தமிழ்நாட்டில் பிற மதங்கள்
நூல் : தமிழ்நாட்டில் பிற மதங்கள்
ஆசிரியர் : சிகரம் ச. செந்தில்நாதன்
பதிப்பகம் : சந்தியா பதிப்பகம்
மனிதகுலம் உருவான காலம் தொடங்கி கடவுள் நம்பிக்கையும், மதங்களின் ஆதிக்கமும் ஆரம்பமாகி இருக்கிறது. மக்களை அச்சத்தின் பிடியில் சிக்க வைத்து, தங்களது கட்டுப்பாட்டில் வைக்க அரசர்களாலும், மத குருமார்களாலும் உருவாக்கப்பட்ட சமய சித்தாந்தங்களை இன்றும் கெட்டியாக பிடித்து கொண்டு இருக்கும் சமூகத்தில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஒரு மனிதனை கடவுளின் பெயரில் மத கோட்பாடுகளை திணித்தாலும், அதில் இருந்து மீண்டு வர அம்மதத்தை பற்றிய முழு தெளிவு இருந்தால் மட்டுமே முடியும். மேலோட்டமான சமய சாஸ்திர சம்பிரதாயத்தில் சிக்கிக் கொள்ளாமல் வெளிவர மதங்களைப் பற்றிய பாடங்களை வாசிப்பது அவசியம். அப்படி ஒரு தெளிவை கொடுக்கிறது 'தமிழ்நாட்டில் பிற மதங்கள் ' நூல்.
இந்நூல் ஆசிரியர் சிகரம் ச. செந்தில்நாதன் அவர்கள், சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞராக இருந்தபடியே தமிழ் இலக்கியத்திற்கு ஏறக்குறைய 30 நூல்களுக்கு மேல் தந்திருகிறார். கட்டுரைகள், புதினங்கள், திறனாய்வு நூல்கள், சமய நூல்கள், சட்ட நூல்கள் என பல வகைமைகளில் எழுதியுள்ளார். ஒவ்வொரு நூலும் பல ஆய்வுகளுக்கு பின்பே நமக்கு அளிப்பதால் வாசகர்கள் எந்த சந்தேகத்திற்கும் இடம் தராமல் வாசிக்க முடியும்.
'தமிழ்நாட்டில் பிற மதங்கள்' என்ற தலைப்பை வாசிக்கும் பொழுது, தமிழகத்தில் உள்ள கோயில்கள், வழிபாட்டு முறைகள், அதன் வரலாறு போன்ற தகவல்கள் இருக்கும் என்ற முன்முடிவுடன் வாசிக்க ஆரம்பித்தேன். ஆனால் கடவுள் என்னும் பாத்திரத்தை ஒரு ஓரமாக வைத்து விட்டு, மதங்கள் மூலம் ஏற்பட்ட தமிழ் எழுச்சி, இலக்கிய நூல்கள், பண்பாட்டு மாற்றங்கள் என ஒரு புதிய பார்வைக்கு நம்மை இட்டுச் செல்கிறார் ஆசிரியர்.
வைதிகம், சமணம், பௌத்தம், கிறிஸ்துவம், இஸ்லாம் என ஒவ்வொரு மதத்தின் தோற்றம், அது கடந்து வந்த பாதை, தமிழகத்தில் எவ்வாறு இம்மதங்கள் வேரூன்றி நிலை பெற்றது என தனி தனியாக விரிவாக விளக்கியுள்ளது இந்நூல்.
'வைதிக மதம் நமக்கு அந்நிய மதமா ?' என்கிற கேள்வியோடு நம்மிடம் வருகிறார் ஆசிரியர். வேதத்தை மட்டுமே நம்பி, அதை அடிப்படையாகக்கொண்டு வழிபாடு முறைகளை கொண்டு உருவானது தான் வைதிக மதம். இதை மதம் என்று கூட சொல்லாமல் வேதம் சார்ந்த தொழில் என்றும் ஒரு சாரர் கூறுகின்றனர். சைவமும், வைணவமும் கலந்த இந்து மதம் தான் வைதிக மதம் என ஒரு சாரர் கூறும் கருத்துக்கு எதிரான ஒரு வாதத்தை முன் வைக்கிறார் ஆசிரியர். வடக்கில் தோன்றிய வைதிக மதம் எப்படி தமிழகத்திற்கு வந்து சைவ மதத்திற்க்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டு ஆள வந்தது என்பதை தெளிவாக விளக்கியுள்ளது இந்நூல்.
