நூல் : சனாதனம் பற்றி சனாதனிகள்
நூலாசிரியர் : அருணன்
பதிப்பகம் :வசந்தம் வெளியீட்டகம்
விலை : Rs. 50
'மனுவை எதிர்க்காமல் சமூகத்தில் சமதர்மத்தை நிலைநாட்ட முடியாது, போராட்டமே வெற்றிக்கான வழி" என்ற கருத்தைக் கொண்ட பேராசிரியர் அருணன் அவர்களின் நூல் 'சனாதனம் பற்றி சனாதனிகள்'.
பேராசிரியர் அருணன் அவர்கள் முற்போக்கு எழுத்தாளர், மார்க்சிய சிந்தனையாளர், கல்வியாளர், இலக்கியவாதி, சமூக ஆய்வாளர், தத்துவவாதி என பலமுகம் கொண்ட ஆளுமை. இவர் சிவகங்கை மாவட்டத்தில் பிறந்தவர். இவர் சமூகம், வரலாறு, மார்க்சியம், மற்றும் அரசியல் சார்ந்து பல்வேறு நூல்களை எழுதியுள்ளார்.
"சனாதனம் என்பது இந்து மதம் அல்ல..
சனாதனிகள் என்போர் இந்துக்கள் அல்ல.."
என்பதை ஆணி அடிப்பது போல் இந்நூலில் வலியுறுத்துகிறார் ஆசிரியர்.
வேதகாலம் முதல் மூட நம்பிக்கைகளிலும், ஆணாதிக்க மனோபவத்திலும் ஊறித் திளைத்து வரும் சனாதனிகளைப் பற்றி விரிவாக இவர் எழுதிய 'காலந்தோறும் பிராமணியம்' என்ற நூல் எட்டு பாகங்களாக ஏற்கனவே வெளிவந்திருக்கிறது. அது ஒரு வரலாற்று ஆய்வு நூலாக கருதப்படுகிறது.
ஆனால் இந்நூல் அவ்வளவு விரிவாக சொல்லவில்லை என்றாலும், சனாதனத்தை பின்பற்றும் இன்றைய அரசியல் சூழலையும், பிஜேபி அரசியல்வாதிகளின் நிலைப்பாட்டையும், சனாதனிகளின் உண்மை முகங்களையும் கொஞ்சமும் சமரசம் செய்யாமல் விமர்சித்து இருக்கிறது.
இந்நூல் சனாதனத்தின் பெயரில் பெண்களுக்கு எதிரான அநீதிகளை பற்றி அதிகம் பேசியுள்ளது. பெண்களுக்கு இழைக்கும் கொடுமைகளை நாம் பட்டியலிட்டால் மலைத்து போகும் அளவு இருக்கிறது.
தேவதாசி முறை, உடன்கட்டை ஏறுதல், பால்ய விவாகம், பெண் கல்வி மறுப்பு, கணவனை இழந்த பெண்கள் மொட்டை அடிப்பது என்று பெண்களை தங்கள் கீழ் உள்ள அடிமை போல் நடத்துவது தான் பிராமண ஆண்களின் சனாதன தர்மமாக பார்க்கப் பட்டது. இவைகளை எதிர்த்த பாரதியார், அவரது பல கட்டுரைகளில் பெண் விடுதலை பற்றிய கருத்துக்களை வெளியிட்டுள்ளார். பிராமண சமூகத்தில் பிறந்திருந்தாலும், அச்சமூக பெண்களின் நிலையை கண்டு பொங்கி எழுந்தவர் பாரதி. பெண் கல்வி மற்றும் பெண் மறுமணத்திற்கு ஆதரவு தெரிவித்தவர்.
பெண் மறுமணத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில் இருந்த காந்தியடிகளை மனம் மாற வைத்தவை பாரதியின் கட்டுரைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் பெண்களை கலங்கப்படுத்தும் 'தேவதாசி முறைக்கு' எதிராக போர்க்குரல் எழுப்பி போராடியவர்களின் வரலாறை சொல்கிறது இந்நூல். டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்களும், ராமாமிர்தம் அம்மையார் அவர்களும் இதில் முக்கியமானவர்கள். அந்த போராட்டத்தின் காரணமாக 1926 ல் பெண்களும் தேர்தலில் நிற்கலாம் என்ற சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது. பல சட்டப் போராட்டத்திற்கு பின் கிடைத்த தேவதாசி ஒழிப்பை எதிர்த்தவர்களும் உண்டு. அவர்களில் முதன்மையானவர்கள் பிராமண சட்ட நிபுணர்கள், வைதீகர்கள், அரசியல் தலைவர்கள் போன்றோர் ஆவர். இதுவே அவர்களின் கீழ்த்தரமான நோக்கத்தை புரிய வைக்கிறது. தேவதாசி ஒழிப்பை மத, சாஸ்திர விரோதமாக கருதி சட்டசபையில் எதிர்ப்பு குரல் வெளியிட்டனர். ஆனால் அனைத்தையும் உடைத்து தேவதாசி முறை ஒழிந்தது வரலாறு.
