நூல் : குமாரத்தி
ஆசிரியர் : நரன்
பதிப்பகம் : சால்ட்
விலை  : 444

எழுத்தாளர் நரன் தன் எழுத்து பயணத்தை கவிதைகளில் ஆரம்பித்து, கேசம், சரீரம்  சிறுகதை தொகுப்புகளையும், பராரி, வேட்டை நாய்கள் போன்ற நாவல்களையும் வெளியிட்டுள்ளார். அந்த வரிசையில் இப்பொழுது  'குமாரத்தி'.

இவரது 'கேசம்' சிறுகதை தொகுப்பை வாசித்து ஈர்க்கப்பட்டு அவரது மற்ற நூல்களையும் வாசிக்கும் ஆர்வம் ஏற்பட்டு வாங்கிய நூல் 'குமாரத்தி'. சிறப்பான நூலின் முகப்பு அட்டை படமும், வடிவமைப்பும் வாசிக்கும் ஆர்வத்தை மேலும் தூண்டியது.

மூன்று கன்னியாஸ்திரிகளின் அறிமுகத்துடன் ஆரம்பமாகிறது நாவல்.  கடற்கரை  மனிதர்கள், கிருஸ்துவ குடும்பங்கள், வீடுகளில் தொங்கும் ஸ்டார்கள் என கதைகளம் நம்மை ஒரு தேவாலையத்தை நோக்கி நகர்த்துகிறது. இயேசுவை தெய்வமாக ஜெபித்து வந்த நமக்கு இயேசுவை ஒரு மனிதனாக காட்டி சைக்கிள் திருடவும், கருப்பனுக்கு பூஜை போடவும், பீடி குடிக்கவும் வைத்துள்ளார். இறுதியில் ஒரு பெண்ணிடம் பாவ மன்னிப்பும் கேட்க வைத்து விடுகிறார்.

இயேசு உருவத்தில் இருக்கும் கெம்புராஜின் மீது அமலி சிஸ்டருக்கு இருக்கும் பக்தி கலந்த ஈர்ப்பையும், நுணுக்கமான உணர்வையும் தவறாக சித்தரிக்காத வகையில் எழுத்தில் வெளிப்படுத்தி இருப்பது அருமை. சலேத்துடன் அவனுக்கு ஏற்படும் நெருக்கம் அமலியை பாதித்தாலும், தன்னுடைய கன்னியாஸ்திரி நிலையில் இருந்து அவர்களை ஆசீர்வதிப்பது  அவரின் முதிர்ச்சியை காட்டியுள்ளது.

கதையில்  ஞானப்பூ, தேவமலர் வரும் பகுதி கண்டிப்பாக நம் மனதில் பதபதப்பும், கண்ணீரையும் ஒரு சேர வரவைக்கும். தன் அம்மாவிற்காக புதிய தந்தையை ஏற்றுக்கொண்ட முதிர்ச்சியான பெண் பிள்ளைகளாக வருகிறார்கள். அம்மாவின் திருமணம் முடிந்த இரவு தங்களை தேடி வரும் அவர்களது நிஜ தந்தையை சந்திக்கும் காட்சி விவரிக்க முடியாத உணர்வை தருகிறது. சாவி துவாரம் வழி தன் தந்தையை பார்ப்பதும், அவரை  'அப்பா' என்று அழைக்க முடியாமல், அவருடன் கட்டிக்கொண்டு தூங்க முடியாமல், அவர் கொடுத்த பொருளை அம்மாவிற்கு தெரியாமல் மறைக்க நினைப்பதும் என  30 பக்கம் கொண்ட அவர்களது அத்தியாயம் உணர்ச்சிக் கொந்தளிப்பை நமக்கு ஏற்படுத்தி விடுகிறது.

சலேத்தின் திருமணக் கதை, ஜார்ஜின் சந்தன மரக்கதை என நாவல் முழுவதும் குட்டிக் கதைகள் ஏராளம். இறுதியில் வரும் ஜோதியின் காதல் கதை மேலும் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம். பெண்களுக்கு நடக்கும் குடும்ப வன்முறை, ஆணவ படுகொலை போன்ற அநீதிகள் அவளின் வாழ்க்கையை எப்படி புரட்டிப் போடுகிறது என்பதை கதையில் மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர்.

நாவல் முழுவதும்,  soft natured மனிதர்களாக உலவ விட்டிருக்கிறார் ஆசிரியர். நமக்கு வாசிக்கும் பொழுதும் பாரமாக இருக்கும் சில காட்சிகளில்  acceptance மனநிலைக்கு தள்ளுகிறது. யாரும் யாரையும் விட்டுக் கொடுக்காத அன்பு சூல் இவ்வுலகு என்பதை ஒவ்வொரு கதாபாத்திரமும் சொல்கிறது.

அமலியும், கெம்பும் சந்திக்கும் இடங்களில் மட்டும், அமலி கெம்புவை இயேசுவாக நினைத்து 'ர்' போட்டு விளிப்பது போலவும், மற்ற இடங்களில் அவனை  'ன்' போட்டு விளிப்பதிலும் ஆசிரியர் வித்தியாசப்படுத்தி இருப்பது புதுமை. நாவலை கையில் எடுத்தால் ஒரே மூச்சில் வாசித்து விட முடிகிற அளவு flow writing.நன்றி.

Comments