அதேபோல் ஆரியர்களின் வரலாறு, அவர்களின் கடவுள், புராண கதைகள் போன்றவற்றையும் விரிவாக அலசியுள்ளது. வேதங்களை உயர்த்திப் பிடித்து, தங்களை மேதைகளாக சித்தரித்து, சராசரி மனிதர்களிடம் இருந்து தங்களை மேல் தட்டில் நிறுத்திக் கொண்ட ஆரியர்கள், தமிழகத்திலும் அது ஆட்டிப் படைக்கும் சக்தியாக எப்படி உருவெடுத்தது ? தமிழர்கள் தங்களின் தொன்மையான சமயத்தின் அடையாளத்தை பெருமளவு இழந்து வைதிக மதமே தங்களது மதம் என கொள்ளும் நிலையை எவ்வாறு அடைந்தது ? காலமாற்றத்தில் அதிலிருந்து தமிழகம் தன்னை எப்படி விடுவித்துக் கொண்டது ? போன்ற பல கேள்விகளுக்கு இங்கு விடை கிடைக்கிறது.
வைதிக மதத்தோடு சைவ சித்தாந்தம் முரண்பட்ட நிலை காலப்போக்கில் வடமொழி எதிர்ப்பாகவும் விளைந்தது. வடமொழி எதிர்ப்பும் தமிழ் அர்ச்சனைக்கு ஆதரவான குரலும் அப்பொழுதே எழுந்து விட்டன. இன்று ஆலய வழிபாட்டில் நிகழ்ந்துள்ள மாற்றங்கள், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் நிலை, தமிழில் அர்ச்சனை போன்ற மாற்றங்கள் வைதிக மதம் தமிழ் மண்ணிற்கு அந்நிய மதம் தான் என்பதை நிச்சயப்படுத்துகிறது.
வேத காலத்திற்கு பிந்தைய சமூகம் நான்கு வர்ணாசிரமத்திற்கு உட்பட்டு மக்களை பிரித்து பாகுபாடு காட்டியது. அப்பொழுது அதை எதிர்க்கும் விதம் பல புதிய மதங்கள் தோன்றியது. அதில் முக்கியமானது சமணமும் பௌத்தமும் ஆகும்.
மதம் என்றாலே அங்கு கடவுள் இருந்துதானே ஆக வேண்டும் என்ற நம்பிக்கையை உடைப்பது போல் உள்ளது சமணமும், பௌத்தமும். இவர்கள் கடவுள் மறுப்பாளர்களாக இருப்பதை விட துன்பத்தில் இருக்கும் மனிதர்களை மீட்டெடுக்கும் முயற்சியை மட்டும் செய்து வந்ததிருக்கிறார்கள். 'மனிதனை இயக்குவது மனம்தான் ' என்கிற கோட்பாட்டில் இருக்கிறது பௌத்தம்.
பௌத்தம், காலத்தால் சமணத்திற்கு பின்பாக இருந்தாலும் பல தத்துவ நெறிகளில் ஒத்த கருத்துடையதாக இருக்கிறது. துறவறம், கொல்லமை இவைகள் இரு மதத்திற்கும் பொதுவாக இருக்கிறது. அது போல் மறுபிறப்பு சுழற்சியை இரு மதங்களும் நம்புகின்றனர். சமணத்தை தொடர்பவர்கள் அம்மதத்தின் பல அறநெறிகளை பின்பற்றுகின்றனர். மற்ற மதத்தில் இத்தனை அற கோட்பாடுகள் இருப்பதாக தெரியவில்லை. சமணம் அவ்வளவு ஒழுங்கமைக்கப்பட்ட மதமாக உள்ளது.
சமணம் பற்றிய உரையாடல்களில் இன்றும் மதுரையில் நடந்த சமணர் கழுவேற்றம் பற்றிய நிகழ்வை பேசாமல் இருக்க மாட்டோம். ஆனால் அது வெறும் கற்பனையே என ஆசிரியர் மறுத்துள்ளார். இந்த கொடுமையை பற்றி இதுவரை எந்த சமண இலக்கியமும் கூறவில்லை என குறிப்பிட்டுள்ளார். எந்த ஆதாரமும் இல்லாத ஒரு நிகழ்வை புணைந்து நம்ப வைக்கப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது.