வேத காலத்தில் இருந்து வர்ணாசிரம அடுக்குகளின் படி மனிதர்களை பிரித்து, கீழ்நிலை மக்களை ஒடுக்கிய சனாதனிகள் இன்றும் அதே எண்ணத்தில் உருவாக்கிய திட்டம் தான் ஒன்றிய அரசின் 'விஸ்வகர்மா திட்டம் '. தான் பிறந்த சமூகத்தின் குலத் தொழிலை மட்டுமே ஒருவன் செய்ய வேண்டும் என்கிற திணிப்பை அரசே கடனுதவி செய்து மக்களை ஊக்கப்படுத்திகிறது. 18 வயதில் கல்லூரி படிப்பிற்கு செல்லாமல், குலத் தொழில் கற்க இது போன்ற திட்டங்களை ஆவண செய்யும் அரசை எதிர்க்க வேண்டிய அவசியம் நாம் அனைவருக்கும் உண்டு. உயர் சாதியினர் மட்டுமே கல்வி கற்கவும், நவீன தொழில்நுட்பங்களை அறியவும், உயர் பதவிகளை அடையவும் வாய்ப்பை அரசு ஏற்படுத்துவது கண்கூடாக தெரிகிறது. இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களில் உயர்சாதி பிராமணிய மாணவர்களுக்கே அனுமதி கிடைக்கிறது என்பது ஒரு சாரரை மட்டும் இந்த அரசு தூக்கி நிறுத்துகிறது என்பது புலப்படுகிறது. எந்தத் திட்டமாக இருந்தாலும், அது சமூகநீதியை, சமத்துவத்தை நிலைநாட்டுகின்ற நோக்கத்துடன் இருக்க வேண்டும். அப்படி இல்லாத இத்திட்டம் தேவையற்ற ஆணியாகவே கருத வேண்டும்.
இந்நூலில் மிக சுவாரசியமான அத்தியாயமாக 'கல்கி கதைகளில் சனாதன எதிர்ப்பு ' இருக்கிறது. சனாதன கோட்பாடுக்கு எதிராக கல்கி எழுதிய பல கதைகளை எடுத்துக்காட்டாக கூறுகிறார் ஆசிரியர். இதில் ஆங்கிலேய அரசாங்கம் 1930 ல் இயற்றிய 'சாரதா சட்டம் ' பற்றி அறிந்து கொள்ள முடிந்தது. 14 வயதுக்கு கீழ் உள்ள பெண்களை திருமணம் செய்யக்கூடாது என்கிறது இச்சட்டம். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த சனாதனிகள் தங்கள் திருமணங்களை பாண்டிச்சேரியில் நடத்தியுள்ளனர். பாண்டிச்சேரி பிரெஞ்சு அரசாங்கம் என்பதால் இந்த சட்டம் அங்கு பொருந்தாது என்பது அவர்களுக்கு சாதகமாக இருந்திருக்கிறது. இதை மையமாக வைத்து கல்கி அவர்கள் 'ஸ்ரீகாந்தன் புனர்ஜன்மம்' என்ற கதை எழுதியுள்ளார். பால்ய கால விவாகம் பற்றிய கல்கியின் எதிர் கருத்துகள் அவரது கதைகளில் பிரதிபலித்துள்ளது. அதேபோல் பிராமணிய பெண்களின் கல்வி அறிவு எந்த அளவில் உள்ளது என்பதை 'கடிதமும் கண்ணீரும் ' கதை உணர்த்திகிறது. இது போல் பல பிராமணிய எதிர்ப்பு கதைகள் படைத்தவர் கல்கி. தன் சொந்த ஜாதி அட்டூழியங்களை தன் கதைகளில் கிழித்து தொங்க விட்டது இன்றைய சனாதனிகளுக்கு தெரியுமா என்ற கேள்வி நமக்கு எழுகிறது.
சனாதனக் கருத்தியலை மூடி மறைத்து, அதையே முற்போக்காக காட்டிக் கொண்டு மக்களை ஏமாற்றும் சனாதனிகளை தூக்கி சாப்பிட்டவர் 'மகா பெரியவர்' என்று அழைக்கப்படும் 'சங்கராசாரியார்' அவர்கள். இவர்களை போல் அவர் பூசி மொழுகும் வேலை எல்லாம் செய்யவில்லை. முகத்தில் அடித்தார் போல் சனாதனத்திற்கு விளக்கம் கொடுப்பார்.
