நூல் : ஊருக்கு ஒரு குடி
ஆசிரியர் : ஜுலியஸ் வனத்தையன்
பதிப்பகம் : பூபாளம் பதிப்பகம்
செங்கல்பட்டு மாவட்டம் உள்ள அச்சிறுப்பாக்கம் என்னும் ஊரில் இயங்கி வரும் 'உயிர் வலுவாக்க மையத்தை ' நடத்தி வரும் ஜுலியஸ் வனத்தையன் அவர்களின் வாழ்க்கை அனுபவத்தை சொல்லும் நூல். அவரது ஆறு வயதில் இருந்து ஆரம்பமாகிறது அவரது அனுபவ பகிர்வு. நமது வாழ்க்கை அனுபவம் போல் அல்ல அவரது அனுபவம். சிறுவயது முதல் ஒரு comfort zone குள் வாழ பழகியவர்களுக்கு இவரது அனுபவம் அதிர்ச்சியும், ஆச்சர்யமும் அளிக்கும். இப்படி எல்லாம் சமூகத்தில் நடக்கிறதா என்கிற ஆச்சர்யமும், ஆம்... இது போல் நடக்கிறது என்கிற அதிர்ச்சியும் அடையாமல் இந்நூலை விட்டு வெளியே வர முடியாது.
சாதியா ஒடுக்குமுறையை பற்றி நூல்கள் பல வாசித்து இருந்தாலும், ஒரு நேரடி அனுபவத்தை கேட்கும் பொழுது அதன் வீரியம் அதிகமாக இருக்கிறது. உண்மைதன்மை நம்மை நாமே பல கேள்விகளை கேட்க வைக்கிறது. சாதியற்ற சமூகம் வெறும் கானல் நீரோ என்கிற ஆதங்கம் தலை தூக்குகிறது.
வண்ணார் இன மக்களின் வாழ்க்கையில் எவ்வாறு மற்ற சாதியினர் அதிகாரம் செலுத்துகிறார்கள் என்பதை பள்ளி கல்வியில் இருந்து சொல்லி இருக்கிறார் ஆசிரியர். பள்ளி மட்டுமே சாதி, மத பாகுபாடு இல்லாத இடமாக நான் கருதி வந்த நிலையில், அங்கு தான் முதலில் சாதி தலை விரித்து ஆடுகிறது என்பது அதிர்ச்சியை அளித்தது. மாணவர்களுக்கு உதாரணமாக இருக்க வேண்டிய வாத்தியார்களே மற்ற சாதி பெற்றோருடன் சேர்ந்து சாதிக் கொடுமையை நிகழ்த்துவது அராஜகம். வகுப்பு தண்ணீரை குடிக்க விடாமல் தடுப்பது, வகுப்பு லீடராக வர அனுமதிக்காமல் இருப்பது, கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்க விடாமல் தடுப்பது என சிறுவயதில் நூலாசிரியர் கடந்து வந்த பாதை வலி மிகுந்தது.
வண்ணார் இன மக்களின் பழக்கமான மற்ற வீடுகளில் சோறு வாங்கி சாப்பிடுவது எவ்வளவு அவமானகரமான செயல் என்பது அந்த சிறு வயது பெண்ணுக்கு மட்டுமே தெரியும். தன் சக தோழி இருக்கும் வீட்டில் சோறு கேட்க போகும் ஒவ்வொரு நாளும் அப்பெண்ணுக்கு நரக வேதனை. சக தோழி என்று பேசவும் முடியாமல், விளையாடவும் முடியாமல் வீட்டுக்குள் ஒடுங்கிப் போகிறது அவரது சிறு வயது வாழ்க்கை.
மேற்கொண்டு படிக்க வெளியூர் செல்ல இயலாத நிலையில் தையல் கற்று கொள்ள செல்லும் நிலை ஏற்படுகிறது. அதுவே அவரது அடுத்தக்கட்ட முன்னேற்றதுக்கு உந்து சக்தியாக அமைந்தது சிறப்பு. அடுத்தடுத்து நிகழ்ந்த அவரது முன்னேற்றம் அவருக்கானது மட்டுமல்லாது ஒரு சமூகத்தின் முன்னேற்றமாக பார்க்க முடிகிறது.
