பெயரற்றவர்களின் குரல்
கூண்டுக்கிளிகள்
சமூகத்தில் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் ஏராளம். பாலியல் அத்துமீறல், வரதட்சணை கொடுமை, சாதிய ஒடுக்குமுறை என பல செய்திகள் நாம் தினந்தோறும் கடந்து செல்கிறோம். விளிம்பு நிலை மக்களின் குரல்கள் எங்கிருந்தாவது நம் காதுகளுக்கு எட்டி விடுகிறது. அவர்கள் சந்திக்கும் கொடூரங்கள் பொதுவெளியில் பேசு பொருளாக இருக்கிறது. அதற்கு தீர்வுகள் சரியாக கிடைக்கிறதா என்கிற அக்கறையும் நம்மிடையே இருக்கிறது.
இங்கு நான் பேசவிருப்பது அடுத்தட்டு, நடுத்தர வாழ்க்கையை ஓட்டும் பெண்களை பற்றியதில்லை. சமூக அந்தஸ்தில் உள்ள குடும்பங்களின் பெண்களை பற்றியது. இவர்களின் குரல்களை பொதுவெளியில் எங்கயாவது கேட்டு இருக்கிறோமா ?
ஒவ்வொரு ஊரிலும் ஒரு நான்கு எழுத்து இனிஷியல் கொண்ட குடும்பங்கள் இருக்கும். அவ்வூரில் அக்குடும்பத்திற்கு என்று ஒரு மரியாதை இருக்கும். சாதி சங்கங்களிலும் அவர்களுக்கு தனி மரியாதை கொடுப்பார்கள். யார் இந்த நான்கு எழுத்து இனிஷியல் குடும்பங்கள் ? இரண்டு மூன்று தலைமுறையாக அவ்வூரில் தொழில் செய்பவர்கள், அரசியல் செய்பவர்கள் ஆவர். தொழிலோ, அரசியலோ இறங்குமுகமாக இருந்தாலும் அந்த குடும்ப பெயர் மட்டும் நிலைத்து இருக்கும். இப்படி குடும்ப பெயர்களுக்காகவே பெண் கொடுப்பார்கள், பெண் எடுப்பவர்கள் உள்ளனர். சமூக அந்தஸ்தில் தாங்களும் ஒரு படி மேலே செல்ல வேண்டும் என்கிற பேராசையும், இன்னார் குடும்பத்தில் தன் மகளை கொடுக்க போகிறோம் என்கிற போதையும் அவர்கள் கண்ணை மறைத்து விடுகிறது. இதனால் மகளை கட்டிக் கொடுக்கும் மாப்பிள்ளையை பற்றி எதும் விசாரிக்காமல் மகளை தள்ளி விடுவதில் முனைப்புடன் செயல் படுவார்கள்.
இதில் எந்த பாவமும் அறியாத பெண்ணின் நிலை தான் பரிதாபம். ஏதோ ஒரு பெரிய காட்டுக்குள் சிக்கிய மான் போல அவள் அக்குடும்பத்தில் காலடி எடுத்து வைப்பாள். பெரிய பெயர் பெற்ற குடும்பம், செல்வ செழிப்பு மிக்க குடும்பத்தில் தன் தந்தை திருமணம் செய்து வைத்துள்ளார் என்கிற சந்தோஷமும் பெருமையும் ஒரு சேர வாழ்க்கையை எதிர்நோக்கி செல்கிறாள். ஆனால் அவள் அடுத்தடுத்து சந்திக்கும் துயரங்கள் அந்த குடும்பத்தின் உண்மை நிலைப்பாட்டை அவள் புரிந்து கொள்கிறாள். அது நிஜமாகவே ஒரு காடு தான். அதில் இருந்து மீண்டு வெளியே வர அவளால் இனி முடியாது. வீட்டுக்குள் இருக்கவே அவளுக்கு அனுமதி. வீட்டு வாசலுக்கு காலடி எடுத்து வைக்க முடியாது. வாசலிலுமே வீட்டுக்குள் என்ன நடக்கிறது என்பதை அறியாத படி இரண்டு ஆள் உயர அளவு கேட் இருக்கும். அவளுக்கு என்ன தேவை என்றாலும் அவள் சுதந்திரமாக வெளியே சென்று வாங்க முடியாது. தேவையானது அனைத்தும் கிடைப்பதால் தன்னை அவ்வீட்டின் ராணியாக தன்னை பாவித்துக் கொள்வாள்.