துக்கம், துக்க காரணம், துக்க நிவாரணம், துக்க நிவாரண மார்க்கம் என்ற நான்கு கொள்கைகளை உடையது பௌத்தம். அதாவது மனிதன் பிறப்பிலிருந்து இறப்பு வரை துக்கத்தை மட்டுமே தொன்றுதொட்டு தொடர்வதாக குறிப்பிடுகிறது இம்மதம். இறுதியில் 'பிறவா நிலையை ' அடைவதே துக்க நிவாரணம் மார்க்கமாக கொள்கிறது. பௌத்தத்திற்கும் சைவத்திற்கும் உள்ள தொடர்பு நெருங்கிய உறவாக இருந்ததற்கு பல சான்றுகள் உள்ளது என்கிறார் ஆசிரியர். அய்யனார் வழிபாடு சமணத்திற்கும் பௌத்தத்திற்கும் உரியதாக இருக்கின்றன என்றும் கூறுகிறார்.
சமணத்திற்கும், பௌத்தத்திற்கும் ஒத்த மத கோட்பாடுகள் இருந்தாலும் அவர்களுக்குள்ளும் சர்ச்சைகள் இருந்துள்ளது. சமணத்தை கண்டித்து குண்டலகேசி எழுதப்பட்டது பௌத்தத்தை கண்டித்து நீலகேசி எழுதப்பட்டது. ஆனால் சைவமும், வைணவமும் இவ்விரு மதத்தின் வீழ்ச்சிக்கு வித்திட்டது வரலாறு. வீழ்ச்சிக்கு அக, புற காரணங்கள் பல இருந்தாலும் அவர்களது துறவு நெறி, நிர்வாணம் போன்றவை தமிழகத்தில் செல்வாக்கு பெறவில்லை என்பது தான் காரணமாக இருப்பதாக தொ. பரமசிவன் அவர்கள் கூறுகிறார்.
இன்றும் தமிழ்நாட்டில் வேரூன்றி இருக்கும் மதங்களில் கிருஸ்துவமும் இஸ்லாமும் மிக முக்கியமான மதங்கள் ஆகும். கிருஸ்துவ மத தோற்றம், போதனைகள், இயேசுவின் அற்புதங்கள் என வெகு சுவாரஸ்யமாக ஆரம்பித்தது கிருஸ்துவ மதம் பற்றிய அத்தியாயம். கிறிஸ்துவின் இறப்பு, கிருஸ்து இறந்த பின் அவருடைய சீடர்கள் கிறிஸ்துவின் போதனைகளை பரப்பத் தொடங்கிய கதை, பின் இந்தியா, தமிழ்நாடு வந்த கதை என வரலாற்றின் முக்கிய பகுதியை நமக்கு விரிவாக விளக்கியுள்ளார். ஐரோப்பியர்கள் மட்டுமின்றி டச்சு, பிரெஞ்சு, டேனிஷ்க்காரர்கள் தமிழகத்தின் ஒவ்வொரு கடற்கரை வாசல் வழியே வந்து சமய பிரச்சாரம் செய்து இருக்கின்றனர்.
தமிழ் சமூக அமைப்பை பற்றி ஆய்ந்த கால்டுவெல் இந்து மதத்தில் பிராமணர்கள் ஆதிக்கம் செலுத்துவதையும் பல சாதிகள் கீழ் நிலையில் வைக்கப்பட்டிருந்ததையும் கண்டார். கீழ்நிலை வைக்கப்பட்டவர்களை மதமாற்றம் செய்வது எளிது என்று புரிந்து கொண்டார். அதுவே அவர்களுக்கு மத பிரச்சாரத்திற்கு போதுமானதாக இருந்தது.
