ்வியலை காமுத்துரை தோழரை தவிர வேறு யாரால் இவ்வளவு நுணுக்கமாக சொல்ல முடியும் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். கட்டுமான பணியாளர்களின் தினசரி நடவடிக்கைகள், அவர்களின் உழைப்பு, கட்டுமான பணிகளின் படிப்படியான வளர்ச்சி, அதனால் தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட இழப்புகள், ஆதாயங்கள் என ஆரம்பித்து அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை வரை ஒரு விரிவான பார்வையை தருகிறது இந்நாவல். கதையின் மையமாக பூங்கொடி, குமாரின் உறவையும், அதனால் இரு குடும்பங்களுக்கு ஏற்படும் பூசலையும் மிக சுவாரசியமாக எடுத்து எழுதியுள்ளார்.
நாவலை வாசித்து முடித்திருக்கும் பொழுது ஒரு வீடு கட்டி முடித்துப் பார்த்த அனுபவத்தை கொடுக்கிறார் ஆசிரியர். கதையில் வரும் மணல் லாரி தெரியாமல் நமது தெருவுக்குள் வந்தது போன்று 'வரட்டூ... வரட்டூ... என்ற வார்த்தை காதில் ஒலிக்கிறது. ஒவ்வொரு காட்சியும் நிஜத்தை பிரதிபலிக்கிறது. கட்டுமான பணிக்கு ஆட்களை சேர்த்து வேலை முடித்து அனுப்பும் வரை கங்காணிக்கு இருக்கும் பொறுப்பை, குமார் கதாபாத்திரம் மூலம் சரியாக எடுத்துரைத்திருக்கிறார் ஆசிரியர். சரியான நேரத்திற்கு கலவை மிஷின் வராமல் பதறி காத்திருப்பதும், செய்த வேலைக்கு ஒழுங்காக கூலி கொடுக்காமல் அலைய வைப்பதும், உள்ளூர் ஆட்களை விட்டு வெளியூர் ஆட்களை வேலையில் அமர்த்துவது என கட்டிட பணியாளர்கள் சந்திக்கும் இன்னல்கள் வரிசை படுத்தி இருக்கிறார் ஆசிரியர்.
வேலை பார்க்கும் இடத்தில் குழந்தைகளை கூட்டி வந்து அவர்களையும் கவனித்த படி வேலை பார்க்கும் சித்தாள் பெண்களின் நெருக்கடியை வாசிக்கும் பொழுது நமக்கே அழுத்தத்தைக் கொடுக்கிறது. வேலையின் ஊடே சிறுநீர் கழிக்க இடம் கிடைக்காமல், கட்டுமான வீட்டில் உள்ள ஒரு சிறு அறையை பயன்படுத்தும் போது, 'அது பூஜை அறை ' என அய்யாம்மா சொல்லும்பொழுது சிரிப்பை அடக்க முடியவில்லை. பூஜைஅறை, கழிவறை என எந்த வித்தியாசமும் காணாமல் அவர்கள் புழங்கும் இடமாக நம் வீடுகள் இருக்கிறது என்பதை போகிற போக்கில் ஆசிரியர் குறிப்பிட்டு இருப்பது சிறப்பு.
கட்டிட வேலையில் கங்காணியாக ஒரு பெண் இருக்கமுடியும் என்பதை உணர்த்துகிறது அய்யாம்மா கதாபாத்திரம். தடாலடியான பேச்சும், மற்றவர்களை வேலை வாங்கும் அதிகார தோரணையும் மட்டுமல்லாது மகன் குமாரை காபந்து பண்ணி அவனுக்கு திருமணம் செய்து வைக்க அவள் செய்யும் சூழ்ச்சிகளும் அவளது குணத்தை எடுத்துக்காட்டுகிறது. பூங்கோடி விஷயத்தில் அவள் எடுக்கும் முடிவு உவப்பாக இல்லை.
குமார் - பூங்கோடி உறவில், பூங்கொடியின் காதல் உண்மையாக இருந்தாலும் குமாரின் நடத்தை அது உடல் தேவைக்காக மட்டுமே இருப்பதாக தெரிவதால், பூங்கொடி அவனுடன் சேராமல் இருப்பதே நல்லதாக படுகிறது. இருந்தாலும் தனக்கு ஒரு நியாயம் கிடைக்க அவள் எடுக்கும் பிரயத்தனங்கள் அபாரம். இறுதியில் அவளுக்கு கைகூடும் வாழ்வு மகிழ்ச்சியாக அமைவது திருப்தியைத் தருகிறது.
குமாரின் கேரக்டர் ஒழுக்கமற்றதாக இருப்பதை ஒத்துக் கொள்ளாதது போல் அதை balanced ஆக ஆசிரியர் கையாண்டிருப்பது ஏன் என்று தெரியவில்லை. இதெல்லாம் கட்டுமான பணியாளர்களிடம் சகஜமான விஷயம் என்பதை போன்ற கருத்தியலை திணிப்பது போல் உள்ளது. கதையின் இறுதி முடிவு சுபமாக இருந்தாலும் நம்பகத்தன்மையுடன் இல்லாமல் இருப்பதும் உறுத்துகிறது.
