நூல் : ஒட்டகச்சிவிங்கியின் மொழி
ஆசிரியர்: சஞ்சயன் செல்வமாணிக்கம்
பேரன்பு கொண்ட மனிதர்கள் சூழ் உலகு இது. சக மனிதர்களின் மேல் கொண்ட அன்பு, நேசம், கோபம், அரவணைப்பு என எந்த உணர்வையும் மனிதன் வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறான். நாம் சந்திக்கும் அனைவரிடமும் நமக்கு ஒரு உணர்வுபூர்வமான அனுபவங்கள் கிடைக்கிறது. அந்த அனுபவங்களே நம்மை செம்மை படுத்துகின்றது. எந்த காலத்திலும் அந்த அனுபவங்களை நாம் அசைபோட விரும்புவோம். அப்படி தன் வாழ்வில் ஏற்பட்ட சில மறக்க முடியாத அனுபவங்களை தொகுப்பாக வெளியிட்டுள்ளார் சஞ்சயன் அவர்கள்.
புலம் பெயர்ந்த இலங்கை தமிழரான சஞ்சயன் கடந்து வந்த பாதைகள், மனிதர்கள், பண்பாடுகள், மொழிகள் என இத்தொகுப்பு முழுவதும் விரவிக் கிடக்கிறது. வெறும் கட்டுரைகளின் தொகுப்பாக மட்டும் இல்லாமல் உணர்வுகளின் தொகுப்பாக நம்மை வந்து அடைகிறது. இதில் வரும் சில மனிதர்களின் மனோபாவங்களை நாமும் கடந்து வந்திருப்போம். அவற்றை தொடர்பு படுத்திப் பார்க்க முடிகிறது.
தன்னுடைய இரண்டாவது தாயாக இருந்த 'எம்மி' யுடன் உண்டான வாழ்வை விவரிக்கும் கட்டுரை மனதை நெகிழ வைக்கிறது. அரசு பணியிலிருக்கும் பெற்றோரின் பணிச்சூழல் காரணமாக, கிடைத்த வரமாக எம்மி இருக்கிறார். குழந்தை பருவத்தில் இருந்து கூடவே இருக்கும் எம்மியை 'தாயினும் மேலான தாய்' எனக் கூறுவதில் இருந்து அவரது அன்பு எத்தகையது என்பது புரிகிறது. வயது முதிர்வின் காரணமாக அவரது இறப்பு ஒரு சுபநிகழ்வில் நடந்ததும், அதை எப்படி சமாளித்து, அவரது இறுதிச் சடங்கு நடந்தது என்பதையும் விவரிக்கிறது கட்டுரை. எம்மியின் மேல் உள்ள அன்பின் காரணமாக இந்நூலை அவருக்கு சமர்ப்பித்துள்ளார் சஞ்சயன்.
எம்மியின் அன்பை போன்று இல்லையென்றாலும், அதற்கு சளைத்தது இல்லை சஞ்சயன் பராமரித்த 94 வயது மூதாட்டியின் அன்பு. நோயின் கடுமை எப்படி இருந்தாலும் பேச்சில் நகைச்சுவையோடும், யாரையும் குற்றம் சுமத்தாத மனதும் கொண்டவள். தன் மூன்று குழந்தைகள் தன்னை கவனித்துக் கொள்ளவில்லை என்றாலும், அவர்களுடன் சுமூகமான உறவுடனும், சஞ்சயனையும் அவர்களில் ஒருவனாக பாவித்து அன்பு செய்தது நெகிழ்ச்சியான ஒன்று. சஞ்சயனின் உதவியை தன் சுற்றத்தாருக்கு பறைசாற்றி, அவர்களது நன்றியையும் சஞ்சயன் பெற வேண்டி அவர் செய்த ஒவ்வொரு விஷயமும் சஞ்சயனின் மனதில் நீங்காத இடம் பிடித்திருக்கிறது என்பது இக்கட்டுரையை வாசிக்கும் பொழுது புரிகிறது.
சஞ்சயனின் சிறு வயது காதல் அத்தியாயம் பாரமான இத்தொகுப்பை லேசாக்கிறது. காதல் என்ற நினைப்பில் செய்யும் சேட்டைகள் நம் அனைவரின் வாழ்விலும் நடந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. பள்ளி விடுமுறைகளில் மட்டுமே கிடைக்கும் புது நட்புகள், காலத்தின் போக்கில் மங்கி, பல வருடங்கள் கழித்து அந்த நட்புகள் மீண்டும் அறிமுகம் ஆகும் பொழுது கிடைக்கும் மகிழ்ச்சி அளவில்லாதது. அவை பசுமையான நினைவுகளும் கூட.
காதல் என்றதும் இவர்கள் நினைவிற்கு வரும் அளவு தொகுப்பின் இறுதிக் கட்டுரையில் வரும் தம்பதியரை நம் மனதில் பதிய வைத்துவிடுகிறார் ஆசிரியர். கட்டுரையில் வரும் வயதான தம்பதியை போல் நம் காதலும் இருக்க வேண்டும் என்ற ஏக்கத்தை நம்முள் படர விட்டிருக்கிறார். காதலுக்கு வயது இல்லை என்பதை உணர்த்தும் விதமாக இருக்கிறது அத்தம்பதியரின் நெருக்கம். ஏனோ நம் மனதிலும் பட்டாம்பூச்சியை சிறகடிக்க விட்டிருக்கிறார் ஆசிரியர்.
குற்றம் புரிந்த மனிதனை, மன்னித்து அன்பு செய்ய முடியுமா என்ற குடைச்சல் கொடுக்கும் கேள்வியுடன் நம்மை யோசிக்க வைக்கிறார் ஆசிரியர். தவறுகள் மன்னிக்கப்பட வேண்டியவை. செய்த தவறுக்கு ஒருவரை ஊதாசீனப்படுத்துவதும் தவறுதான். ஒரு மனிதனை நெறிப்படுத்த, ஊக்குவிக்க நாம் தோள் கொடுக்க வேண்டியது அவசியம். ஆசிரியர் 'தேற்றுதல் என்பது ஒரு கலை' என்கிறார். அதே போல் தான் மன்னிப்பும். அதற்கு சில உதாரணங்களோடு நமக்கு புரிய வைக்கிறார் ஆசிரியர்.
தொகுப்பின் ஊடே சில நூல்கள், திரைப்படங்களை பரிந்துரைக்கிறார் ஆசிரியர்.
மொத்த தொகுப்பும் ஒரு மோட்டிவேஷன் வகைமையை சேர்ந்த நூலாக இருக்கிறது. அன்பு மட்டுமே இவ்வுலகில் நிலையானது என்பதை பறைசாற்றுகிறது இந்நூல். நன்றி.
Comments
Post a Comment