நூல் : பாலைச்சுனை
ஆசிரியர் : தீபேஷ் கரிம்புங்கரை
தமிழாக்கம் : சுனில் லால் மஞ்சாலும்மூடு

' சொர்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா ' இந்த சினிமா பாடல் வரிகள்தான் இந்நூலை வாசித்து முடித்ததும் தோன்றியது.

அரபு நாடுகளுக்கு எந்த அனுமதியும், ஆவணமும் இல்லாமல் புலம் பெயர்ந்த இந்தியர்களின் வலி மிகுந்த துயரக் கதைகளின் தொகுப்பே 'பாலைச்சுனை'.

பெரும்பாலான மலையாளிகளின் கனவு தேசமான அரபு நாட்டிற்கு, தங்கள் குடும்ப தேவைக்காக பொருள் ஈட்ட சென்று, விசா இல்லாமல் தலைமைறைவாக வாழ்ந்து, இந்தியா வர இயலாமல் அடிமைகளாக சிக்கியும், மரணித்தும் போகும் மனிதர்களை தேடி உதவிய அமானுல்லா அவர்களின் முக்கிய பதிவாக இந்நூல் உள்ளது.

ஷார்ஜா இந்தியன் அசோசியேஷன் என்கிற சங்கத்தில், புலம்பெயர்ந்த இந்தியர்களுக்கு உதவிபுரியும் பணியில் தன்னார்வமாக தன்னை புகுத்திக் கொண்ட அமானுல்லா அனுபவ பகிர்வாக, நூல் ஆசிரியர்  தீபேஷ் கரிம்புங்கரரிடம் சொல்ல, அவர் எழுதியுள்ளார். தமிழில் சுனில் லால் மஞ்சாலும்மூடு மொழி பெயர்த்துள்ளார்.

புலம்பெயர்ந்த இந்தியர்களுக்கு உதவும் இந்த மனிதாபிமான செயலுக்கு முக்கிய காரணமாக தன்னுடைய தொலைந்த அண்ணனை குறிப்பிடுகிறார் ஆமானுல்லா. முதல் அத்தியாயமே தன் அண்ணன் பாலைவன மணலில் தொலைந்த கதையை சொல்கிறார். அண்ணனை தேடி சென்ற இடத்தில் நண்பர்களின் உதவியால் வேலை கிடைத்து தன் வாழ்வை நிலைநிறுத்திய பின் சமூகம் சார்ந்த சிந்தனை அவரை இந்த பணிக்கு உந்தியது எனப் புரிகிறது.

சொந்த நாட்டில் வறுமையில் வாழ்ந்து, வெளிநாட்டு வேலை என்கிற மோகத்தில், கடன் பெற்று அயல்நாடு செல்லும் ஒவ்வொரு மனிதனும் சந்திக்கும் இன்னல்களை சொல்லில் அடக்க இயலாது. அதிலும் பெண்களின் நிலை வேதனையின் உச்சம். செவிலியர் பணி, ஸ்டோர் பணியாளர் என்கிற வார்த்தைகளை நம்பி வரும் பெண்களை பாலியல் தொழிலாளியாக மாற்றி, அவர்களின் பாஸ்போர்டை திரும்ப தராமல் அவர்களின் வாழ்வை சீரழிக்கப்படுவதை வாசிக்கும் பொழுது மனம் பதறுகிறது. சுனைனா, ஜெசி, மும்தாஜ் போன்ற பெண்களின் கதை கண்ணீரை வரவழைக்கின்றன. இறுதியில் ஆமானுல்லாவின் உதவியால் அவர்கள் இந்தியா வந்தது மகிழ்வை தருகிறது.

ஒரு மனிதனின் மரணத்தை விட கொடியது தொலைந்து போவது. அவர் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்கிற கேள்வியோடு வாழ்நாள் முழுதும் பதற்றத்தோடு இருப்பது கொடுமை. அப்படிப்பட்ட கொடுமையை அனுபவித்த ஸ்ரீ தேவி டீச்சர், இறுதியில்  தன் கணவன் பாஸ்கரனை மீட்பது நிம்மதியை தருகிறது. ஆனால் ஒரு தாயின் தேடுதலில் அந்த நிம்மதி கிடைக்கவில்லை. தன் மகன் பிரசாத் உயிருடன் இருப்பதாக நினைத்து வாழ்ந்து கொண்டிருந்தவளின் கையில் பிணமாகத் தான் கிடைத்தான் பிரசாத்.

இங்கு நாம் ஒன்றை கவனிக்க வேண்டும். மேற்கத்திய நாடுகள் முதல் பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளான பிலிப்பைன்ஸ், மலேசியா நாடுகள் கூட தங்கள் நாட்டு குடிமகன் வெளிநாட்டில் இறந்து போனால் அதை விசாரித்து உறவினர்களுக்கு ஒப்படைக்க தீவிர முயற்சி எடுக்கிறார்கள். ஆனால் இந்திய தூதரகம் இதுபோன்ற எந்த முயற்சியும் எடுக்காமல் இருப்பது அதிர்ச்சி அளிக்கும் தகவல். தன்னார்வ தொண்டர்கள் மட்டுமே இந்த பணியை செய்கிறார்கள்.

வளைகுடா நாடுகளில் விபத்தில் இறப்பவர்களுக்கு இழப்பீடு வழங்குவதிலும் நிறைய முறைகேடுகள் நடக்கிறது. இறந்தவர்களின் இழப்பீடு தொகையை ஏஜென்ட்கள் உரியவர்களிடம் அளிக்காமல் சுருட்டிகொள்வது ஒத்துக்கொள்ள முடியவில்லை. ஆனாலும் இது தான் உண்மை என்பது வேதனைக்குறிய விஷயம்.

ஊரில் ஒரு குடும்பம், அரபு தேசத்தில் ஒரு குடும்பம் என்ற நிலையில் தான் அங்கு பணியில் இருக்கும் ஆண்கள் இருக்கிறார்கள். இவை சட்டவிரோதமாக நடப்பத்தால் அந்நாட்டில் பிறக்கும் குழந்தைகள் பெரும்பாலும் அனாதையாகவே வாழ்கிறார்கள். பள்ளிக்கூடம், கல்வி போன்றவை அவர்கள் வாழ்வில் கேள்விக்குறியாகவே உள்ளது.

ஆரம்பம் முதல் இறுதி வரை ஒரு திரில்லர் திரைப்படம் பார்ப்பது போல் நம்மை ஒரு பதட்டத்தில் வைத்திருக்கிறது ஆசிரியரின் எழுத்து.

ஆமானுல்லா என்ற அரபு வார்த்தைக்கு ' மீட்பவர்' என்று பொருள். தன் உடல்நலம் பற்றிய அக்கறையையும் தாண்டி, பல பேரின் வாழ்வை மீட்டெடுத்த அமானுல்லாவை எவரும் தன் வாழ்நாள் முழுக்க மறக்க மாட்டார்கள் என நம்புகிறேன். எல்லோருக்கும் இவரை போல் ஒரு மீட்பர் கிடைப்பார் என்ற சாத்தியம் இல்லை என்பதை ஞாபகத்தில் வைத்து சட்டவிரோதமாகவோ, முறையான அனுமதி இல்லாமலும் இனி யாரும் வெளிநாடு செல்ல வேண்டாம் என்கிற பாடத்தையும் இந்நூல் முகத்தில் அறைவது போல் சொல்லி இருக்கிறது. நன்றி.

Comments