"பிறப்பைக் குறித்தே ஜாதி, குணத்தை குறித்ததல்ல '
என்று சொன்னவர், ' மூன்று வயதில் இருந்தே சௌனம் ( குடுமி வைத்தல் ), உபநயனம் போன்றவை ஜாதியின் அடிப்படையில் செய்யப் படுகிறது...' என்பதை எடுத்துக்காட்டாக குறிப்பிடுகிறார். அதுவும் நம் பார்வையில் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் அனைத்தையும் சனாதன தர்மமாக பார்க்கச் சொல்லும் 'மகா பெரியவர்' ரின் அதே பார்வை தான் இன்றைய RRS அமைப்பினருக்கும், பிஜேபி பிரஜைகளுக்கும் இருக்கிறது என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். நம் ஆளுநர் ரவி போன்றவர்கள் இது போன்ற உண்மைகளை அடிக்கடி வாய் தவறி கொட்டி விடுவதையும் நாம் பார்க்கிறோம்.
நூலின் பின் இணைப்பாக 'காந்தி இந்து எனில் கோட்சே யார் ? என்ற தலைப்பில் எழுதிய அத்தியாயத்தில், இன்றைய ஒன்றிய அரசு காந்தியின் உண்மை பிம்பத்தை தகர்க்கும் வேலையை செய்வதாக கூறியுள்ளார். அகிம்சை, மத நல்லிணக்கம், தீண்டாமை என்ற வார்த்தைகளுக்கு அர்த்தம் கொடுத்த காந்திஜியை, அவரது பிறந்தநாளை தெருக்கூட்டும் நாளாக நமது பிரதமர் மக்களிடையே கொண்டு செல்வது மிக கேவலமான செய்யலாக இருக்கிறது.
நாட்டில் நடந்த பல தீண்டாமை கொடுமைகள், ஆலைய நுழைவுக்கு எதிர்ப்பு என சனாதனிகள் போட்ட ஆட்டத்திற்கு எதிராக இருந்தவர் காந்தி என்பதை சகிக்க முடியாத காரணமும் ஒன்றாக இருக்கிறது.
காந்தி இந்து என்றால் கோட்சே யார் என்ற கேள்வியை முன்வைத்து விளக்கமளிக்கிறார் ஆசிரியர். கோட்சே இந்து என்றாலும் அவன் சனாதனி, அதான் அவன் இந்து - முஸ்லீம் ஒற்றுமையை சீர்குலைக்க காந்தியை கொன்றான் என்ற வாதத்தை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். அதான் உண்மை. பொய் புரட்டுகளில் திளைத்திருப்பவர்களுக்கு உண்மை கசக்கத்தான் செய்யும். அதுவே வன்மம் ஆகி காந்தியை இன்றைய இளம் தலைமுறையினர் முன் தரம் தாழ்த்த இப்படி ஒரு தூய்மை திட்டத்தை ஒன்றிய அரசு செய்திருக்கிறது என்பது புரிகிறது.
மனுதர்மம் என்ற பெயரில் பெண்ணடிமைத்தனமும், வர்ணாசிரம பிரிவினையையும் எந்த வித கூச்சமும் இன்றி இன்று வரை தொடர நினைக்கிறார்கள் சனாதனிகள். சனாதனத்தை இந்து மதத்தோடு இணைத்து அவர்கள் பொது இத்துக்களை நம்ப வைக்கும் தந்திரங்களை முறியடிக்க வேண்டிய நிலையில் இன்று நாடு உள்ளது என்பது வேதனையைக் கொடுக்கிறது. மக்களின் மத நம்பிக்கையும், சனாதன கருத்தியலும் வேறு வேறு என்பதை எடுத்துரைக்கும் காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பிரிவினை அரசியலை வேரறுக்கும் முக்கிய காலகட்டத்தில் நாம் இருப்பதை இந்த நூல் உணர்த்துகிறது.
எந்த காலகட்டத்திலும் சனாதனிகளின் கருத்தியல் மாறப் போவதில்லை என்பதையும் இந்நூல் மூலம் அறிய முடிகிறது. தங்களை மனித இனத்தின் தலைமையாக நினைத்து ஊறிக்கிடக்கும் இவர்களை மாற்ற முடியாது. ஆனால் இவர்கள் ஆதரவு தரும் ஆளும் ஒன்றிய அரசை நம்மால் மாற்ற முடியும் என்பதை ஒவ்வொருவரும் ஆழமாக புரிந்து கொள்ள வேண்டும். அதற்கான முதல் அடியாக இந்நூல் உள்ளது.நன்றி.
Comments
Post a Comment