கிறிஸ்துவ மதங்களில் சாதியம் எந்த அளவு ஊடுருவி இருக்கிறது என்பதை வாசிக்கும் பொழுது 'மதம் ஒரு மிருகம் என்றால் சாதி ஒரு அரக்கன் ' என சொல்லலாம். கிறிஸ்தவர்கள் மத்தியில் தீண்டாமை இல்லாவிட்டாலும் வெளிப்படையாக சாதிய உணர்வு இருந்து கொண்டேதான் இருக்கிறது என்பது புலப்படுகிறது. எதிலிருந்தும் எதும் மீள முடியாது என்கிற உண்மையும் புரிகிறது.
நபிகள் நாயகம் தன்னை ஒரு இறை தூதராக முன்னிறுத்தி இஸ்லாம் மதத்தை தோற்றுவித்தார். மனிதனின் செயல்களுக்கு இறைவனை பொறுப்பாக்குவதில்லை இஸ்லாம். தங்கள் செயல்களுக்கு அம்மனிதர்களே பொறுப்பாவார்கள் என்பதை முக்கிய அம்சமாக இஸ்லாம் முன்னிறுத்துகிறது. இஸ்லாமில் சாதிகள் கிடையாது என்பது மேலும் ஒரு முக்கிய அம்சமாக இருக்கிறது. குடும்ப வாழ்க்கையை மிக விபரமாக விவரித்து இருப்பது குரான் மட்டுமே என்பது மேலும் ஒரு சிறப்பு.
தென்னகத்தில் குறிப்பாக கடலோரப் பகுதிகளில் அரேபியர்கள் வணிகத்தை முன்னிறுத்தியே இஸ்லாம் பரவியது. ஆனால் வடநாட்டில் இஸ்லாமிய ஆட்சி நிலை பெற்றது போல் தென்னாட்டில் நிலை பெறவில்லை. ஆட்சியை பெருமளவு ஆங்கிலேயருக்கு தாரை வார்த்துக் கொடுத்து உல்லாசமாக வாழவே நவாபுகள் விரும்பினர்.
கிறிஸ்துவ பாதிரியார்கள் இங்கு வந்து மதமாற்றம் செய்தது போல் இஸ்லாமியர்கள் பிரத்தியோகமாக பிரச்சாரம் எதுவும் செய்யவில்லை. பிற்காலத்தில் ஏற்பட்ட ஆட்சி அதிகாரத்தாலும், வணிக தொடர்பாலும் மட்டுமே மதமாற்றம் நேர்ந்தது.
இஸ்லாமியர்கள் ஆற்றிய தமிழ்ப்பணி இன்னும் சரியாக ஒழுங்குப் படுத்தவில்லை என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார். சீறாப்புராணம் எழுதிய உமறுப்புலவர் குணங்குடி மஸ்தான் சாகிபு போன்றவர்கள் குறிப்பிடத்தக்க இலக்கியப் பணியை ஆற்றி இருக்கிறார்கள். இஸ்லாமிய தமிழ் இலக்கியங்களில் பிற சமய காழ்ப்பையோ, அனைவரையும் மதம் மாற்ற செய்யும் சமய பிரச்சாரத்தையோ காண இயலாது. அவர்கள் இஸ்லாமிய போதனைகளை பரப்புவதே முக்கிய நோக்கமாக கொண்டிருந்தனர்.
பிரிவுகள் இல்லாத மதமே உலகில் கிடையாது போலிருக்கிறது. அனைத்து மதங்களிலும் இரு பிரிவுகளாவது இருக்கிறது. எதற்குமே ஒரு எதிர் நிலை இருந்துதானே ஆகவேண்டும் என்பதால் ஒன்றும் சொல்வதற்க்கில்லை.
பக்தி இலக்கியங்களும் தமிழும் ஒன்றை ஒன்று பிரிக்க முடியாததாக பார்க்கிறார் ஆசிரியர். அவை கடவுள் சார்ந்ததாக பார்க்காமல் மொழி, பண்பாடு சார்ந்ததாக பார்த்து இருப்பது சிறப்பு. இதன் மூலமே வரலாற்றை அறிய முடியும் என்பதையும் கட்டுரை மூலம் நமக்கு புரிய வைக்கிறார்.
