நூல் : பகைநன்று
ஆசிரியர் : மால்கம்
பதிப்பகம் : பாரதி புத்தகாலையம்

'தெளிவிலார் நட்பின் பகைநன்று '

மனிதர்களின் மீதான வெறுப்போ, பகையோ எந்த ஒரு இலக்கிற்கும் உதவப் போவதில்லை. பகையுணர்ச்சி ஒரு மனிதனை தரம் தாழ வைக்கவோ, உளப்பிணியையோ தான் கொடுக்கும். பகைமை பாராட்டுவது தவறான உதாரணம் என்ற கருத்தியலை உடைத்து 'பகைநன்று' என்றும், அது அந்த சூழலையும், நியாயத்தையும் பொறுத்தது என்பதை எடுத்துரைக்கிறது இந்நாவல்.

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த எழுத்தாளர் மால்கமின் இயற்பெயர் காஜா குதுப்தீன். எழுத்துத் துறையில் 15 ஆண்டுகளுக்கு மேலாக பயணித்து, தற்போது நியூஸ் 7 தொலைக்காட்சியில் பணிபுரிந்து வருகிறார்.

அதிகார வர்க்கத்தின் ஆதிக்க மனநிலையின் கூர் அம்புகள், ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையில் வயது, தொழில், கல்வி என எந்த திசையிலிருந்தும் துளைத்தெடுக்க ஏவப்படுகிறது. அந்த காயம் சிலரை ஒடுங்க வைக்கிறது. ஆனால் பலருக்கு அது மனதில் கங்கு போல் கனற்றுக் கொண்டிருக்குகிறது. பல அவமானங்கள் பகையாக கொழுந்து விட, அதுவே அவர்களின் உந்து சக்தியாக மாறி சமூகத்தில் நிலைபெற உதவியாக இருக்கிறது. அப்படி ஒருவன் தான் 'மால்கம்'.

பள்ளியில், ஒரு ஆசிரியரால் ஏற்படும் அவமானம், அவனை கல்வியில் சிறக்க வைத்து ஒரு மருத்துவனாக நிலைநிறுத்துகிறது. முடிதிருத்தும் மாரியின் மகன் மால்கம்க்கு RTE act வழியாக ஒரு தனியார் பள்ளியில் இடம் கிடைக்கிறது. அங்கு முதல் நாளிலேயே அவனுக்கு ஏற்படும் அனுபவம் தான் கதையின் மையப்புள்ளி. படித்த ஆசிரியர்களின் சாதிய வன்மத்தை எடுத்துக்காட்டுகிறது இந்நூல். அரசாங்க சலுகையில் படிக்கும் மாணவனை கீழ்தரமாக நடத்தும் ஆசிரியரின் செயல் அதிர்ச்சியை தருகிறது. அதோடு அம்மாணவனுக்கு அது தவறான செயல் என்று புரியாமல், இயல்பாக செய்யும் மனநிலைக்கு கொண்டு வந்தது இச்சமூகத்தின் தவறாகும். சிறு வயதில் அவனுக்கு ஏற்படும் அவமானத்தை பகையாக மாற்றி அவனை ஒரு நல்ல நிலைக்கு கொண்டு வர நினைக்கும் மாஸ்டரின் மேல் மரியாதை வருகிறது.

நீட் தேர்வில் இந்தியாவிலேயே முதல் இடம் பிடிக்கும் மால்கம், அந்த கொண்டாட்டத்தில், தன்னை அவமானப்படுத்திய ஆசிரியரை கௌரவப் படுத்துவது போல் பழிவாங்கிய விதம், அந்த ஆசிரியரின் மனநிலையை நிலைகுலைய வைக்கிறது. அதன் பின் நடக்கும் இறுதி முடிவு பெரும் அதிர்ச்சியோடு முடிகிறது.

'இவன் படிச்சு என்ன கலெக்டர் ஆகவா போறான்.. பீ அள்ளத்தானே போகப் போகிறான்...'

என்பது ஆசிரியரின் தவறான அணுகுமுறை மட்டுமல்ல, தங்களுக்கு கீழ் ஒரு சமூகம் இருப்பது அவர்களுக்கு பெரும் போதையை தருகிறது. இறுதி வரை அதை மாற்றிக் கொள்ளும் மனநிலை அந்த ஆசிரியருக்கு இல்லாமல் போனது சோகத்தில் முடிகிறது.

ஒரு மாணவனின் வெற்றி ஒரு சமூகத்தின் வெற்றியாக கொண்டாட படும் பொழுது நமக்கும் கொண்டாட்ட மனநிலை வருகிறது.

Neet தேர்வை பற்றிய மாஸ்டர், மால்கம் உரையாடல் நியாயமாகப் படுகிறது.

நியாயத்தின் அடிப்படையில் மால்கமை மாஸ்டர் மெருகேற்றினாலும், பகை, பழிவாங்கல் போன்ற எண்ணங்கள் மாணவனிடம் பழக்கப்படுத்துவது நெருடலாக உள்ளது.

மால்கம், ஆசிரியர், மாஸ்டர், மாரி என சொற்ப்ப கதாபாத்திரங்கலோடும், மூன்றே காட்சிகளோடு எழுதப்பட்டுள்ள இந்நாவல் வாசிக்க எளிய மொழி நடையில் உள்ளது. நன்றி.

Comments