கதை முழுவதும் எளிய மக்களின் பேச்சு வழக்கில் எழுதி இருப்பது காட்சியும், மனிதர்களும் உணர்வுபூர்வமாக நம் கண் முன் கொண்டு வந்து சேர்க்கிறது. கதாபாத்திரங்களின் மன உணர்வுகளை அவர்களையே கூட யோசிக்க விடாமல், அவர்களையும், நம்மையும் சேர்த்து இழுத்துக் கொண்டு செல்கிறார் ஆசிரியர். கையில் எடுத்து ஒரே மூச்சில் வாசித்து முடித்து விடும் அளவு எந்த தேக்கமும் இல்லாமல் கதை நகர்வது சிறப்பு.
தொடர்ந்து 'மில்' நாவலையும் வாசித்து முடித்தேன்.
அதிகாரவர்க்கத்தின் கீழ் வேலை செய்யும் தொழிலாளர்களின் நிலைமையை பேசுகிறது 'மில்' நாவல். தங்கள் உழைப்பை சுரண்டுகிறார்கள் என்று தெரிந்துமே, அதை மீற முடியாத அளவு பல விதிகளை போட்டு அவர்களை அடிமைகளாக நடத்துகிறது மில் நிர்வாகம். முன் அனுபவம் இல்லாத தொழிலாளர்களை ட்ரைனிங் என்ற பெயரில் 6 மாதங்கள் எந்த சம்பளமும் இல்லாமல் வேலை வாங்கி, அவர்களின் குடும்ப தேவைகளுக்கு கூட கடனாளி ஆக்கும் நிலைமைக்கு தள்ளுகிறது. ஒரு கட்டத்தில் அனைத்து இன்னல்களையும் தாண்டி சம்பளம் வாங்கும் நிலை வந்தாலும், அவர்களின் சிறு தவறை கூட பெரிதாக்கி இடைநீக்கம் செய்து அவர்களை மனஉளைச்சலுக்கு ஆளாகுக்கிறார்கள். அவர்களை எதிர்க்க திராணி இல்லாத தொழிலாளர்களை வழிநடந்த வருகிறது வேலப்பன் கதாபாத்திரம். இளமை வேகத்தில் ராசு, ஆனந்தன் எடுக்கும் முடிவுகளில் உள்ள பிரச்சனைகளை விளக்கி, சங்கம் அமைத்தால் மட்டுமே இதற்கான நிரந்தர தீர்வாக அமையும் என்பதையும் எடுத்துரைக்கிறார்.
ஊர் பஞ்சாயத்து என்ற பெயரில் மில் நிர்வாகத்திடம் தங்கள் கோரிக்கைகளை வைத்து பேச முடியாது என்பதையும் சுட்டிக்காட்டுகிறார். மில்லுக்காக ஊரில் நிலம் வாங்கும்பொழுது ஊர் பெரியவர்களுக்கு கொடுக்கும் மரியாதை, தொழிலாளர்களின் பிரச்சனைகளை பேச வரும் பொழுது நாசுக்காக கழட்டி விடும் நிர்வாகத்தின் சூழ்ச்சியை நமக்கு புரிய வைக்கிறார். இதில் உள்ளடி வேலையாக மேஸ்திரி, மாஸ்டர் என தொழிலாளர்களை மேலும் குடைச்சல் கொடுப்பது வேதனை. இதில் மேஸ்திரி தியாகராஜன் மட்டும், ஒரு கட்டத்திற்கு மேல் நியாயத்தின் பக்கம் நிற்கிறார்.
விவசாயிகளிடம் இருந்து பஞ்சையும் அடுமாட்டு விலைக்கு வாங்கி, மில் தொழிலாளர்களுக்கும் ஒழுங்கான சம்பளமும் தராமல் அரசியல் செய்யும் முதலாளிகள் இருக்கும் வரை சாமானியர்கள் அவஸ்தை படத்தான் வேண்டியுள்ளது. இதற்கு தீர்வாக சங்கம் அமைத்தாலும், அதிகாரவர்க்கத்தை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாமல் போவது தான் நிஜம் என்பதை போல் இறுதியில் சொல்லி இருப்பது வெகு நிதர்சனம். ஆண்கள் என்றால் தானே சங்கம், போராட்டம் என்பதெல்லாம், பெண்களாக இருந்தால் எந்த பிரச்சனையும் இல்லையே என்று பெண்களை குறைந்த கூலிக்கு வேலையில் நியமிப்பது அதிகார வெறியின் உச்சம்.
"மிசினுக்குள்ள நொழஞ்சாச்சுன்னா நாங்களும் மிசின்தே..." என்ற அப்பத்தேவனின் வார்த்தையை போல், மிஷினுக்கு இருக்கும் மரியாதை கூட மனிதர்களுக்கு இல்லை என்பதை உணரமுடிகிறது.
மில்லின் ஒவ்வொரு டிபார்ட்மென்ட் பத்தியும் விவரமாக எழுதி இருப்பது வாசிப்பவர்க்கும் புரிதலை தருகிறது. யதார்த்தத்தை விட்டு எங்கும் விலகாமல் கதை நகர்வது சிறப்பு. ராசு -நாகு, ஆனந்தன் -செல்வி காதல் உரையாடல்கள் கதையின் ஊடே வருவது மில்லின் வெக்கையைத் தணிக்கிறது. நன்றி.
Comments
Post a Comment