தமிழ் இலக்கியத்தில் மதங்களின் பங்கு அலாதியாக இருந்திருக்கிறது. எதற்கும் எவரும் சளைத்ததில்லை என்பது போல் சமணம், பௌத்தம், கிறிஸ்துவம் என அனைத்து மதமும் இலக்கியத்திற்கு பங்களித்துள்ளது சிறப்பு. சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, வளையாபதி, யசோதர காவியம், நீலகேசி போன்ற இலக்கிய நூல்கள் சமணம் வழங்கிய கொடை ஆகும். மணிமேகலை, குண்டலகேசி போன்ற காப்பியங்கள் பௌத்தம் அளித்தது. வைதிக மதத்தை விமர்சனம் செய்தும், பௌத்தத்தை பிரசாரம் செய்யும் தொனியிலும் இக்காப்பியங்கள் இயற்றப்பட்டுள்ளது.
கிருஸ்துவத்தில், மதத்தை பரப்புவது நோக்கமாக இருந்தாலும் தமிழ் மொழியை கற்று அதற்கு தொண்டாற்றிய பாதிரியார்கள் பலர். தமிழ் இலக்கியத்திற்கு பல நூல்களை அளித்துள்ளது இம்மதம். 'தேம்பாவணி', திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் ' போன்றவை அதில் முக்கியமான நூல்களாகும். இந்தியாவிலேயே முதன்முதலில் தமிழ் மொழிக்கு என்றே அச்சு இயந்திரம் உருவாக்கப்பட்டது இங்கு தான் என்பது மேலும் சிறப்பான விஷயம். அது 'சீகன் பால்கு ' அவர்களால் தரங்கம்பாடியில் உருவாக்கப்பட்டது. மயிலை சீனி வேங்கடசாமி அவர்கள் எழுதிய 'கிறித்துவமும் தமிழும் ' நூலில் தமிழ் வளர்த்த 14 ஐரோப்பியர்களின் பற்றிய குறிப்புகளை இந்நூலில் முழுமையாக ஆசிரியர் வெளியிட்டுள்ளது தகவல் களஞ்சியம் எனலாம்.
இதை தொடர்ந்து அரசியல் நிலைப்பட்டில் தமிழின் வளர்ச்சியையும் விவரித்துள்ளார். அன்றைய திராவிட இயக்கத்தின் மூலவர்கள் தமிழ் மொழியின் மேல் பெரிதாக பற்றுள்ளவர்கள் இல்லை சிலரை சாடியுள்ளார் ஆசிரியர். பிராமணர் அல்லாதார் முன்னேற்றத்தை அவர்கள் மொழியோடும் பண்பாடோடும் இணைத்து பார்க்கவில்லை என்றாலும் தமிழ் பெருமை, அதன் வளம், தொன்மை பற்றி பேச ஆரம்பித்தன் விளைவு இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் வந்து முடிந்தது. சுதந்திரப் போராட்டத்தின் தாக்கமும் தமிழ் மொழியின் எழுச்சிக்கு வித்திட்டது எனலாம்.
144 பக்க நூலுக்கு நூலாசிரியர் 48 நூல்களை வாசித்து எழுதியுள்ளது மலைப்பாக உள்ளது. எந்த ஒரு தவறான தகவல்களையும் வாசிப்பவர்களுக்கு கடத்தி விடக்கூடாது என்கிற முனைப்பு அவரின் வாசிப்பின் வழி நாம் அறிந்து கொள்ள முடிகிறது. மேலும் பல அறிஞர்களின் கருத்துக்களையும் கட்டுரைகளுக்கு நடுவில் சேர்த்திருப்பது நமக்கு மேலும் புரிதலை தருகிறது. ஒரு நூலை வாசிக்க எடுத்து மேலும் ஐந்து நூல்களை வாசிக்க வைத்து விட்டார் ஆசிரியர். இந்நூலின் உள்ளடக்கம் நம் தேடலை மேலும் விரிவடைய வைக்கிறது.
இறைவன், உலகம், உயிர், மறுபிறப்பு பற்றி மதங்கள் என்ன சொல்கிறது என்பதை சிறு குறிப்புகளாக இறுதியில் கொடுத்திருப்பது மொத்த நூலின் synopsis போல இருந்தது.
மனிதர்கள் கடைபிடிக்கும் ஒழுக்க நெறி, நன்மை, தீமைகளை பொறுத்தே மதம் ஒரு சக்தியாக இருக்கிறதா, சாத்தானாக இருக்கிறதா என்ற உண்மை புலப்படும். நன்றி.
Comments
Post a Comment