நூல் : பிரார்த்தனையைப் பின்தொடர்ந்துஆசிரியர் : சுந்தர் சருக்கை
தமிழில் : சீனிவாச ராமாநுஜம்
பதிப்பகம் : எதிர் வெளியீடு
விலை : Rs. 599
பேராசிரியர் சுந்தர் சருக்கை கர்நாடகாவில் உள்ள மணிப்பால் பல்கலைக்கழகத்தின் தத்துவம் மற்றும் மனிதநேய மையத்தின் இயக்குநராக உள்ளார். தத்துவவியலாளர். தமிழில் இவரது, ‘இரண்டு தந்தையர்’, ‘சிறுவர்களுக்கான தத்துவம்’, ‘விரிசல் கண்ணாடி’ ஆகிய நூல்கள் மொழிபெயர்ப்பாக வெளியாகியிருக்கின்றன.
தமிழில் மண்ட்டோ படைப்புகளை மொழிபெயர்த்த சீனிவாச ராமாநுஜம் அவர்கள் இந்நூலை மொழிபெயர்த்துள்ளார்.
நாம் கடவுளிடம் செய்யும் பிரார்த்தனைகள் எங்கு செல்கிறது ?
அது கடவுளிடம் சென்றடைகிறதா ?
கடவுள் நம் பிரார்த்தனைகளை செவிசாய்க்கவில்லை என்றால் கடவுளுக்கு மொழி தெரியாதா ?
அப்பொழுது மொழியும் அவசியமற்றத்தா ?
மொழியும் எண்களும் ஒன்றா ?
இப்படி பல கேள்விகளோடு செல்கிறது 'பிரார்த்தனையைப் பின்தொடர்ந்து' நாவல். பத்து வயது சிறுமி கல்பனாவை தேடுவதில் ஆரம்பமாகிறது கதை. மூன்று நாட்களாக காணாமல் போனவள் வீட்டுக்கு திரும்பி வருகிறாள். ஆனால் அவள் யாரிடமும் பேசாமல் மௌனமாகி விடுகிறாள். இது அவளுடைய குடும்பம், பள்ளி, ஊர் மக்கள் என அனைவருக்கும் அதிர்ச்சியளிக்கிறது. அவள் எங்கு போனாள், 3 நாட்கள் என்ன நடந்தது என தெரியாமல் அனைவரையும் குழப்பத்தில் தள்ளியது. ஆனால் அவளுடைய அஜ்ஜி ( பாட்டி) க்கு மட்டும் பேத்தி எங்கு போனாள் என்பது தெரிகிறது. கடவுள் பற்றி தனக்கும் பேத்திக்கும் நடந்த தர்க்க உரையாடல் தான் அதற்கு காரணம் என்பதை யாரிடமும் சொல்லாமல் மறைக்கிறாள் பாட்டி. பாட்டியின் பிரார்த்தனைகளை கடவுள் கேட்கிறாரா என்ற பேத்தியின் கேள்விக்கு, " நீ பின்தொடர்ந்து சென்று பார்த்துவிட்டு வா " என்ற சொல்லை கேட்டு தொலைந்து போனவள்தான் கல்பனா. பின்தொடர்ந்து போனவள் கடவுளை கண்டடைந்தாளா ? இல்லை வேறு எதும் அதிர்ச்சி தரும் அனுபவத்தை கொடுத்ததா என்பது மீதி கதை.
கல்பனா, தீக்ஷா மற்றும் அவர்களது தோழி குமாரி என்ற மூன்று சிறுமிகளின் கேள்விகளைக் கொண்டு கதை நகர்கிறது. பத்து வயது சிறுமிகளுக்கு உண்டான ஐயங்களாகத் தான் அவர்கள் கேட்கிறார்கள். ஆனால் அந்த கேள்விகளில் உள்ள ஆழம் பதில் சொல்ல முடியாத அளவு தத்துவார்த்தமாக அமைந்து விடுகிறது.
குழந்தைகளின் உலகை அவ்வளவு அழகாக விவரித்துள்ளது இந்த நாவல். குழந்தைகளின் கேள்விகளை அதிகப்பிரசங்கித் தனமானது என்று சொல்லி அவர்களின் கற்பனை திறனை முடக்கும் பெரியவர்களுக்கான பாடமாக இந்நூல் உள்ளது.
இசை, மொழி, வார்த்தை, மௌனம் என ஒவ்வொன்றையும் தொடர்பு படுத்தி பேசும் இசை ஆசிரியர் கங்கம்மா ஒலியின் வழி நம்மை உலகை கவனிக்க வைக்கிறார். கடவுளுக்கு துதி பாடல்கள் எதற்கு ? அப்பாடல் கடவுளை புகழ்ந்துவதற்கு மட்டுமா இல்லை கடவுளை அழைக்க வேண்டியுமா ? என சிறுமிகளுடன் சேர்ந்து அவரும் குழம்பிப்போகிறார்.
பள்ளியில் சிறுமிகள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல தடுமாறும் வாத்தியார் உபாத்யா, மகள்களின் அனைத்து செயல்களுக்கும் துணையாக இருக்கும் கல்பனா, தீக்ஷா வின் அம்மா, அப்பா என வெகு சொற்ப்பமான கதாபாத்திரங்களை கொண்டு இந்நாவலை எழுதி இருப்பது அசாத்தியம். கல்பனா, தீக்ஷா வின் அக்கா தங்கை பாசம் கதை முழுவதும் வியாபித்து நம்மை மிகவும் நெகிழவைக்கிறது.
நம் வாயில் இருந்து வார்த்தைகள் வெளிப்படுத்துவது மூளை தான் என்று முடிவு செய்து ' மூளை' க்கு ஒரு கோயில் கட்ட சிறுமிகள் எடுக்கும் பிரயத்தனங்கள், மற்ற கடவுள்கள், கோயில்களை பகடி செய்வது போல் இருந்தது.
இறுதியில் அத்தனை கேள்விகளுக்கும் அந்த சிறுமிகளுக்கு பதில் கிடைத்ததா என்பது தெரியாது. ஆனால் கதையின் அதிர்ச்சிகரமான முடிவின் வழி நமக்கு தெரிந்துவிடுகிறது.
மிக தத்துவார்த்தமாகவும் ஆனால் எளிமையாக புரியும் படி இருக்கிறது இந்நாவல். கண்டிப்பாக ஒரு புதிய வாசிப்பனுபவத்தை பெற முடியும். நன்றி.

Comments
Post a Comment