அதிகபட்சம் திருமண விழா, குடும்ப சந்திப்புகளுக்கு மட்டுமே வெளியே செல்ல அனுமதிக்கப்படும். அதுவும் கணவன், மாமியாரோடு மட்டுமே செல்ல முடியும். அவளுக்கென்று தனிப்பட்ட விருப்பமோ ஆசையோ எதும் இருந்து விட முடியாது. கணவனுடன் ஆசையாக எங்கேயாவது வெளியில் செல்ல அனுமதி கிடைத்தாலும், அதற்கு தேவையான பணத்தை தன் தந்தையின் கையில் இருந்து எதிர்பார்ப்பான் கணவன். அப்பொழுது தான் அவளுக்கு உரைக்கும். கணவன் என்ன தொழில் செய்கிறான் ? அவன் வருமானம் என்ன ? போன்ற கேள்விகள் அவளை துளைக்கும். 'அப்பாவோடு சேர்ந்து பிசினஸ் செய்கிறார்' என்று அப்பா சொன்னதை மேலும் துருவாமல் விட்டது தப்போ என உணர ஆரம்பிப்பாள். வசதியான இடங்களில் 'குடும்ப தொழில் ' என்கிற ஒற்றை வார்த்தையில் முடித்துக் கொள்வர். தந்தை தொழிலை எடுத்து நடத்த மருமகனுக்கு சாமர்த்தியம் இருக்கிறதா... இல்ல மருமகன் தந்தை காலடியில் தான் இருக்கிறாரா...தொழிலில் கடன் சுமை இருக்கிறதா ?போன்ற எதையும் சரியாக விசாரிக்காமல் பெண்ணை தாரை வார்த்து கொடுத்து விடுகிறார்கள். பெண் உள்ளே வந்ததிற்கு அப்புறமாகதான் தெரியும் தன் கணவன் வெறும் உப்புக்கு சப்பாணி என்று. எந்த செலவு என்றாலும் மாமனாரிடம் சென்று நிற்க வேண்டும். இதில் இன்னோரு கொடுமையும் சில குடும்பங்களில் நடக்கிறது. மாமனார் மருமகளிடம் நடத்தும் பாலியல் அத்துமீறல். கைகளை தடவி பணத்தை கொடுப்பது. டபுள் மீனிங்ல் பேசுவது போன்ற சில்மிஷங்களில் ஈடுபடுகின்றனர். இதில் வேதனை என்னவென்றால் இது தெரிந்த கணவனோ, மாமியாரோ கண்டும் காணாதது போல் இருப்பது தான். இவ்விஷயத்தை பிறந்த வீட்டுக்கு எடுத்து சென்றால், 'அவர்கள் சமூக அந்தஸ்தை நம்பி தான் பெண் கொடுத்தேன்.. சகித்துக் கொண்டு வாழ பழகு.. இதை வெளிய சொன்னால் கூட யாரும் நம்ப மாட்டார்கள்.. உன் கணவனிடம் பேசி தனி குடித்தனம் போ ' என்று கூறி கை கழுவி விடுகின்றனர்.
வீட்டில் உள்ள ஆண்களின் தற்குறித்தனங்களுக்கு வீட்டில் உள்ள பெண்களின் நிலை சொல்லில் அடங்காது. மது, மாது போன்றவை இவர்களின் அன்றாட வழக்கமாக கொண்டுள்ளனர். இது போன்ற விஷயங்கள் தங்கள் கணவர் செய்தால் நடு ரோட்டில் இழுத்து வெளுத்து வாங்கும் பெண்களிடையே இவர்கள் கெளரவத்திற்காக மூடி மறைக்கும் வேலையை தான் செய்கிறார்கள். எந்த ஒரு விஷயத்திற்கும் எதிர்நிலை கொண்டு செயல்படாமல் புலம்பல்களை மட்டும் கட்டி அழ வேண்டிய நிர்பந்ததில் உள்ளனர் இவ்வீட்டு பெண்கள். கெளரவம் என்றால் என்ன என்று புரியாத பத்தாம்பசலி கூட்டமாக உள்ளனர்.
