நூல் : செந்நிலம் 
ஆசிரியர் : ஜெயராணி
செந்நிலம்..2025 ஆண்டுக்கான தமுஎகச விருது பெற்ற நூல். 25 ஆண்டுகள் பத்திரிகையாளராக பணிபுரிந்து வந்த ஜெயராணி அவர்களின் முதல் சிறுகதை தொகுப்பு. ஒன்பது கதைகள் கொண்ட இத்தொகுப்பில் சாதி அரசியல், பெண்ணியம், தீண்டாமை, புலம் பெயர் மக்களின் அல்லல்கள் என சமூகத்தில் நடக்கும் அவலங்களை தோலுரித்து காட்டப்பட்டுள்ளது. 
'காலங்காலமாகக் கட்டமைக்கப்பட்ட கள்ளத்தனத்தின் மீது கல்லெறியும் சிறு எத்தனிப்பு..உங்கள் மண்டையை அது உடைக்குமானால் அதற்கு நான் பொறுப்பல்ல' எனப் பொறுப்பைத் துறந்து கல்லெறிந்துள்ளார் ஜெயராணி. நிஜமாகவே அது நம் மண்டையை உடைத்ததா இல்லையா என நம்மை நாமே சுயபரிசோதனை செய்ய வைக்கிறது ஒவ்வொரு கதையும்.
அம்மாவின் பிரசவம்...ஆண் பிள்ளைகள் மேல் கொண்ட ஆசையில் பெண் பிள்ளைகளை ஊதாசீனப் படுத்தும் சமூகத்தில் வாழும் ஒரு குடும்பத்தின் கதை. அம்மா, மூன்று பெண் பிள்ளைகள் என்று கதை நகரும் இடத்தில் மனம் ஏனோ என் அம்மாவும், இரண்டு தங்கைகளும் நினைவிற்கு வந்தனர். வரிசையாக பெண் பிள்ளைகள் பிறந்தாலும் என் அப்பா கொஞ்சம் கூட வெறுப்பை காட்டாது மூன்றாவது தங்கையை அள்ளி அணைத்தது இன்றும் ஞாபகத்தில் உள்ளது. இக்கதையில் உள்ள அப்பாவும் அப்படி இருந்திருக்கலாம். கணவனின் அரவணைப்பு கிடைக்காமல், பிள்ளை பெற்றுப் போடும் மெஷின் போல் ஒரு பெண் வாழும் வாழ்க்கை வேதனையின் உச்சம். பிரசவ இரவு நேரம் அம்மாவின் அலறலை கேட்டு எழும் பிள்ளைகளின் பய உணர்வையும், அம்மாவின் இழப்பின் வலியையும்,  நமக்கும் கடத்தியுள்ளார் ஆசிரியர்.
சிறுவயதில் இருந்து வாங்க வேண்டும் என்று ஆசைப்பட்ட சைக்கிளை புதிதாக வாங்கி ஆசையோடு மகனுக்கு காட்ட ஊருக்கு செல்லும் போது இடையில் மகேசுவரனுக்கு நிகழ்ந்த கசப்பான சம்பவமே நூலின் தலைப்பைக் கொண்ட 'செந்நில' த்தின் கதை. ஊர் செல்லும் வழியில் கிடைக்கும் ஒரு பெரியவரின் அறிமுகம் கதையோட்டத்தை திசை திருப்பிவிடுகிறது. தன் புது சைக்கிளில் அவரை அமர்த்தி பேசிக்கொண்டே செல்லும் காட்சிகள், அன்பின் உரையாடல்கள் என ஒரு கவிதை போல் ஆரம்பித்தாலும் முடிவு அப்படியானதல்ல. அன்பின் நெருக்கம் எப்படி சாதித் தீண்டாமையில் முடிகிறது என்ற அதிர்ச்சிமிகு முடிவை நமக்குத் தருகிறது செந்நிலம்.
பேய், சாமி என எதுவென்றாலும் பெண்களின் உடலுக்குள் தான் செல்லுமா..? ஆண்கள் என்ன அதற்கு தீட்டா என்ற கேள்வியுடன் விரிகிறது 'செவ்வரளி பூச்சரம்'. ஊரில்  அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருக்க, அம்மனை குளிர்விக்க, ஊரில் உள்ள பெண்களுக்கு கொடுக்கும் தண்டனை மூடநம்பிக்கையின் உச்சம். பக்தி என்ற பெயரில், தங்கள் குடும்ப பெண்களை கொஞ்சம் கூட ஈவு இரக்கமின்றி நடத்தும் ஆண்களுக்கு யார் தண்டனை கொடுப்பது..? அதை செய்து முடிக்கிறாள் செண்பகம்.
தொகுப்பில் மிகவும் பிடித்த கிழவியாக 'மலையம்மாள்' இருக்கிறாள். 'சாமியாடி' யாக இருந்தவள் எப்படி 'பாயம்மா' வாகிறாள் என்பதை சொல்கிறது 'தாகம்' சிறுகதை. உயர் சாதி மக்கள் வாழும் பகுதிகளில் மட்டும் கொடுக்கப்படும் தண்ணீர் இணைப்பை தங்களை போன்ற ஒடுக்கப்பட்ட மக்கள் எப்படி பெறுவது எனப் பிரயத்தனப்பட்டு போராடும் பாட்டி மலையம்மாள் நம் மனதில் நிறைகிறாள். மேல் ஜாதி மக்களின் அடாவடிக்கு பயந்து கூனிகுறுகிக் கிடக்கும் மக்களுக்கு தைரியத்தின் எடுத்துக்காட்டாக விளங்குகிறாள் மலையம்மாள்.
"வெளிய போயிரலாம்... ஆனா வாழ முடியாது... " என்ற ஒரு வனக்கிழவியின் பரிதவிப்பை சொல்கிறது 'மூகம்மா காடு '. புலிகளின் சரணாலயம் வர இருப்பதால் காடுகளை விட்டு தொல்குடி மக்களை அரசாங்கம் எவ்வாறு விரட்டுகிறது என்பதை சொல்லும் துயர்மிகு கதை. 
நதிமூலம், ஆறாமவன், நெடும்புகழ் மாதேவி என்ற ஏனையக் கதைகளும் நமக்கு ஒரு பாடத்தை சொல்லிக் கொடுத்துவிட்டுச் செல்கிறது.
ஒவ்வொரு சிறுகதையும் ஒரு குறுநாவல் எனலாம். நூலாசிரியர் தான் சந்தித்த மனிதர்களைத் தான் கதைகளில் உலவ விட்டிருக்கிறார் என வாசிக்கும் பொழுதே தெரிகிறது. கதைக் களம், கதை மாந்தர்கள், அவர்களின் உணர்வுகள் என அனைத்தும் நம்மை கட்டிப்போடுகிறது. சமூகத்தில் நடக்கும் ஒவ்வொரு அநீதியையும், கேள்வி கேட்காமல் நாம் எப்படி கடந்து போகிறோம் என்ற குற்றவுணர்வையும் நம்மிடம் விதைக்கிறது. கதையின் விவரணைகள் கதையோடு நம்மை ஒட்ட வைக்கிறது.
எழுத்தாளர் ஜெயராணியின் கட்டுரைகளை போல் அவரின் சிறுகதைகளும் சமூக நோக்கத்தோடு எழுதப்பட்டிருப்பது சிறப்பு.

Comments
Post a Comment