நூல் : நீஸெவின் வேர்க்கனிஆசிரியர் : மயிலன் ஜி சின்னப்பன்
பதிப்பகம் : சால்ட்
மயிலனின் கதைகள் பெரும்பாலும் மனித உளவியலை மையமாக கொண்டு எழுதப்பட்டிருக்கும். அதுவே அவரது கதைகளின் மேல் ஒரு ஈர்ப்பை கொடுக்கும். அவரது நாவல், சிறுகதைகள் வாசித்த அனுபவத்தில் 'நீஸெவின் வேர்க்கனி' நூலை மிக எதிர்பார்ப்போடு வாசிக்க துவங்கினேன்.
புதிய கதை களம், அந்நிய நாட்டு மாந்தார்கள், பெயர்கள் என ஆரம்பமே கொஞ்சம் தடுமாற்றம் ஏற்பட்டது. பழக்கப்பட்ட மனிதர்கள், இடங்கள், சூழல்கள் கொண்ட கதைகள் மட்டுமே மனத்திரையின் முன் கொண்டு வர முடியும். ஆனால் இந்த கதை களம் ஒரு புது அனுபவத்தை கொடுத்தது எனலாம். இரண்டு வருட கப்பல் பயணத்தில் நம்மையும் அழைத்துச் சென்றது கதையோட்டம்.
இந்தியாவில் டானிஷ் கிழக்கிந்திய கம்பெனியை நிறுவி வணிகம் செய்ய கிளம்புகிறது ஒரு கப்பல். அதில் அரசின் சார்பில் விர்கிஸ், நேதா இரு நண்பர்கள் பயணிக்கின்றனர். பயணத்தில் அவர்களுக்கு ஏற்படும் இன்னல்கள், இழப்புகள்,ஏமாற்றங்கள், மரணங்களை தாண்டி அவர்கள் இந்தியா வந்து இலக்கை அடைந்தார்களா என்கிற கேள்வியோடு பயணிக்கிறது கதை.
டென்மார்கில் ஆரம்பிக்கும் கடல் பயணம் இலங்கை கடந்து தரங்கம்பாடியில் நங்கூரமிட்டு நிற்கிறது. தஞ்சையை ஆண்ட ரகுநாத நாயக்கரோடு, டானிஷ் அரசு இணைந்து போட்ட ஒப்பந்தத்தின்படி தரங்கம்பாடி கோட்டை கட்டுமான நிகழ்வுகளின் வரலாற்று பக்கங்கள் சுவாரசியத்தை தருகிறது.
நெடுந்தூர பயணத்தின் காரணமாக விர்கிஸ் தன் காதலி ரூதட்டை தன்னுடனே அழைத்து வந்து, அதனால் அவனுக்கு ஏற்பட்ட உளநெருக்கடி என கதையில் காதல் ஒரு முக்கிய பகுதியாக அமைந்து இருக்கிறது.
//நற்கலை எப்போதும் பெருவலியிலிருந்தும் உளப்பிணியிலிருந்தும் வருத்தும் ஏழ்மையில் இருந்துமே பிறக்கமுடியும்//
நாவல் ஆரம்பத்தில் வரும் 'கலை' பற்றிய விர்கிஸ், நேதாவின் தர்க்க உரையாடலை கதையின் கடைசி அத்தியாயத்தில் relate செய்திருப்பது அருமை.
அளவில் சிறிய, நூறு பக்க நாவலாக இருந்தாலும், ஆசிரியரின் அடர்த்தியான மொழி நடை வாசிக்க அயற்சியை கொடுத்தது. பெரும் கவனத்தோடு வாசிக்கவில்லை என்றால் பாதியில் புத்தகத்தை மூடி வைக்க நேரிடும். முடிவில்லா நீளமான வாக்கியங்கள் புரிந்து கொள்ள சிரமமாக இருந்தது. நூல் வடிவமைப்பு மிக அருமை.
Comments
Post a Comment