இதை வெளியே சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தவிக்கின்ற பெண்கள் ஏராளம். அடிமையை போல் எந்த பொருளாதார சுதந்திரமும் இல்லாமல் வாழ நிர்பந்திக்கப் படுகிறார்கள். அவர்களுக்கென்று ஒரு பேங்க் அக்கௌன்ட் இல்லை என்பது எவ்வளவு அதிர்ச்சியான விஷயம். இன்று கிராமங்களில் நூறு நாள் வேலை திட்ட பெண்கள், நல வாரிய திட்ட பெண்கள் அனைவரும் பேங்க் அக்கௌன்ட் வைத்திருக்கிறார்கள் என்று பெருமிதம் கொள்கிறோம். ஆனால் மேல்தட்டு, படித்த பெண்களின் நிலை பற்றி வெளியே தெரியாமல் அமிழ்ந்து போகிறது. 'Gpay என்றால் என்ன' என்று கேட்கிற மேல்தட்டு பெண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அன்றைய தேவைக்கு கணவன் கொடுக்கும் பணமே அவர்களுக்கு பிரதானம்.
குழந்தை பிறந்து பள்ளி செல்ல ஆரம்பித்ததும் தான் அவர்கள் சிறிதளவேனும் சுதந்திர காற்றை சுவாசிக்கிறார். ஆனாலும் அவர்கள் மனதில் குடும்பம், தங்கள் ஸ்டேட்டஸ் போன்ற விஷயங்களை புகுத்தி பொது சமூகத்தோட இணக்கமாக இருக்க தடை போடுகின்றனர். அவர்களின் உலகமே வீடு மட்டும்தான். அவர்களின் அதிகபட்ச சோசியல் மீடியா தளங்கள் வாட்ஸாப்ப் மற்றும் youtube மட்டுமே. உலகில் நடக்கும் எந்த விஷயமும் அவர்களுக்கு ஒரு பொருட்டு இல்லை. தங்கள் ஸ்டேட்டஸ்க்கு ஏற்ற மனிதர்களுடன் மட்டும் அளவளாவி கொள்கின்றனர். இப்படி வரையறுக்க பட்ட எல்லைக்குள்ளேயே பெண்களை பழக்கி விடுகிறார்கள். அவர்கள் வெளி உலகம் தெரியாமலேயே வாழ்வதால் புதிய விஷயங்களை யார் மூலமாகவாவது அறியும் பொழுது ஆச்சர்யம் அடைகின்றனர். அவர்கள் படித்த கல்வி அங்கு மண்ணாக போய் விடுகிறது. கற்ற கல்வி மேம்பட எந்த வாய்ப்பும் இல்லாமல், வேலைக்கு செல்ல விரும்பினாலும் அனுமதி கிடைக்காமல் வீட்டில் முடங்கி போகின்றனர். நம் உரிமையையும், சுதந்திரத்தையும் பெற முடியாத திராணியற்ற பெண்களாக இருக்கிறார்கள். இந்த காலத்தில் இப்படிப்பட்ட பெண்களா என அதிசய பட வைக்கிறார்கள்.
இந்த குடும்ப கட்டமைப்பிற்குள் சிக்கி கொள்ள மட்டும் தான் முடியும். வெளியேறுவது கடினம். அத்திபூத்தார் போல் தனிக்குடித்தனம் செல்லும் பெண்களே இதில் இருந்து தப்புகின்றனர்.
கையில் ஒரு தூக்குவாளியில் கஞ்சியை ஊற்றிக் கொண்டு வேலைக்கு கிளம்பும் எளிய மக்களின் சுதந்திரம், சுய சம்பாத்தியம், இரவு வேலை முடிந்து பஸ்ஸில் அரட்டை அடித்த படி வீடு வந்து சேரும் இவர்களை கண்டால் நமக்கு உள்ளுற பொறாமை பீறுடுகிறது. குடித்து விட்டு வீடு வரும் கணவனை விளக்குமாறால் வெளுக்க இவர்களுக்கு எந்த தடையும் இல்லை. எளிய மக்களின் உணர்வுகள் சூழலுக்கு ஏற்ப வெளிப்படுத்தி விடுகிறார்கள். ஆனால் சிறைக்குள் இருக்கும் இப்பெண்களுக்கு குரல்வளை நசுக்கப்பட்டு கிடக்கிறது. டாம்பீகமாக தெரியும் இவர்களுக்குள் சொல்ல முடியாத ரணங்கள் நிரம்பி கிடக்கின்றது.
நன்றி
Comments
Post a Comment