குல தொழிலை வைத்து வர்ணாசிரம அடிப்படையில் பிரித்தாளும் அதிகார வர்க்கத்திற்கு முன் கல்வியின் மூலம் அனைத்து தடைகளையும் உடைத்து விட முடியும் என்பதை ஜுலியஸ் மூலம் உணரமுடிகிறது. சிறு ஊரில் ஒடுங்கி வாழ்ந்த பெண் வெளிநாடு சென்று நம் கலைகளை கற்றுக் கொடுக்கும் தைரியத்தை கல்வியும், அவரை சுற்றியுள்ள நல்ல மனிதர்களுமே காரணம். ஜுலியசின் பெற்றோர் அவருக்கு பெரும் துணையாக இருந்துள்ளது பாராட்டுக்குறியது.
'வண்ணார் சமூகத்தில் பிறந்தால் அவர்கள் சந்நதியும் வெள்ளாவி தான் போட வேண்டுமா.. அவர்கள் படித்து வேறு தொழிலுக்கு செல்லக்கூடாதா..அவர்கள் வீட்டில் அடுப்பெறிய கூடாதா..போன்ற கேள்விகளுக்கு பதில் இந்நூலில் உள்ளது.
சாதிப் பிரிவினை என்பது வேறு சாதியுடன் மட்டுமல்லாது தங்களுக்குள்ளே பிரிவினையாக இருப்பது அதிர்ச்சி தருகிறது. தங்களுக்குள் ஒற்றுமை இல்லாத பட்சத்தில் மற்ற சாதியினரை எவ்வாறு எதிர்ப்பது என்பதை அவர்கள் யோசிக்க வேண்டும்.
தீட்டு என்று சொல்லப்படும் இறப்பு வீடு, பெண் வயதுக்கு வருகிற வீடுகளில் எல்லாம் வண்ணான் சமூக மக்கள் தான் சடங்கு சம்பிரதாயங்கள் செய்கிறார்கள். முகம் சுழிக்க வைக்கும் ரத்த வாடை அடிக்கும் துணிகளை அவர்கள் சுத்தம் செய்ய கடமை பட்டவர்கள் போல் வேலை வாங்குவது அபத்தமான செயல். அதிலும் 'நடைப் பாவடை' என்கிற சடங்கு மனிதனை தரக்குறைவாக்கும் செயல் ஆகும்.
வண்ணார்களின் வழக்கமான வெள்ளாவி போடுதல், பந்தம் தயாரித்தல், வாத்து வளர்ப்பு பற்றிய குறிப்புகளை எழுதி நமக்கும் புரிய வைத்துள்ளார் ஆசிரியர்.
அவர் சார்ந்த சாதிக் கொடுமையை, அவர் பின்பற்றிய கிருத்துவ மதம் தகர்க்க உதவியதாக பொருள் படுத்திக் கொண்டாலும், இது முழுக்க ஜுலியஸின் திறமையே ஆகும் என்பது உறுதி.
எவ்வளவோ மோட்டிவேஷனல் புத்தகங்கள் வாசித்து இருக்கிறேன். அத்தனையும் தவிடுபொடி ஆக்கி விடுகிறது இந்நூல். வாசித்து முடித்ததும் நமது உடலில் புது ரத்தம் பாய்ச்சுவது போல் இருந்தது. வறுமை, சாதிக் கொடுமை அனைத்தையும் தகர்த்து ஒரு பெண் முன்னேறுவது பெரும் மகிழ்ச்சிக்குறியது மட்டுமின்றி நமக்கும் ஒரு உந்து சக்தியை கொடுப்பது மிகையில்லை. தான் கற்ற தையல் பயிற்சியை மூலதனமாக கொண்டு இன்று பல வண்ணார் இன குழந்தைகளுக்கு ஒளிவிளக்காக திகழ்ந்து வருகிறார் ஜுலியஸ். அவர் மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துகள்.
Comments
Post a Comment